Showing posts with label எங்கே பிராமணன். Show all posts
Showing posts with label எங்கே பிராமணன். Show all posts

September 28, 2010

எண்ணற்ற பொக்கிஷங்கள் (சோ-வின் எங்கே பிராமணனிலிருந்து தொகுக்கப்பட்டது )

காலகாலமாக நாம் போற்றி வரும் புராண இதிஹாசங்கள், வேத மந்திரங்கள், உபநிஷதுக்கள் இவற்றுள் நமக்கு தெரிந்தவை சில. தெரியாதவை கணக்கற்றவை. ரிக், யஜூர், அத்ர்வன, சாம வேதங்களாக இன்றைக்கு நான்கு வேத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நம் மதம் வழங்கி வருகிறது. ஆனால் வேதமோ மொத்தம் நான்கு மட்டுமல்ல. கணக்கிலடங்காதவை. எண்ண எண்ண குறையாதவை. எத்தனை வேதங்கள் என்று கண்டுணர முடியாதவை. இறைவனைப் போல் முடிவற்றவை. சாமான்யனின் புரிதலுக்கும் புலனறிவுக்கும் அப்பாற்பட்டவை.

"அனந்தாவை வேதானாம்" என்று வேதமே குறிப்பிடுகிறது. இதில் நான்கே நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். வேதங்களை ரிஷிகள் உணர்ந்தனர். ஞானிகளால் "உணரப்பட்டவை", கற்றுக்கொடுக்கப்பட்டவை அல்ல. அதனாலேயே இம்மந்திரங்களை ஓதுவது மட்டுமே சிறந்தது - குரு மந்திரம் ஓதும் பொழுது அதனை கேட்டே தெளிவுற்று மாணாக்கன் ஓதினான். வேத மந்திரங்களை எழுதி கற்பித்தல் முறையாக கருதப்படவில்லை. ஒலி நீட்சி , i.e. குறில் நெடில் முதலியவை மிகுந்த கவனத்துடன் ஓதவேண்டும் என்பதால், தானாக எழுதி படித்தலை விட குருவின் மேற்பார்வையின் கீழ் ஓதுதலே சரியென உணர்ந்து அவ்வழியே பின்பற்றப்பட்டது. வேதங்களை சரிவர கற்றுணர கிட்டத்தட்ட பனிரெண்டு வருட காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்காலத்தில் நாம் வேதமந்திரங்களை அல்லது வேதத்தின் ஒரு பகுதியான ருத்ரம் சமகம் முதிலிய மந்திரங்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து, வீட்டில் மந்திர ஓலியை நிரம்பச் செய்கிறோம். இது மிகவும் உன்னதமானது என்று கூறிவிட முடியாது என்கிறார் சோ. மந்திரங்களை சரியாக பயின்ற ஒருவர் நேரடியாக ஓதுவதே மிக்க நலன் விளைவிக்கக் கூடியது. மேலும் வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் மற்ற சப்தங்கள் ஒடுங்கி இருத்தல் சிறப்பு. காலத்திற்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொண்டு விட்டாலும், இவ்வழக்கத்தை ஒப்புக்கொண்டு விட்டாலும், இவ்வழி பின்பற்றினால் பயனோ பலனோ முழுமை பெறுவதில்லை.


பரத்வாஜ மஹரிஷிக்கு ப்ரம்மன் முன்னூறு வருட கெடு கொடுத்து வேதம் முழுவதையும் அறிந்து வரச் சொல்கிறான். முன்னூறு வருடம் முடிந்த பின், இந்திரன் அவர் முன் தோன்ற, பரத்வாஜ முனிவரோ "இன்னும் நூறு வருடம் கொடுத்தாலும் அதை வேதத்தை உணரும் பொருட்டே செலவிடுவேன். தெரிந்து கொள்ள வேண்டியதோ மிக அதிகம்" என்கிறார். அங்குள்ள சில மலைகளை சுட்டிக்காண்பித்து அவற்றை வேதம் என்று உருவகப்படுத்தினால் 'நீங்கள் தெரிந்து கொண்டதோ இவ்வளவே' என்று ஒரு பிடி மண் அளந்து காட்டுகிறான். வேதத்தை முழுவதுமாய் தெரிந்து கொள்வது இயலாத காரியம். அவை முடிவற்றவை கணகற்றவை என்று இந்திரன் சொன்னது புராணக் கதை.

தொலைந்த பொக்கிஷங்கள் பலவற்றில் திவ்ய ப்ரந்தமும் ஒன்று. வெவ்வேறு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப்ரபந்தம் முதலில் கிடைக்காமலே இருந்தது. நாதமுனிவர் என்பவரே, தொலைந்த பிரபந்தங்களை மக்களுக்கு சேர்பிக்க மனம் கொண்டு அவற்றில் சிலவற்றை தேடி நம்மிடம் கொணர்ந்தார். அவையே நாலாயிரம் திவ்யப்ரபந்தமாக வழங்கப்படுகிறது. தமிழில் ஆழ்வார்கள் பலர் தமக்கு தெரிந்த வேதத்தை முன்னிறுத்தி அதனையொட்டி பாடல்கள் புனைந்துள்ளனர். நம்மாழ்வாரின் பல பாடல்கள் வேதங்களின் சாராம்சத்தை விளக்குகிறது. அவர் எழுதிய திருவாய்மொழியை ஆதாரமாக வைத்தே இராமானுஜர் வைணவ விளக்கங்களையும் நியதிகளை வகுத்ததாக அபிப்ராயப்படுகின்றனர்.

September 20, 2010

சத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து தொகுக்கப்பட்டது)

ஒவ்வொரு சிந்தனையுமே அலைளை எழுப்ப வல்லது. சிந்தனை மட்டுமன்றி செயல், வார்த்தைகள் என அனைத்திற்கும் அலைவடிவம் உண்டு. அது சுற்றுப்புறத்தை பாதிக்கின்றது.

ஆதிஷங்கரர் மண்டல மிஸ்ரரைத் தேடி வருகிறார். மண்டல மிஸ்ரர் சிறந்த கர்ம யோகி. அவர் வீட்டிற்கு வழிகேட்டு வரும் ஆதிஷங்கரரை "எந்த வீட்டில் கிளிகள் "ஸ்வதப்ரமாணம் பரத ப்ரமாணம்" பொன்ற விஷயங்களை அலசுகின்றதோ அதுவே அவர் வீடு என்று காண்க" என்று வழிகாட்டுகின்றனர் மக்கள்.

{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (இதனைப் பற்றி இன்னும் விளக்கம் தெரிந்தவர்கள் விளாக்கலாம் அல்லது வலைப்பதிவு சுட்டி இருந்தால் இடலாம். நன்றி) }

அதாவது அங்குள்ள கிளிகள் கூட மேதாவிலாசத்துடன் விளங்குகிறது. பெரிய தத்துவங்களை ஆராய்கிறது. ஏனென்றால், அங்கு பேசப்படும் பேச்சும், எண்ண ஒலி அலைகளும் உயர்வான விஷயத்தை ஊக்குவிப்பதாய் அமைகிறது. இதன் காரணத்தை யொட்டியே நல்லதை கேட்டு பேசி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகிறது. வீட்டில் தொலைககாட்சி பார்க்கலாம். அதே நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தி நல்லவற்றை பேசி படிப்பது உத்தமம். உபன்யாசம் கேட்பது சிறந்தது. அங்கு சொல்லப்படும் கதை நம் மனதில் சாதகமான அலைகளை எழுப்பவல்லது. தற்கால மனிதனின் குணநிலைக்கேற்ப பாகவதர்களும் கற்பனையை, ஸ்லோகங்களை, சாஹித்தியத்தை, பாடல்களை ஊடே சேர்த்து சுவையாக உபன்யாசம் செய்கின்றனர். நடுநடுவே ஆங்கிலம் கலந்து ஜனரஞ்சகம் ஆக்கப்படுகிறது. கலை இன்னும் அழியப்படாமல் நிறைய இடங்களில் தற்காலத்திற்கேற்ப ஒப்பனையுடன் தொடரப்பட்டுதான் வருகிறாது. ஆனாலும் இன்று நமக்கெல்லாம் இவற்றை கேட்பதற்கு நேரம் ஒழிவதில்லை. ஒதுக்குவதில்லை. சொற்பொழிவின் ஊடே சில நேரங்களில் நம் சந்தேகங்களுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ கூட தீர்வு கிடைக்கலாம்.

இது போன்ற கலைகளை அழியவிடாமல் வளரவிட வேண்டும். என்னைப் பொருத்த வரை கோவில்களில் கூட உபன்யாசங்கள் குறைந்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், தொலைக்காட்சியில் காலை / மாலை வேளைகளில் சில சானல்கள் உபயாச சொற்பொழிவுகளை ஒளிபரப்புகின்றனர். ஆன்மீகம் / பஜனை / சமய வழிபாடுகள் இவற்றை மட்டுமே ஒளிபரப்பும் சானல்களும் உண்டு. அவ்வப்பொழுது கண்டு கேட்டு பயன் பெறலாம்.

ஸ்த் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

December 12, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (உதங்க மஹரிஷியின் கதை! - ஜாதிகள் இல்லையடி பாப்பா)

பசி என்று வந்தால் பத்தும் பறந்தல்லவா போகும். ஜீவனின் உயிர் தாங்க, தகுந்த நேரத்தில் யார் உணவளிக்கிறார்களோ அவர்களே அங்கு சாக்ஷாத் பிரத்யக்ஷ தெய்வம் ருபம் அல்லவோ! அதைப்போன்று உரிய நேரத்தில், உணவளிக்கும் ஒருவனின் குலமோ கோத்திரமோ, புறத்தோற்றமோ பசித்தவனுக்கு ஒரு பொருட்டல்ல. ஒரு அழமான உண்மையை வெளிப்படுத்தும் கதை ஒன்றை சோ பகிர்ந்து கொண்டார்.

உதங்கர் எனும் ரிஷி, க்ருஷ்ணனிடம் 'நீர் அருந்த வேண்டும் போதெல்லாம் உடனே நீர் கிடைக்கும்படி வரம் அருள வேண்டும்' என்று வேண்டிக்கொள்கிறார். வேறொரு சமயம், நீர் அருந்தும் தேவை ஏற்படுகிறது. நீர் வேண்டும் என்று நினைத்த மாத்திரம், அருவெறுக்கத்தக்க சண்டாளன் உருகொண்டு, மிக அசுத்தமான தோல்பை ஒன்றில் நீர் கொண்டு வந்தவனை புறம்தள்ளி நொந்துக்கொள்கிறார். "ஆஹா எனக்கு நீர் இப்படிப்பட்ட அசுத்தமானவனிடம் இருந்தா வேண்டியது, இதற்கு நான் தாகம் தணிக்காமலே இருந்து விடுகிறேன்", என்று நீர் அருந்த மறுத்துவிடுகிறார். ஆனால் அங்கு நடந்தது என்ன? சண்டாளன் உருகொண்டு வந்தவன் இந்திரன். கொண்டு வந்த நீரோ மனிதர்களுக்கு கிட்டாத அரிய அம்ருதம். உதங்க ரிஷி மனப்பக்குவம் அடையவில்லை என்று எடுத்துக்காட்ட வேறு சாட்சியம் வேண்டுமா? எவன் ஒருவன், தோற்றத்திற்கு அப்பாற்பட்ட உண்மையை உணர மறுக்கிறானோ அவன் எவ்வாறு பக்குவம் அடைந்தவனாவான்? கிட்டத்தட்ட இதே கதை தான் ஆதி-ஷங்கரருக்கு ஈசன் வேறுபட்ட சாதி ஒருத்தனின் உரு தாங்கி படிப்பித்தக் கதையும்.