திருப்பெணாகடம் என்ற ஊரில் வணிகர் குலத்திலே பிறந்து சிறந்த சிவபக்தராக விளங்கினார் கலிக்கம்ப நாயனார். அந்த நகரில் துங்கனைமாடம் எனும் சிவன்கோவிலில் குடிகொண்டிருக்கும் கங்காதரனை பக்தி செய்து வாழ்ந்து வந்தார்.
அடியார்களை பேணி காத்து, உணவு அளித்து வேண்டிய பொருளும் அளித்து வந்தார். அடியார்களை சிறப்பிக்காத இறை வழிபாடு குறைவுள்ளது என்று நம்பி, அடியார்களின் வழி நின்றலும், அவர்களை காத்தலுமே இறைவனுக்கும் மிக உகந்ததெனக் கொண்டார். சிவ அடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும் அற்றவராக இருந்தார்.
பின்பொரு சமயம், சிவ பக்தர்களை உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, பாத பூஜை செய்து, இன்னமுதளிக்கும் வெளையில், வந்திருக்கும் அடியவர்களுள் ஒருவர் கலிகம்ப நாயனாரிடம் பணியாளாக முன்பு பணி செய்து, அந்த வேலையை துறந்தவர். இதைக் கண்டுகொண்ட மனைவியார், இருமனம் கொண்டவராக நீர் வார்க்க சிறிது தயங்கினார் . அடியார்க்கு நீர்வார்க்க தவறிய மனைவியின் செயல் அவருக்கு பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அளித்தது, அடுத்த நொடி அங்கிருந்த வாளெடுத்து மனைவியின் கைகளை துண்டித்து அது பற்றிய சலனமேதும் இல்லாதவராக தொண்டாற்றத் தொடர்ந்தார் நாயன்மார். ரத்தம் ஆறாய் பெருக மயக்கமுற்றார் மனைவி.
பேரொளியாக சிவன்-பார்வதி தம்பதி சமேதராக எழுந்தருளி அடியவர்க்கு தொண்டு செய்யும் அவரது புகழ் ஓங்கவே இத்திருவிளையாடல் புரிந்தோமென உரைத்து மனைவியின் மயக்கம் தீர்த்து, ஊனம் நீக்கி இருவரையும் வாழ்த்தி மறைந்தார். நாயன்மார் நெடுங்காலம் மனைவியுடன் இனிய தொண்டுகள் புரிந்த பின் கைலாயம் பிராப்தி அடைந்தார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment