பிறவிப்பெருங்கடலில் மெல்ல மெல்ல மேலெழுந்து இறைவன் பால் அன்புகொண்டொழுகி, படிப்படியாக பக்தி செய்து உயர்ந்தோர் பலர். மானுடன் உய்ய கருணை கொண்டு, பூமியில் அவதரித்து, தர்மம் பக்தி போன்ற நற்குணங்களை வேறூன்ற செய்து வழிகாட்டியாய் தோன்றுபவர்கள் இறைவனின் அம்சம். நால்வர்கள் அனைவரும் உயர்பிறப்புக்கள். தெய்வாம்சம் பொருந்தியவர்கள். ஞானசம்பந்தரை முருகனின் திருவம்சமாக வள்ளலார், அருணகிரி நாதர் முதலியவர்கள் கருதுகின்றனர்.
.
முருகப்பெருமான் பிஞ்சுபாதம் புவியிற் பட்டதால், நிலமகளும் மகிழ்ந்தார். ஏழாம் நூற்றாண்டு சீர்காழியில் அந்தணர் வழித்தோன்றலாக சம்பந்தர் அவதரித்தார். மூன்று வயதாகும் பொழுதே அன்னை அபிராமி பிள்ளைக்கு பாலூட்டியுள்ளது இவரே முருகன் என்ற கருத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையாக அமைந்துள்ளது. சிறு பிள்ளையை கரையில் அமர்த்து விட்டு குளிக்கச் சென்ற பெற்றோரை காணாமல் அழுத குழந்தைக்கு உமையவள் காட்சி தந்து ஞானப்பாலூட்டினாள். கரையேறி வந்த பெற்றோர் பிள்ளையின் வாயினின்று பால் வடிவதை கண்டு வெகுண்டு யாதென்று வினவ, உடனே குழந்தை சம்பந்தர் இறைவனின் சன்னிதியை சுட்டிக்காட்டி, "தோடுடைய செவியன்" என்ற முதல் தேவாரத்தை அப்பொழுதே மழலை மொழியில் அருளினார் என்பது வரலாறு.
.
மறு நாள் ஈசன் நினைவு மாறாத பாலகனாக திருக்கோலக்கா எனும் தலத்தில் தமது கைகளை தாளம் தப்பாமல் தட்டி இசைத்து பதிகம் பாடியதை கேட்டுருகிய பரமன் சிறு பாலகனின் பிஞ்சுக் கைகள் நோகுமே என்று நமச்சிவ என பொறிக்கப்பெற்ற பொற்றாளத்தை அளித்தருளினார். (குறிப்பு: பொற்றாளம் என்பது தாளமிட உபயோகிக்கும் இசைக்கருவி)
.
பல தலங்கள் தரிசித்து வந்த பிஞ்சு கால்கள் நோகாமல் இருக்க, அவருக்கு களைப்பின் சுவடு தெரியாமல் இருக்க, அரத்துறையில் இருக்கும் ஈசன் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி முத்துப்பல்லக்கு, முத்துக்குடை, சின்னம் முதலியவை தந்தருளியிருப்பதைக் கூறினார். அவ்வாறே சம்பந்தர் கனவிலும் தோன்றி பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இறைவனின் கருணையை எண்ணி "எந்தை ஈசன் எம்பெருமான்" என்ற பதிகம் பாடி, இறைவன் நாமம் ஓதி, வணங்கி அதனை ஏற்றதாக வரலாறு.
.
ஏழு வயதாகும் போது உபநயனம் செய்வித்து அந்தணர்கள் வேதம் நான்கினை ஓத, இவையனைத்தையும் ஓதாமலே் உணர்ந்த சம்பந்தர் அவர்களுக்கு வேதத்தின் சாரம், பொருள் உணர்த்தி அவர்கள் ஐயங்கள் தீர்த்து வைத்து, ஐந்தெழுத்தின் பெருமையை உணர்த்தினார்.
.
ஞானசம்பந்தர் பெருமையை கேள்வியுற்ற திருநாவுக்கரசர் அவரை காணும் பொருட்டு சீர்காழி வருவதை அறிந்த சம்பந்தர், நாவுக்கரசரை எதிர் கொண்டு அழைத்து, அன்பின் மிகுதியாலும், மரியாதையாலும் "அப்பர்" என்று உரையாடி மகிழ்ந்தார். அப்பரும் சம்பந்தருமாக பல திருத்தலங்கள் சென்று பதிகம் பாடினர். யாத்திரையின் போது திருமறைக்காட்டின் (வேதாரண்யம்) அருகே ஆலயக் கதவுகள் திறக்கப்படாதிருக்க, அக்கதவு திறக்க அப்பர் பல பாடல்கள் பாடி, எம்பெருமான் அப்பாடல்களில் மெய்மறந்து இறுதியில் கதவு திறந்தருளினார். தரிசனத்திற்கு ஏதுவாக இனி கதவு திறந்து மூட லகுவாகும்படி சம்பந்தர் ஒரே பதிகம் பாடியதும் கதவு மூடிக்கொண்டது.
.
இதனை எண்ணி அப்பர், இத்தனை திருவருள் நிறைய தான் எத்துணை தவமிருக்க வேண்டுமென்று எண்ணிக் சம்பந்தரை மேலும் கொண்டாடினர். திருவாய்மூர் எனும் இடத்தில் தமது ஆடல் காட்சியை க்ஷணத்தில் சம்பந்தருக்கு காட்டியருளிய இறைவன், "தளிரென வளரென" என்று சம்பந்தர் பதிகம் பாடிய பின்னர், அப்பருக்கும் அக்காட்சி அருளினார்.
.
பட்டீஸ்வரம் அருகே சம்பந்தர் யாத்திரை சென்ற போது வெயிற் மிகுதியால் வாட நேரிடுமே என்று இறைவன் ஆணையிட சிவ பூதங்கள் வானத்தினின்று முத்துபந்தல் சுமந்து நிழல் கொடுத்ததாக வரலாறு. இறைவன் கருணையை
வணங்கி "பாடல் மறை" என்ற பதிகம் பாடினார்.
.
பதினாறு வயதாகிய சம்பந்தருக்கு மணம் பேசி நிச்சயித்தனர். நம்பியாண்டார் என்பவரின் திருமகளை திருமணம் செய்த பின், (கல்வெட்டு தகவலின்படி ஞானசம்பந்தர் மனைவியின் பெயர் சொக்கியார் எனத் தெரிகிறது) வினைக்கு வித்திடும் இல்லறம் எமை சூழ்ந்து கொண்டது, இனி இவளுடன் சிவன் தாளே வந்தடைவேன் என்று நினைந்து "கல்லூர் பெருமணம் வேண்டா" என்று பதிகம் பாட, இறைவன் அசரீரியாய் புறப்பட்டு வரும்படி அருளினார். பரவச மிகுதியில் "காதலாகி கசிந்து" என்ற பதிகம் பாடியவுடன் லிங்கத்தின் முன் ஜொதிப்பிழம்பு தொன்றி அதன் வழியே வாசல் தோன்றியது. திருவாசல் வழியே தமது மனைவியுடன் திருமணம் காண வந்தோர் அனைவருடனும் அஜ்ஜோதியில் கலந்து இறைவன் திருவிடம் அடைந்தார்.
.
ஞானசம்பந்தர் அப்பருடன் சிவஸ்தலங்களை தரிசித்து பதிகங்கள் பாடி மகிழ்ந்திருந்த காலங்களில் திருவாரூரில் இருக்கும் திருவீழிமிழலை எனும் ஊருக்கு இருவரும் எழுந்தருளி இருந்த போது அங்கு பஞ்சம் ஏற்பட்டு பயிர் செழிக்காமல் உணவின்றி தவிக்கும் நிலை அம்மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதைக் கண்டு அப்பரும் சம்பந்தரும் மிக வருந்தி செய்வது யாது என்று சிந்தித்திருக்கும் போது இருவர் கனவிலும் சிவபெருமான் தோன்றி இருவருக்கும் படிக்காசு அருள்வதாக கூறி மறைந்தார். கிழக்கு மேற்கு பலிபீடங்களில் படிக்காசு இருவரும் பெற்று அவரவர் மடங்களில் மக்களுக்கு அமுதளித்து தொண்டு புரிந்தனர். இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அப்பரது மடத்தில் நேரத்தே உணவிட்டு வருவதும், தமது மடத்தில் உணவு தயாராக சற்றே தாமதம் ஆகுவதை கண்ட சம்பந்தர், காரணம் வினவினார். மெய் வருத்தி உழவாரப் பணி செய்து வரும் அப்பருக்கு உயர்ந்த குற்றமற்ற காசு கிடைப்பதால் விரைவில் உணவுப் பொருள் பெற்று அமுதளிக்க முடிகிறது தமக்கு அளிக்கபடும் காசு குற்றமற்றதா என்று சோதித்த பின்னரே பொருள் பெற முடிவதை உணர்ந்தார். "வாசிதீரவே காசு நல்குவீர்" என்று இறைவனை நோக்கி இறைஞ்சி குற்றமற்ற படிக்காசு பெற்று அமுதளித்ததும் அற்புத வரலாறு. பின்னர் இறையருளால் சில தினங்களில் பெருமழை பெய்து பஞ்சம் தீர்ந்து மக்கள் சுகித்தனர்.
.
சமண மதம் அவர்களுக்குறிய நெறிமுறைகளை பரப்பி ஆங்காங்கே சமணப் பள்ளிகள் நிறுவி சைவ மதத்திற்கு பெரும் சவாலாக இருந்த காலகட்டம். மதுரையை ஆண்ட மன்னன் பாண்டியன் (கூன்பாண்டியன்) சமணத்தை தழுவியிருந்த போதும் அவரது அமைச்சரான குலச்சிறை நாயனாரும் (இவரது வரலாற்றை ஏற்கனவே பார்த்தோம்) மதுரை மன்னரின் மனைவியாரும் அறுவத்தி மூவரில் ஒருவரான மங்கையர்கரசியாரும் சைவ மதத்தை நிலை நாட்ட பாடுபட்டு வந்தனர். சம்பந்தரை பாண்டி நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தனர். அவருடன் இருந்த அப்பர், நாளும் கோளும் நன்றாக இல்லை, பின்னர் செல்லலாமே என்று விண்ணப்பம் செய்ய, இறைவன் துணையிருந்தால் நாளும் கோளும் ( நவகிரஹ சஞ்சாரங்கள்) என் செய்யும் என்றுணர்த்த "வேயுறு தோளி பங்கன்" என்ற கோளறு திருப்பதிகத்தை பாடியருளினார்.
.
அப்பரை வேறு தலங்களுக்கு யாத்திரை செய்ய பணித்து விட்டு, மதுரைக்கு பயணமானார். மதுரை செல்லும் வழியின் எல்லையாக விளங்கும் திருபுவனம் அருகை வைகை ஆற்றை கடக்க முயல, அங்கு ஆற்று மணலெல்லாம் சிவலிங்கமாகவே சம்பந்தருக்கு தென்பட்டது. கால் வைக்க முடியாமல் திகைத்து, பதிகம் பாடியவுடன், சிவனார் நந்தியை சாய்ந்து நின்று வழிவிடச்சொல்லி அங்கிருந்தே சம்பந்தருக்கு காட்சி தந்தார். திருப்புவனக் கோவிலில் நந்தி சாய்ந்திருப்பதை இன்றும் காணலாம்.
.
சமணர்கள் சம்பந்தர் மடத்திற்கு தீ வைத்ததை அறிந்து இறைவனை நோக்கி பதிகம் பாடியதும், இக்கொடுஞ்செயலுக்கு காரணமான மன்னரை வெப்பு நோய் தாக்கியது. பின்னர், சம்பந்தரை பணிந்த மன்னனின் நோயை "மந்திரமாவது நீறு" என்று பதிகம் பாடி நீறு கொண்டு நீக்கியருளினார். சமணர்களுடன் அடுத்து தொடர்ந்த அனல் வாதத்திலும் (மதக்கோட்பாடுகளை எழுதி தீயில் இட்டும் சைவ மத கோட்பாடுகள் எரியாதிருக்க, சமணர்கள் ஏடுகள் எரிந்து சாம்பலாயின) , புனல் வாதத்திலும் (மதவழிமுறைகளை ஏட்டில் எழுதி ஆற்றில் விட்டாலும் நீரோட்டததை எதிர்த்து சைவ மத ஏடு நின்றது, சமணர்களின் ஏடு ஆற்றோடு வெள்ளத்திடை ஓடிற்று) வென்றார். பாண்டிய மன்னனின் கூனை நீக்கி, நின்றசீர் நெடுமாறனாக்கி அருளினார்.
.
புத்தமத பிரசாரங்களும் ஓங்கியிருந்த காலங்கள். அவர்களில் பலரை வென்று அனைவரும் சைவம் தழுவுதற்கு காரணமானார்.
.
தமது தந்தை வேள்வி செய்தற்கு பொருள் வேண்ட, இறைவனருளால் பொற்கிழி கிடைக்கப்பெற்றார். எடுக்க எடுக்க குறையாத உலவாக்கிழியாக இறைவன் அளித்து அருள, அதனைக் கொண்டு வேள்விகள் பல செய்து, தொண்டாற்றினார்.
.
கணவனை இழந்து கதறிய நங்கைக்கு "சடையாய் எனுமால்" என்று பாடி, அவள் கணவனை உயிர் பெறச்செய்தார். அதே போல் திருமயிலாப்பூரில் வாழ்ந்த செட்டியாரின் மகள் பூம்பாவை நாகம் தீண்டி மரணம் அடைந்தாள். அப்பெண்ணின் உடல் எலும்புகளை குடத்திலிட்டு சம்பந்தரிடம் சமர்பிக்க அவளை உயிர்பித்து தமது மகளாக்கிக் கொண்டார். முயலகன் என்ற நோயில் அவதியுற்று உணர்வற்றிருந்த குறுநில மன்னரது மகளை உணர்வு பேறச்செய்து அருளினார்.
.
கொள்ளம்புதூர் இறைவனை வழிபட மறுகரைக்கு செல்ல வேண்டியிருந்தது. வெள்ள மிகுதியால் ஓடங்களை படகோட்டிகள் செலுத்தாத போதும், "கொட்டமே கமழும்" என்ற திருப்பதிகம் பாட, ஓடம் சம்பந்தர் பெருமானையும் அவரது அடியார்களையும் தானே அக்கரைக்கு அழைத்துச் சென்றது.
.
ஒவ்வொரு பதிகத்திற்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து அடுக்கிக்கொண்டே போகலாம். மூன்று வயது பாலகனுக்கு அன்னையே மனம் உவந்து அமுதளித்தாளென்றால், வந்திருந்தது அழகன் முருகன் என்றால், இதுவெல்லாம் நிகழ்ந்தது எதுவும் ஆச்சரியபடுவதறிகில்லை.
.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment