Showing posts with label ஏன். Show all posts
Showing posts with label ஏன். Show all posts

September 02, 2009

நீங்களும் நானும் ஏன் வலை பின்னிக்கொள்கிறோம்?



இரண்டு தலைமுறைக்கு முன்னோக்கிச் சென்றால் 'பிரபல்யம்' என்பது "விலையுயர்ந்த" சொல். அதனைப் பெற பல தியாகங்கள், தடாலடிகள் செய்யப்பட்டன. வியர்வை சிந்தப்பட்டது. அப்படி கிடைத்த பிரபல்யம் அன்றைய தரத்திற்கு ஏற்றதாய் இருந்தது. இன்றைக்கோ "அதிவேக" உலகத்தில், எல்லாவற்றிற்கும் மின்வேகத்தில் ஒப்புதல் கிடைத்துவிடுகிறது. அதிலும் கூட Quality vs quantity என்றாகி, தரம் குறைந்து வச-வச என எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

எழுத்தாளன் ஆக பாடுபட்டு பகல் இரவு முழித்து நீள காவியங்கள் எழுதிய காலங்கள் போய்விட்டன. (எழுதினாலும் எத்தனை பேர் இன்று படிக்கிறார்கள்?! இரண்டே பத்திகள் நீளமாய் எழுதினாலே படிக்க நேரம் இருப்பதில்லை.) பெரிய பத்திரிகையில், ஒருவன் பெயர் வெளிவராத வரை, தேர்ந்த எழுத்தாளானாய் அவனை உலகம் ஒப்புக்கொண்டதில்லை.(இன்றைக்கும் இந்நிலை தொடர்ந்தாலும் "எது பெரிய பத்திரிகை" என்னும் கண்ணோட்டம் சற்றே மாறுபட்டுவிட்டது) கணினி அறிமுகமாகாத காலம் வரை, ஒரு கல்கி, ஒரு சுஜாதா என, ஆங்காங்கே நல்-முத்துக்கள் தோன்றியவண்ணம் இருந்தன.

இன்றோ 'கம்பன் வீட்டுக் கட்டுத் தரி'யாக பெரிய எழுத்தாளர்களின் படைப்புக்களை படித்தவர்களின் கைகளும் துடியாய் துடித்து ஆளுக்கொரு கீ-போர்ட்-டுடன் 'காலையில் பல் துலக்கியது' முதல் 'தூங்கப்போகும் போது பாடிய ஆராரோ' பாடல் வரை எழுதிக் குவிக்கிறோம். இரண்டு வினாடிக்கு ஒரு முறை யாராவது முதுகில் 'ஷொட்டு' கொடுத்து பாராட்டியிருக்கிறார்களா என ஆவல் மீறிடுகிறது.

எழுத்திற்கு பைசா வசூலாகாத இணைய தளத்தில், சீரியலை தியாகம் செய்து இல்லத்தரசிகளும், இரவு தூங்குவதற்கு முன், கணினியைக் கொஞ்சி, அதில் தன் எழுத்தை பதித்த பின்பே படுக்கச் செல்லும் எழுத்துப் பிரியர்களும், ஆபீஸ் வேலைக்கு நடுவில் மேனேஜருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பின்னூட்டத்தை நோட்டமிடும் ஆர்வலர்களும் ஏன் வந்து போகின்றனர்?

"என் உளறல்கள்", "கிறுக்கல்கள், "இது கவிதை அல்ல", "கவுஜ", "கவிதை-மாதிரி" என்றெல்லாம் தலைப்பிட்டு நம் எண்ணங்களை போலி அடக்கத்துடன் பவனி வரச் செய்கிறோம். கவிதை இல்லைன்னா ஏன் பதிக்கிறோம்? உளறல் என்றால் ஏன் பத்து பேர் முன்பு தயங்காமல் உளறுகிறோம்? தமிழ் தெலுங்கு ஆங்கிலம் ஜெர்மன் உட்பட அனைத்து இந்திய அல்லது வேற்று மொழிகளிலும், இணையத்தின் செய்தி தளங்களிலும் பேசப்பட்ட செய்தியை எதற்காக மீண்டும் ஒரு முறை நம் கைவண்ணத்தில் பதிக்கிறோம்?

எழுதுவதை விடுங்கள் . வேறு சில கேள்விகளைப் பார்ப்போம் ஏன் கலைகள் கற்க முயல்கிறோம்? ஏன் காதலிக்கிறோம்? ஏன் பகைமை பாராட்டுகிறோம்? ஏன் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்? ஏன் உடமைகளைத் தனதாக்கிக் கொள்கிறோம்? இப்படி பல 'ஏன்'கள் இருந்தாலும்,

அடிப்படை காரணம் ஒன்று தான். Quenching of desires/wants.

மனவியல் நிபுணரான ஏப்ரஹாம் மாஸ்லோவின் தத்துவம் படிப்படியாக மனிதனின் தேவைகளை வகைப் படுத்துகிறது.

முதலில் உடல் ரீதியான அடிப்படைத் தேவைகள். உண்ண உணவு-நீர், உடுக்க உடை, இருக்க இடம், புணர்ச்சி முதலியவை. இவை பூர்த்தியடையாத பொழுது, அடுத்த தேவைக்கு மனிதன் செல்வதில்லை.

அடுத்து அவனின் தேவை, பாதுகாப்பு. இதில் எல்லாவிதமான பாதுகாப்பும் அடங்கும். உடல்ரீதியாக பிற உயிரினிங்களிடமிருந்து, சக மனிதனிடமிருந்து, மிருகம், இயற்கை முதலான எல்லாவற்றின் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பு தேவை. பின் மனரீதியாக, உறவுகளின் அன்பு வளைய பாதுகாப்பு, உத்தியோகத்தின் பாதுகாப்பு.

அதன் பின் அவனது தேவை அன்பு, புரிதல். சுற்றத்தின் அங்கீகாரம். சமூகத்தின் ஒத்துழைப்பு முதலியன.

கடைசியாய் வருவது அஹங்கார திருப்தி. இப்பொழுது அவன் வெல்ல முற்படுகிறான். சாதிக்க விழைகிறான். புகழுக்கு ஏங்குகிறான். முதன்மை நிலைத் தேவைகள் பூர்த்தியடையாத பொழுது, அடுத்த நிலைக்கு மனிதன் பொதுவாய் முயலுவதில்லை.

சாதாரணமாக பொழுது போக்கிற்காக, ஒரு communicationக்காக எழுதும் மனிதர்கள், தங்கள் மன உணர்ச்சிகளை வெளிக் கொணரவே எழுதுகிறார்கள். ஆழ் மன எண்ணங்கள் சில வக்ரமானவை. சில வித்தியாசமானவை. பல வினோதமானவை. எழுத்தாளனின் மன-நிலையைப் பொறுத்து அவை வடிவம் பெறுகிறது. அவனுக்கு புகழ் சிறுகச் சேரும் பட்சத்தில் உணர்வுகளைப் பகிரும் முதல் நிலையைத் தாண்டி பதப்படாத அவன் மனத்தில், 'நான் உசத்தி/மேதை' என்ற எண்ணம் மேலோங்க, கடை நிலையான "அஹ்ங்கார திருப்தி" க்கு விழைகிறான். அவன் எழுத்து வடிவமும் படிப்படியாய் மாறுகிறது.

அதன் பின் அவன் "அகத்தின் பெருமைக்காக" எழுதத் துவங்குகிறான்.

இவையெல்லாம் தாண்டி பிரதிபலன் எதிர்பார்க்காமல் எழுதுவோர் சிலரும் உண்டு. நல்ல விஷயங்களை நல்லனவற்றை பிறருடன் பகிரவேண்டும் என்ற ஆவலால் எழுதுவோர்கள். அவர்கள் மனோ தத்துவப்படி, கடைநிலையான "ego-satisfaction"-த் தாண்டி, "தன்னை அறிதல்" என்ற பவ்ய நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ளும் படியில் மெல்ல தவழ்பவர்கள் ஆவார்கள். இவர்களின் எழுத்து மட்டுமின்றி செயல்கள் பலவும் "அங்கீகரத்தை" எதிர்பார்த்து நிற்பதில்லை.

இந்நிலை அடையும் வரை அடிப்படை தேவைகள் நிரம்ப பெற்றிருக்கும் பலரின் "ஏன்" களுக்கும் ஒரே விடை தான் - "அங்கீகாரம்".