August 26, 2020

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்





வண்ணார் மரபில் பிறந்த திருக்குறிப்பு தொண்டர் வரலாறு, எளிமையின் மூலம் எட்டாத உயரத்தை எட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
.
சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை யுணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்ற சிறப்புப்பெயரை உடையவரானார். அடியார்களின் துணிகளை வெளுத்துக் கொடுப்பதன் மூலம் ஜீவாத்மாவிடம் மண்டிக் கிடக்கும் மூன்று விதமான (ஆணவம் கன்மம் மாயை) கரைகள் தூய்மை ஆகுவதாக கருதினார். அவர் செய்த தொண்டின் மூலம் அவரது முக்குண குப்பைகள் அகல, மிகுந்த தூய்மையும் பக்தியும் பெற்று விளங்கினார்.
.
இவரது பெருமையை உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் பூண்டான் இறைவன். நலிந்த சிவனடியாராக அழுக்கு படிந்த கந்தலைக் உடுத்திக்கொண்டு அடியவர் முன் எழுந்தருளினார். நாயன்மார் மிகுந்த பணிவன்புடன் சிவனடியாரின் துணியை தான் துவைத்து உலர்த்திக் கொடுக்கும் திருத்தொண்டு புரிவதற்கு அருளும்படி வேண்டினார். அடியவராக வந்திருந்த ஆண்டவனோ, தாம் குளிர் பொறுப்பது கடினம், அதனால் மாலைக்குள் திரும்ப கிடைக்க வேண்டுமென உறுதி செய்து கொண்டு தமது ஆடையினை நாயன்மார் வெளுப்பதற்காக கொடுத்துச் சென்றார்.
.
குளத்தில் துவைத்து அழுக்கு போக்கி காய வைத்து தருவதற்கு முனையும் போது பெருமழை பெய்ய துவங்கி, நிற்காமல் தொடர்ந்தது. மாலை நெருங்கும் வேளையிலும் மழை தொடர்ந்து நீடிக்க தம்மால் துணியை காய வைக்க இயலவில்லையே என்று துடித்துப்போனார். குளிர் தாங்காமல் அடியவர் வந்து உடுத்திய துணி கேட்டால் யாது செய்வேன், என் பணியில் குறையும் நேர்ந்ததே என்று வருந்தினார். மழை நிற்கும் அறிகுறியும் இல்லாது விடாமல் பெய்தது. குளிரால் நடுங்கும் அடியவர்க்கு சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் கொடுஞ்செயல் புரிந்தேன் என்று வருத்தம் மிகுந்து சலவைக்கல்லில் தலையை மோதி உயிர் விட எத்தனித்தார்.
.
தக்க நேரத்தில் கல்லிலிருந்து எம்பெருமான் திருக்கை எழுந்து அவரை தாங்கிக் கொண்டது, விடாது பெய்த மழை நீங்கி, மலர் மழை பொழிந்து அடியவரை ஆட்கொண்டது. உமையம்மையுடன் காட்சி தந்த பெருமான், அடியவர் புகழை உலகறியச் செய்தற் பொருட்டு திருவிளையாடல் புரிந்ததை உணர்த்தி, அவருக்கு திருக்கைலாயப் பதவி அளித்தார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment