June 19, 2020

எனக்காக ஒரு கொலை (படக்கதைப் போட்டிகாக எழுதியது )




.


'மாட்டேன்னு எப்படி சொல்றது! அந்த ஆள் சும்மாவே முறைச்சுக்குவான். ஒரே பிரச்சனையாப் போச்சு.

ராத்திரிக்கு ஜில்லுன்னு மோரைக் குடிச்சுட்டு படுத்திருந்தா, வசந்தி வந்து நொய்யி நொய்யின்னு கழுத்தறுத்தா.

"இங்க பாருங்க, எப்படியாச்சும் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சே ஆகணும். காலையில எந்திரிச்சா கடங்காரங்க தொல்ல தாங்க முடியல"

"கடனை அடைக்க புதுக்கடன் வாங்க சொல்றியா. இது சரியான யோசனையா எனக்கு தோணல வசு"

"பின்ன நீங்களே நல்ல யோசனையா நைட்டு முழுக்க யோசிச்சு, நாளைக்கு விடியையில என்ன பண்ணலாம்னு சொல்லுங்க."

மதிவாணன் சொன்னதை ஏத்துக்க வேண்டியது தான். நம்ம விதி அப்படி!
____

மதி...

சொல்லுடா

நாளைக்கு நைட்டு வரவா?

வேணாம். நீயே ரெண்டு நாளுல வேலைய முடிச்சு குடு. செய்ய வேண்டியத சொல்லிட்டேன். இனி உன் சாமர்த்தியம்.
___

என்ன செய்வது. பேசாமல் கொலை செய்துவிடலாமா! சேச்சே எனக்கே இளகிய மனசு. கொலையைப் பத்திய எண்ணமெல்லாம் எப்படி வரும்! அமானுஷ்யமாக ஒரு சாமியாரை வரவழைச்சு...மந்திரிச்சு....அட மகமாயி நினைச்சாலே நடுங்குதே. இதுக்கு என்ன தான் வழி. அந்தாளு மூணே நாளுல முடிக்க சொல்லிருக்கானே. ஆமாம் 'டைகர் தினகரன்' தான் சரியான ஆளு.

தினகரா எனக்கொரு உதவி வேணும். தினகரன் தன்னை செருப்பாச் தெச்சு குடுக்கவும் தயங்காதவன்.

பிரபாகர் நீ கேட்டபடி ரெடி பண்ணிட்டேன்- என்றான்.

நான் எனப்படும் பிரபாகர் அவனை காணத் தயாரானேன். இருந்தாலும் எனக்கும் இதற்கும் எப்படிப் பொருந்திவரப் போகிறது என்ற தயக்கம்.

_

ஹோட்டல் 'சூரியகாந்தி'க்கு நான் சென்ற போது நேரம் அஞ்சு மணி இருக்கும். சர்வர் சுந்தரம் போல் ஒருவன் பத்து டபரா டம்பளரை அலேக்காக தூக்கி சென்று கொண்டிருந்தான். சிரிப்பு வந்தது எனக்கு. என்ன கலைத்திறன் இவனுக்கு! இதையெல்லாம் ரசிக்க முடியாத மனநிலையில் இருக்கிறேனே! என்னைப் போய் கொலை.... என்னை நானே திடப்படுத்திக் கொண்டேன். வேறு வழியே இல்லை களத்தில் இறங்கிவிடும் கணம் நெருங்கிக் கொண்டிருந்தது.
.
தினகரனிடமிருந்து பெற்ற பையில் அந்தத் "தலை"யை வைத்திருந்தேன். எப்படியாவது மதியை இங்கு வரவழைத்து வந்த காரியத்தை முடித்து, பணம் வாங்கி விடவேண்டும்.
.

மதிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த பிறகு....நேர்த்தியாக அந்தத் தலையை எடுத்து டேபிளில் பரப்பினேன். யாரும் இங்கு வந்து விட மாட்டார்கள் என ஊர்ஜிதம் செய்த பின், அந்தத் தலையை கூர்ந்து கவனித்தேன். கண் கொஞ்சம் பயம் கலந்த மாதிரி இல்லாமல், 'சின்னப்பாப்பா' கண்ணு மாதிரி குழந்தைத் தனமாக இருப்பதாகப் பட்டது. வாயில் வழிந்து கொண்டிருந்த ரத்தம் கொஞ்சம் காய்ந்திருந்தது. பல் சீராக இருந்தது. தவறு. பல்லை அடையாளம் தெரியாதபடி உடைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் தப்ப முடியும். மதி வந்து விடட்டும், ஒரு முடிவு கட்டி விடலாம்.
.
மதி வந்து விட்டதாக ரிசெப்ஷனிலிருந்து கால் வந்தது. இதோடு ஆறாவது சிகரெட். சின்ன வயசில் என் பக்கத்து விட்டு காதலி பர்வதம் சிகரெட்டை விட்டுவிடு என்று தினத்துக்கு பத்து முறை சொல்லியும் இன்னும் என்னால் விட முடியவில்லை. வசந்தி கூட பல தரம் எடுத்துச் சொல்லி அலுத்துவிட்டாள். இன்றோடு இதை விட வெண்டும். ஒரு விரக்தியில சிகரெட்டை அழுத்தி அந்தத் தலையை தடவினேன்...
.
"முய்க்" என்றொரு சத்தம் வந்தது. முட்டாள் தினகர் எத்தனை முறை சொல்லியிருப்பேன் தொழிலில் கவனம் வேண்டுமென்று!
.
சரியாக அதே நேரம் சர்வர் சுந்தரம் போன்ற அந்த நபர் டீ கொண்டு வந்தான்.
.
திடுக்கிட்டு திரும்பிய நேரம்.... பத்தூருக்கு கேட்கும்படி அலறி டீயெல்லாம் தரையில் சிந்தியதில் நான் பயந்து வெலவெலத்துப் போனேன்.
.
அடுத்த அரை மணி நேரத்தில் நான் பேசிய எதுவும் எடுபடவில்லை. அருகிலிருக்கும் ஸ்டேஷனில் முட்டிக்கு முட்டி தட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
-
வேண்டாம் சார் முட்டிக்கு முட்டி அலுத்து விட்டது. எனக்கு முதுகில் இடதுபக்கமா சுளுக்கு, அங்க கொஞ்சம் இதமா அடிச்சீங்கன்னா....என்று சொல்லத் தோன்றியது. இருப்பினும் சொல்லாமல் அடக்கிக் கொண்டேன், இது சரியான நேரமல்ல.
.
அரை மணி கழித்து ஆசுவாசமாக வந்துத் தொலைத்தான் மதி.

அப்புறம் இன்ஸ்பெக்டர் நாகசுந்தரத்திடம் ஆதி முதல் அந்தம் வரையிலான கதையை ஒப்பிக்க வெண்டியிருந்தது.

"சார் நான் அப்பவே சொன்னேனே சார். இவர் தான் வளர்ந்து வர டைரக்டர் மதி."

"யார் இவரா? வளர்ந்ததாகவே தெரியலையே!"
-
ஐஞ்சடி ஆறங்குலம் இருந்த மதி, கோபமாக குதித்தார். என்னுடைய "ரதிவசம் வந்த அதிரசம்" நூறு நாள் ஓடிச்சே நீங்க பார்க்கலையா!
.
சரி சார் விஷயம் இது தான். எனக்கு க்ரைம் அல்லது ஹாரர் கதை எழுத சொல்லி ரூம் புக் பண்ண சொல்லிருந்தார். இது வரை பிழிய பிழிய சென்டிமென்ட், காதல் கதைகள், இப்படியே எழுதின பஞ்சுக் கைகள் சார் இது. யோசிச்சு யோசிச்சு ரெண்டு
நாளில் கொஞ்சம் திரைக்கதை எழுதியிருந்தேன். அதுக்கு உபயொகமா இதை தருவிச்சிருந்தேன்.... அதை இந்த ஹோட்டல் சர்வர் பார்த்து கொலைன்னு நினைச்சு.........ஹி ஹி... என்றேன் நான்.
-
நீ கதாசிரியரா?

ஆமாம் சார்.

பெயர்?

பிரபாகர். பிரபான்னு செல்லமா கூட கூப்டுக்கோங்க சார், ஆனா என்ன ரிலீஸ் பண்ணிடுங்க. மதி சாரோட "முகநூலில் தொடுத்த முல்லைமலர்" படம் பார்க்கலியா...நான் தான் திரைக்கதை வசனம் எல்லாம்...

அந்த கிராதகன் நீ தானா! அதைப் பார்த்துட்டு என் சம்சாரம் படம் பார்க்குறதையே விட்டுடுச்சுப்பா. நல்ல சமூக சேவை.

ஹிஹி சார்.

என்னை ரிலீஸ் செஞ்சத்துக்கு அன்பளிப்பா இந்த படம் வெளிவந்ததும், உங்க குடும்பத்துக்கு முதல் ஷோவுக்கு மூணு டிக்கட் ஃப்ரீ சார்.

ஆ...! அட ராமா! என்று மயங்கி விழுந்தார்.

இவ்வளவு தங்கமான மனுஷனா இருக்காரே, இவரை வைத்து காமெடி எழுதலாமா, இல்லை பயமுறுத்தி ஹாரர் எழுதலாமா என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன் நான்.

***சுபம்***


குறிப்பு: கணேஷ் பாலா அவர்கள் நடத்திய படக்கதைப் போட்டிக்கு எழுதியது. நன்றி கணேஷ்பாலா சார். 

No comments:

Post a Comment