September 02, 2009

நீங்களும் நானும் ஏன் வலை பின்னிக்கொள்கிறோம்?



இரண்டு தலைமுறைக்கு முன்னோக்கிச் சென்றால் 'பிரபல்யம்' என்பது "விலையுயர்ந்த" சொல். அதனைப் பெற பல தியாகங்கள், தடாலடிகள் செய்யப்பட்டன. வியர்வை சிந்தப்பட்டது. அப்படி கிடைத்த பிரபல்யம் அன்றைய தரத்திற்கு ஏற்றதாய் இருந்தது. இன்றைக்கோ "அதிவேக" உலகத்தில், எல்லாவற்றிற்கும் மின்வேகத்தில் ஒப்புதல் கிடைத்துவிடுகிறது. அதிலும் கூட Quality vs quantity என்றாகி, தரம் குறைந்து வச-வச என எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

எழுத்தாளன் ஆக பாடுபட்டு பகல் இரவு முழித்து நீள காவியங்கள் எழுதிய காலங்கள் போய்விட்டன. (எழுதினாலும் எத்தனை பேர் இன்று படிக்கிறார்கள்?! இரண்டே பத்திகள் நீளமாய் எழுதினாலே படிக்க நேரம் இருப்பதில்லை.) பெரிய பத்திரிகையில், ஒருவன் பெயர் வெளிவராத வரை, தேர்ந்த எழுத்தாளானாய் அவனை உலகம் ஒப்புக்கொண்டதில்லை.(இன்றைக்கும் இந்நிலை தொடர்ந்தாலும் "எது பெரிய பத்திரிகை" என்னும் கண்ணோட்டம் சற்றே மாறுபட்டுவிட்டது) கணினி அறிமுகமாகாத காலம் வரை, ஒரு கல்கி, ஒரு சுஜாதா என, ஆங்காங்கே நல்-முத்துக்கள் தோன்றியவண்ணம் இருந்தன.

இன்றோ 'கம்பன் வீட்டுக் கட்டுத் தரி'யாக பெரிய எழுத்தாளர்களின் படைப்புக்களை படித்தவர்களின் கைகளும் துடியாய் துடித்து ஆளுக்கொரு கீ-போர்ட்-டுடன் 'காலையில் பல் துலக்கியது' முதல் 'தூங்கப்போகும் போது பாடிய ஆராரோ' பாடல் வரை எழுதிக் குவிக்கிறோம். இரண்டு வினாடிக்கு ஒரு முறை யாராவது முதுகில் 'ஷொட்டு' கொடுத்து பாராட்டியிருக்கிறார்களா என ஆவல் மீறிடுகிறது.

எழுத்திற்கு பைசா வசூலாகாத இணைய தளத்தில், சீரியலை தியாகம் செய்து இல்லத்தரசிகளும், இரவு தூங்குவதற்கு முன், கணினியைக் கொஞ்சி, அதில் தன் எழுத்தை பதித்த பின்பே படுக்கச் செல்லும் எழுத்துப் பிரியர்களும், ஆபீஸ் வேலைக்கு நடுவில் மேனேஜருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பின்னூட்டத்தை நோட்டமிடும் ஆர்வலர்களும் ஏன் வந்து போகின்றனர்?

"என் உளறல்கள்", "கிறுக்கல்கள், "இது கவிதை அல்ல", "கவுஜ", "கவிதை-மாதிரி" என்றெல்லாம் தலைப்பிட்டு நம் எண்ணங்களை போலி அடக்கத்துடன் பவனி வரச் செய்கிறோம். கவிதை இல்லைன்னா ஏன் பதிக்கிறோம்? உளறல் என்றால் ஏன் பத்து பேர் முன்பு தயங்காமல் உளறுகிறோம்? தமிழ் தெலுங்கு ஆங்கிலம் ஜெர்மன் உட்பட அனைத்து இந்திய அல்லது வேற்று மொழிகளிலும், இணையத்தின் செய்தி தளங்களிலும் பேசப்பட்ட செய்தியை எதற்காக மீண்டும் ஒரு முறை நம் கைவண்ணத்தில் பதிக்கிறோம்?

எழுதுவதை விடுங்கள் . வேறு சில கேள்விகளைப் பார்ப்போம் ஏன் கலைகள் கற்க முயல்கிறோம்? ஏன் காதலிக்கிறோம்? ஏன் பகைமை பாராட்டுகிறோம்? ஏன் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்? ஏன் உடமைகளைத் தனதாக்கிக் கொள்கிறோம்? இப்படி பல 'ஏன்'கள் இருந்தாலும்,

அடிப்படை காரணம் ஒன்று தான். Quenching of desires/wants.

மனவியல் நிபுணரான ஏப்ரஹாம் மாஸ்லோவின் தத்துவம் படிப்படியாக மனிதனின் தேவைகளை வகைப் படுத்துகிறது.

முதலில் உடல் ரீதியான அடிப்படைத் தேவைகள். உண்ண உணவு-நீர், உடுக்க உடை, இருக்க இடம், புணர்ச்சி முதலியவை. இவை பூர்த்தியடையாத பொழுது, அடுத்த தேவைக்கு மனிதன் செல்வதில்லை.

அடுத்து அவனின் தேவை, பாதுகாப்பு. இதில் எல்லாவிதமான பாதுகாப்பும் அடங்கும். உடல்ரீதியாக பிற உயிரினிங்களிடமிருந்து, சக மனிதனிடமிருந்து, மிருகம், இயற்கை முதலான எல்லாவற்றின் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பு தேவை. பின் மனரீதியாக, உறவுகளின் அன்பு வளைய பாதுகாப்பு, உத்தியோகத்தின் பாதுகாப்பு.

அதன் பின் அவனது தேவை அன்பு, புரிதல். சுற்றத்தின் அங்கீகாரம். சமூகத்தின் ஒத்துழைப்பு முதலியன.

கடைசியாய் வருவது அஹங்கார திருப்தி. இப்பொழுது அவன் வெல்ல முற்படுகிறான். சாதிக்க விழைகிறான். புகழுக்கு ஏங்குகிறான். முதன்மை நிலைத் தேவைகள் பூர்த்தியடையாத பொழுது, அடுத்த நிலைக்கு மனிதன் பொதுவாய் முயலுவதில்லை.

சாதாரணமாக பொழுது போக்கிற்காக, ஒரு communicationக்காக எழுதும் மனிதர்கள், தங்கள் மன உணர்ச்சிகளை வெளிக் கொணரவே எழுதுகிறார்கள். ஆழ் மன எண்ணங்கள் சில வக்ரமானவை. சில வித்தியாசமானவை. பல வினோதமானவை. எழுத்தாளனின் மன-நிலையைப் பொறுத்து அவை வடிவம் பெறுகிறது. அவனுக்கு புகழ் சிறுகச் சேரும் பட்சத்தில் உணர்வுகளைப் பகிரும் முதல் நிலையைத் தாண்டி பதப்படாத அவன் மனத்தில், 'நான் உசத்தி/மேதை' என்ற எண்ணம் மேலோங்க, கடை நிலையான "அஹ்ங்கார திருப்தி" க்கு விழைகிறான். அவன் எழுத்து வடிவமும் படிப்படியாய் மாறுகிறது.

அதன் பின் அவன் "அகத்தின் பெருமைக்காக" எழுதத் துவங்குகிறான்.

இவையெல்லாம் தாண்டி பிரதிபலன் எதிர்பார்க்காமல் எழுதுவோர் சிலரும் உண்டு. நல்ல விஷயங்களை நல்லனவற்றை பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலால் எழுதுவோர்கள். அவர்கள் மனோ தத்துவப்படி, கடைநிலையான "ego-satisfaction"-த் தாண்டி, "தன்னை அறிதல்" என்ற பவ்ய நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ளும் படியில் மெல்ல தவழ்பவர்கள் ஆவார்கள். இவர்களின் எழுத்து மட்டுமின்றி செயல்கள் பலவும் "அங்கீகரத்தை" எதிர்பார்த்து நிற்பதில்லை.

இந்நிலை அடையும் வரை அடிப்படை தேவைகள் நிரம்ப பெற்றிருக்கும் பலரின் "ஏன்" களுக்கும் ஒரே விடை தான் - "அங்கீகாரம்".

August 31, 2009

காதலியாள் தூங்குகிறாள்...காலையில் மலருங்கள்




மிருதுவாய்
மெல்லிய இழைகளால் கோக்கப்பட்டிருக்கும்.
அதன் கனத்தில் தொங்குவது
மெல்லுணர்வுகளைத் தொட்டுச் செல்லும் யதார்த்தங்கள்.

குழந்தையின் மாசற்ற சருமம் போல்
மென்மையாய்..
இளசாய்...
அல்லது
பதினாறு வயது பருவத்தின் பரிசுத்த அழகுடன்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு பம்மி நிற்கும்.

கருத்துக் கற்பனையைத் தாங்கி நிற்கும் பருத்த நீர்குமிழியை
வார்த்தைப் பற்களால் உடைத்து விடாது
அடர்ந்த மௌனத்தால் அஞ்சலி செலுத்தலாம்
கண்ணீர் துளிகளால் கனம் சேர்க்கலாம்
அல்லது
புன்னகை மலர் தூவலாம்

மெதுவாய்...
சத்தமின்றி சுவடுகள் பதிக்கப்படுகின்றன
உதிர்க்கும் ஒரு மாத்திரையும்
படைப்பின் ஆழத்தை..
மோனத்தை..
பதம் பார்க்குமோ என பயந்து!

August 17, 2009

Pablo Neruda`s - Saddest poem - சோகத்தின் வரிகள் [மொழிபெயர்ப்புக் கவிதை]

Pablo Neruda-வின் இந்தக் கவிதை என் மனதை மிக அதிகமாய் பாதித்தது. பிசைந்து எடுத்த நெகிழ்வை, வலியை, வேதனையை தமிழில் மொழியாக்கும் சிறு பிரயத்தனத்தின் மூலம் சற்றே குறைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். மறுபடி மறுபடி நினைத்ததாலோ என்னவோ மொழிபெயர்த்து முடித்த பிறகும், வலிமட்டும் எஞ்சியது. இல்லை, இல்லை இன்னும் அதிகமாய் மிஞ்சியது.


இனி என்னைப் பாதித்த அந்தக் கவிதை உங்களுடன்...



சோகத்தின் வரிகள்


சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

இப்படிக் கூடத் துவங்கலாம்..

"வான்முழுதும் நட்சத்திரங்கள்
நீலமாய்,
தூரமாய்,
நடுங்கும் நட்சத்திரங்கள்"

காற்றின் ஓம்காரம் வானெங்கும் எதிரொலிக்கும் இரவு.
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

நான் அவளை நேசித்தேன்.
சில நேரங்களில் அவளும் கூட என்னை.

இது போன்ற இரவுகளில்,
எல்லையற்று விரியும்
வானக் குடையின் கீழ்
அவளை அணைத்து முத்தமிட்டிருக்கும்
எல்லையற்ற கணங்கள்..

அவள் என்னை நேசித்தாள்.
சில நேரங்களில் நானும் கூட அவளை.
ஜீவனற்று பெரிதாய் விரிந்திருக்கும் அந்தக் கண்களை
என்னால் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?



அவள் எனதில்லை என்ற எண்ணம்.
அவளைத் தொலைத்து விட்ட உணர்வு..
அதனால் தான்..
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

இரவுகளின் அடர்த்தி
அவளின் இல்லாமையால், இன்னும்கூட அடர்கிறது.
பனித்துளிகள் புல்லில் படர்வதைப் போல்..
கவித்துளிகள் இன்றென் நெஞ்செங்கும்.

இருத்திக்கொள்ள முடியாத காதலாய் இருந்தால் தான் என்ன?
தொலைந்த காதலின் ஊடே தொலையாத உணர்வுகள்...
நட்சத்திரங்களைத் தாலாட்டும் இவ்விரவின் மடியில்
தன்னந்தனியாய் நான் மட்டும்.

தூரத்தில் பாடலொன்று பட்டுத் தெறிக்கிறது.
தூரத்தில்..
ஆன்மாவை அவளிடமே விட்டுவிட்டு ஒற்றையாய் நான்.

கண்கள் அவள் அருகாமையை நாடத் துடிக்கிறது
நெஞ்சம் அவளைத் தேடிக் களைக்கிறது
இருப்பினும்..
அவள் என்னோடு இல்லை.

இதே இரவு..
இரவுப் பனியில் குளித்த இதே மரங்கள்...
நாங்கள் மட்டும் 'நாங்களை'த் தொலைத்து.

காதல் துறந்த பின்னும் கூட
காற்றில் கலக்காத காதல் உணர்வுகள்..
என் குரல்
காற்றின் தோளேறி அவள்
காதுகளைத் தேடியது.

அவள் வேறொருவனுடையவள்.
என் முத்தங்களில் தோய்ந்த அவள்..
அவள் மெல்லுடல்
அவள் குரல்
அவள் விரிந்த கண்கள்....

அவளுக்கான காதல் இறந்தேவிட்டிருப்பினும்..
அவளைக் காதலிக்கிறேன்.
காதலின் ஆயுள் சிறிது
அதன் மயக்கத்தின் நீளம் மட்டும் நீண்டுகொண்டே...

அவள் அருகாமையை உணர்ந்த இது போன்ற ஒரு இரவால்,
ஆன்மா தொலைக்கப்பட்டிருக்கிறது.

இது அவளால் எனக்குண்டாகும் கடைசி வலி என்றபோதும்...
இது அவளுக்கான என் கடைசிக் கவிதை என்றபோதும்...



மூலம்:

SADDEST POEM

Pablo Neruda.

I can write the saddest poem of all tonight.

Write, for instance: "The night is full of stars,
and the stars, blue, shiver in the distance."

The night wind whirls in the sky and sings.

I can write the saddest poem of all tonight.
I loved her, and sometimes she loved me too.

On nights like this, I held her in my arms.
I kissed her so many times under the infinite sky.

She loved me, sometimes I loved her.
How could I not have loved her large, still eyes?

I can write the saddest poem of all tonight.
To think I don't have her. To feel that I've lost her.

To hear the immense night, more immense without her.
And the poem falls to the soul as dew to grass.

What does it matter that my love couldn't keep her.
The night is full of stars and she is not with me.

That's all. Far away, someone sings. Far away.
My soul is lost without her.

As if to bring her near, my eyes search for her.
My heart searches for her and she is not with me.

The same night that whitens the same trees.
We, we who were, we are the same no longer.

I no longer love her, true, but how much I loved her.
My voice searched the wind to touch her ear.

Someone else's. She will be someone else's. As she once
belonged to my kisses.
Her voice, her light body. Her infinite eyes.

I no longer love her, true, but perhaps I love her.
Love is so short and oblivion so long.

Because on nights like this I held her in my arms,
my soul is lost without her.

Although this may be the last pain she causes me,
and this may be the last poem I write for her.

July 30, 2009

இக்ஷிணி தேவதைகள் சொல்லும் "இந்த நாள் இனிய நாள்"

வாக்கு-பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது 'co-incidence' ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் ஏற்பட்ட்டு விட்டால் அவன் மஹான் அல்ல. பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டு.

Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும்। அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும்। இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் வீட்டில் பாட்டிகள், பெரியவர்கள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள். இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம் நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும்। நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்.

"ஒழிந்து போ, சனியனே" போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது. பத்துத் தொலைகாட்சித் தொடர்களில் எட்டு தொடர்கள் அசுபமாக பேசுவதை அல்லது உச்சகட்ட விரோதம் தொனிக்கும் வார்தைகளை உமிழ்வதைத் தான் பொழுது போக்காக்கி நமக்கு வழங்குகின்றன. இப்படிப்பட்ட சொற்களை அதிகம் கேட்பதால், அதைச் சுற்றி அல்லது அதனைச் சார்ந்தே நம் எண்ண ஓட்டமும் நினைப்பும் அமைந்து விடுகிறது. நம்மைச் சுற்றி "aura" குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். இதைத் தான் "தீயதை பார்க்கவும், பேசவும், கேட்கவும்" கூடாது என்று குரங்கு நமக்கு உணர்த்துகிறது.

இஷிணி தேவதைகள் போன்ற personfications கேலிக்குறியதாகவே கருதினாலும், விஞ்ஞான்ம் கூறும் கருத்தையொத்து "we become what we (think/utter/aspire)" நடைபேறும் சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதால், நடத்தையும், பேச்சும், செயலும் மட்டும் அல்ல எண்ணமும் நல்லனவாக அமைவது அவசியம். வீடுகளில் சுபவார்த்தைகள் தொனிக்கச் செய்ய ஸ்லோகங்களை ஒலிக்கச் செய்கிறோம். ஐந்து வேளை தொழுகை நடத்துகிறோம. இறைவனை பிரார்த்திக்கிறோம். பத்தில் ஒரு வேண்டுதல் உலக நலன் கருதியும், பிறருக்காகவும் எண்ணங்கள் சிந்தப்படுகின்றன. அந்த எண்ண அலைகள் "postive vibrations" உண்டு பண்ணக்கூடியவை.

இன்றைக்கும் என்றைக்கும் இனிய நாளாக அமைவது நம் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது. அதை வலுவாக்குவதற்குச் சாதகமான சுற்றுப்புற சூழலை நாமே உருவாக்கிக்கொள்ள வெண்டும்.

May 10, 2009

சோ-வின் எங்கே பிராமணன் - (உடலும் உடையும்)


சோ-வின் 'எங்கே பிராமணன்' எனும் தொடரில் அவர்கள் விவாதிக்கும் கருத்துக்கள் உபநிஷத்துக்கள் வேதங்களையொட்டி அமைந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். தொலைக்காட்சி தொடர் என்றாலே விருப்பமில்லாது இருந்த நான், நல்ல கருத்துக்களுக்கு செவி சாய்ப்போமே என்ற எண்ணத்தில் பார்க்கத்துவங்கினேன்.

பல அறிய தகவல்கள், கதைகள் பறிமாறியிருக்கிறார் சோ அவர்கள். சமயம் சார்ந்த விஷயங்களை விட ஆன்மீக விஷயங்களை அதிக ஆவலுடன் கவனித்து வருகிறேன். அவற்றுள் என்னைக் கவர்ந்த சில கருத்துக்களை விவாதங்களை எழுத்தாய் பத்திரப்படுத்தி வைக்க ஆவலின் பேரில், என்னுடைய சில பதிவுகள்.

"எங்கே பிராமணன்" என்றவுடனேயே நாம் ஜாதியை முதலில் மனத்தில் நிறுத்திவிடுகிறோம். பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணீயத்தை ஏற்றுக்கொண்டவன் அல்ல. 'பிரம்மம்' என்பது பரம்பொருளைக் குறிக்கும் சொல். பரப்பிரம்மத்தை குறிக்கும் சொல். எவன் ஒருவன் பிரம்மத்தின் தியானத்தில் ஈடுபடுகிறானோ அவனே பிரம்மணீயத்தைத் தழுவியவன். பிரம்மணீயம் என்பது ஜாதியல்ல. அது ஒரு "நிலை". இறையானுபவத்தில் ஈடுபடும் எவரும் அந்த நிலைக்கு தங்களை கொண்டு செல்ல பிரயத்தனப்படுபவர்கள் ஆவார்கள். அதனால் இத்தொடரில் கூறப்படும் செய்திகள், தகவல்கள் கருத்துக்களை ஜாதி நினைவுகளற்று இறை நினைவுடன் கேட்டுத் தெரிந்து கொள்வது சிறந்தது.


இத்தொடரில் அஷோக் என்ற வாலிபன், சுயத்தின் தேடலில் ஈடுபடுகிறான். இளம் வயதிலேயே ஆன்ம வெளிபாட்டைத் தாண்டிய வேதாந்த தேடலில் ஈடுபடுகிறான். அவன் பிறந்தநாளையொட்டி அவன் பெற்றோர் புதுத் துணி வாங்கி வருகிறார்கள்.

"நீங்கள் குடுத்த இந்த உடம்பு எனும் சட்டை இருக்கையில் எனக்கென் புதுச்சட்டை" என்று மறுத்துவிடுகிறான் அஷோக். "பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த கணம் முதலே மரணத்தை நோக்கி தம் பயணத்தை தொடங்கிவிடுகின்றனர். இதில் கொண்டாட என்ன இருக்கிறது. பிறந்த நாள் என்பது வெறும் மயில்கல்" என்கிறான்.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ அபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி சம்யாதி நவானி தேஹீ

(கீதை: 2:22)

என்கிறது கீதை. பழைய கிழிந்து போல உடைகளை களைந்து எவ்வாறு புது உடை அணிகின்றோமோ, அவ்வாறே நைந்து போன உடல்களை களைந்து ஆன்மாவும் புது உடல் புகுகின்றது என்பது இதன் விளக்கம். இதை பல முறை படித்தபின்பும் மரண பயம் அற்றுவிடுவதில்லை. மறுபடி மனம் மயங்கி அதன் பாதையில் எண்ண ஓட்டத்தை தொடர்கிறது. நம்பிக்கை என்பது அடிப்படை விஷயம். நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயத்தின் பேரில் நம்பிக்கை அற்று இருப்பது, பயத்தின் முதல் காரணம்.

உடைகளைக் களைவது உடல்களைக் களைவதைப் போல் என்றால், ஏன் பயமும், கண்ணீரும் தயக்கமும்? உடைகளைக் களைந்த பின்பும், வேறு உடை அணியும் பின்பும், நம் identity தனித்துவம் அழிவதில்லை. அதே மனிதர்கள், முகங்கள், பாசங்கள், பிணைப்புகள். உடலைக் களைந்தால் பின் நேர்வதைப் பற்றி நமக்கு புலப்படுவதில்லை. மறுப்பிறவிகளில் நம்பிக்கை இருப்பினும் கூட, இப்பிறவியில் இந்த உறவுகளை விட்டு மறந்து, பறந்து போகிறோம் என்ற எண்ணமே கண்ணீருக்கும் கவலைக்கும் காரணம். நம்மைப் பிரிவுத் துயரம் ஆட்கொள்கிறது.

எல்லா உயிரும் வேவ்வேறு உரு தாங்கிய ஒரே சாராம்சம் என்ற எண்ணம் வேறூன்றிய உயர்நிலை மக்களுக்கு இந்த அஞ்ஞானம் இல்லாததால், அவர்களை பயமோ சந்தேகமோ ஆட்கொள்வதில்லை.

உடல் என்பது சட்டையைப் போன்று தான்....யோகிகளுக்கும், ஞானிகளுக்கும்.

April 09, 2009

பாடுறேன் மெதுவா...உறங்கு

விழித்திருந்த இரவுகள்
தொலைப்பேசி துவாரத்தில் பரிமாறிய கனவுகள்
ரகசியமாய் பாடிப் பகிர்ந்த பாடல்
தொடர்ந்த உருவான ஊடல்
மூன்றாம் ஜாமத்திலும் முடியாக்கதைகள்
பொட்டுறக்கமின்றித் துவங்கிய காலைப்பொழுதுகள்
இனியேனும் ஓய்வு வேண்டும்
நாள் பார்த்து நலங்கிட்டு நம் உறவுக்கு பெயரிட்டு
என்றென்றும் உனதாகிவிட்ட நிம்மதியில்
இரவெனும் பகலெனும் பாராத ஆழ்ந்த உறக்கம்

April 07, 2009

காதல் - கத்திரிக்காய் (mann)



இதோ இப்பொழுதுதான் சோனி டிவியில் விடிய விடிய, ஆறிப் போன 'மன்' (mann) படம் பார்த்து, அதன் பாதிப்பை இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆங்காங்கே இந்தப் படத்தில் (படமே தழுவல்) சுட்ட தழுவல்கள் பற்றி உபரியாய் தகவல்களும் கொடுத்தனர். எஸ்.ஏ ராஜ்குமாரின், படப்பாடல் ஒன்றும் தழுவப்பட்டிருக்கிறது. 1957ல் ரிலீசான 'An affair to remember' என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான (இந்தியத்தன) தழுவல். 1957களில் பேசப்பட்ட படம் தான் என்றாலும் அது இந்த அளவு அஜீரணம் ஏற்படுத்தியுள்ளது என்பது இதன் இந்தியத்தழுவலால் வந்த வினை. எந்த ஒரு அருமையான ஆங்கிலப்படமும் இந்தியப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இன்னும் 50 வருடம் கழித்து நம்மூரில் TITANIC எடுக்கப் போகிறார்களோ என பயமாய் உள்ளது.


படம் முழுக்க காதலுக்கு அழகான(!) விளக்கங்கள. ஒரு வேளை 18 வயதில் பார்த்திருந்தால் அடடே காதல் என்பது இது தான் என்று வக்காலத்து வாங்கியிருக்கலாம். அடிக்கடி 'சச்சி ப்யார்' (உண்மை காதல்) என்ற வசனம் வேறு எரிச்சலூட்டுகிறது.


மணமாகப் போகும், ஒருத்தியும் ஒருவனும், அவரவர்கள் முறையே திருமணம் செய்து கொள்ளவிருந்தவர்களை தடாலடியாய் மறந்து விட்டு, ஒருவரை ஒருவர் கண்டதும் மோதி, பிறகு காதல் கொள்கிறார்கள்। அப்பொழுது, இவனை நினைத்து வேறொருத்தியும், அவளை நினைத்து வேறொருவனும் காத்திருக்கிறார்களே... அவர்களுக்கு 'டிமிக்கி' கொடுப்பது என்னவாயிற்று!


இன்னொரு விஷயம் நெருடுகிறது. இதுவே மணமான இருவருக்கு, அட... அவர்களே திருமணம் செய்து கொண்டு ஒரு இரண்டு மாதம் கழித்து சந்தித்திருந்தார்கள் எனில், அது bigamy! ஆக சச்சி ப்யாருக்கும் bigamy க்கும் வெறும் ஒரு இரண்டு மாத கால அவகாசம் தான் வித்தியாசம்! கல்யாணம் ஆகிய பின் வேறொருவன் மூலமாக சச்சி ப்யாரை கண்டு கொண்டால் அவர்கள் கதி என்ன? என்ற விளங்கங்களுக்கு வேறொரு படம் எடுப்பார்களா?


அது எப்படிங்க, காதல் படங்களில் பலவற்றில் இருவரும் தனித்து பயணிக்கும் போது மட்டும் lift நின்றுவிடுகிறது? அவர்கள் வழிந்து, மேலே விழுந்து புரண்டு என ஒரு 15 நிமிடம் அவகாசம் கொடுத்துப் பிறகு மெதுவாய் திறக்கிறது। ஒவ்வொரு இளம் ஆணும் பெண்ணும் சத்தியமாய் liftக்கு கோவிலே கட்ட வேண்டும்.


ஹீரோயினுக்கு கால் ஊனமாகிவிடுவது பரிதாபமான விஷயம். ஆனால், அநியாயம் என்னவென்றால், "எக்காரணத்தை கொண்டும் அவனுக்கு உண்மை தெரியவே கூடாது" என்று வெறித்தனமாக மறைக்கும் ஹீரோயின், கடைசி சீனில் ஹீரோவே தட்டுத்தடுமாறி இவளைக் கண்டுபிடித்து, கால் போய்விட்டது என்று கண்டு கொண்டு, "உனக்குக் காலாய் நான் இருக்கிறேன்" என்று சொன்னவுடன் பஞ்சாய் இளகிவிடுகிறாள்! "எனக்கு உன்னை விட்டும், உனக்கு என்னை விட்டும் இருக்க முடியுமா?" என்றதும் "முடியாது!! இது சச்சி ப்யார்(! அந்த வார்த்தையே கடுப்பா இருக்குங்க!)" என்று சொல்வது மெய் சிலிர்க்க வைக்கிறது!!!


காதலன், ராப்பகலாய் உழைக்கிறான். அவனது கலைஓவியங்களை விற்று, குத்துமதிப்பாய் நாம் ஒரு 40 வருடத்தில் சம்பாதிப்பதை ஆறே மாதத்தில் சாதித்து, அவன் பணக்காரனாகி விடுகிறான்.(Ah! if only life was that easy!) சிண்ட்ரெல்லா கதை போல், ஒரு மாயை உண்டு பண்ணுகிறார்கள் காதல் எனும் பெயரில்.


மனிஷா கொய்ராலா, ஆமிர்கான் நன்றாய் நடித்துள்ளனர். பாவம் அனில் கபூர், அவளின் ex காதலனாய் வருகிறார்.அவர் மட்டும் காதலை உடனே விட்டுக்கொடுத்து விடுகிறார். அது சச்சி ப்யார் இல்லையல்லவா!!


பதினெட்டு வயது மதிக்கத்தக்கவர்கள் இப்படத்தைப் பார்த்தால் காதல் போதை ஏறும். அவ்வயதைத் தாண்டி வந்ததால், காதல் பிதற்றலை விட யதார்த்தப் பிதற்றல்களே நமக்குச் சரியாய்படுகிறது. இத்தனையும் தாண்டி சில இடங்களில் சில காதல் வசனங்களை ரசிக்க முடிகிறது.(அவரவர் MATURITY பொறுத்து). நிறைய மனிதர்களுக்கு சிண்ரெல்லா போன்ற கதைகளின் மேல், குழந்தைத்தனமான குதூகலமும் நம்பிக்கையும் எத்தனை வயதானாலும் ஓய்வதில்லை. அதனாலேயே இது போன்ற படங்கள் ஓடி விடுகிறது.


நிஜ வாழ்வில் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, 'உன்னோடு நான் கழித்த பொழுதுகள், இனிமை. நீங்கா நினைவோடு, உனக்காக உன் சந்தோஷத்துகாக இறைவனைப் பிரார்த்திப்பேன்' என்று பிரியும் காதலர்களே அதிகம்.

அவர்கள் இதயத்துள் இருப்பது தான் 'சச்சி-ப்யார்'