கண்ணனும் ஆண்டாளும்
இன்னிக்கு எப்படியானும் அவனை புடிச்சே ஆகணும். மனதில் கருவிக்கொண்டாள் ஆண்டாள். தினம் தினம் தோழிகளை வேறு எழுப்பி, அலைக்கழித்து, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஆனாலும் கண்ணுக்கு சிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறானே.. என்ற வருதம் மேலிடுகிறது.
ஆண்டாள்: இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம் வாங்க ஃப்ரெண்ட்ஸ்.
(ஆயர்பாடியில் யசோதா வீட்டில் கண்ணன்- நப்பின்னை ருக்மிணியுடன்)
கண்ணன்: அம்மா, நாளை காலையில் அவள் வந்தால் நான் தூங்குவதாக சொல்லிவிடுங்கள். (கண்ணன் புன்னகைக்கிறான்)
யசோதா: யாரைச் சொல்கிறாய்?
க: வேறு யார்! ஊருக்கு முன் எழுந்து, என்னையும் எழுப்பி பாடாய் படுத்தும் ஆண்டாள் தான்.
ய: நீ தினம் வெண்ணையை சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் இப்படி தூங்கினால் என்ன செய்வதாம்?
க: அவள் தரும் ப்ரேமையின் தகிப்பை தாங்க முடியாமல் தானே, நான் பாலும் தயிரும் வெண்ணையுமாக குடிக்கிறேன்... அவள் பூமாதேவியின் வார்ப்பாம் எனக்காகவே பிறந்ததாகச் சொல்கிறாள்..யாராக இருந்தால் என்ன! ... எனக்கு எல்லாரும் ஒன்று தானே...
ருக்மிணி சாந்தமாக இருந்தாலும் நப்பின்னை கோபத்துடன்: இன்னும் எத்தனை பேருண்டு இப்படி...
க: பல பேர்...உண்டு! எங்கெல்லாம் என் மேல பரிபூரண அன்பு உண்டொ அத்தனை பேரும் எனக்கு ப்ரியமானவர்கள்.
ந: அவர்களையெல்லாம் பக்தர்களாக மட்டுமே பார்த்தால் போதுமே, உடனே ப்ரேம சம்பந்தம் வரவேண்டுமா..உங்க அண்ணா ராமிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடாதா
க: பக்தியில் பல வகை. பிரேம பக்தியும் ஒருவகை. எத்தனை பேர் இருந்தாலும் நான் நித்ய ப்ரம்மச்சாரி என்று உனக்கு தெரியாதா நப்பின்னை? ராம் அண்ணா வேறு நான் வேறு...ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்று...
ந: போதும் போதும் நிறுத்துங்கள்.
க: பேசிக்கொண்டே இருந்தால், ஆண்டாள் வரும் நேரம் ஆகிடும். நான் யோக நித்திரையில மூழ்க வேண்டும்.
ஆண்டாள் பாடிய படி வருகிறாள்:
உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)
பாடி பாடி எழுப்புகிறாள்...
கண்ணனின் புகழும், பராக்கிரமும், கேட்க கேட்க யசோதை நப்பின்னை, ருக்குமணி, ஏனையோரும் மெய் மறக்கின்றனர்.
ருக்மிணி: "ஆஹா...எல்லோருக்கும் தெரிந்த பராக்கிரமங்களை நீ இசைக்கும் பொழுது இன்னமும் இனிமையாகிப் போகிறதே...ஆண்டாள்! எங்கள் கண்ணனையே ஆளும் உன்னை ஆண்டாள் என்று சரியாகச் சொன்னார்கள்! இப்பொழுது எங்களையும் உன் இசையால ஆண்டுவிட்டாயடி"
ஆ: ருக்மணி அக்கா, நப்பின்னை அக்கா, யசோதா ஆண்டி...நாலு பஸ் மாறி, விடியக்காலைல உங்க பையனோட ஹிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் பண்ணி, அதை மெனகெட்டு கவிதையாக்கி, புகழ்ந்து ஐஸ் வெச்சா கூட என்னை கண்டுக்க மாட்டேங்கறானே...
ய: நானே இம்மாத இறுதிக்கு பிறகு பெரியாழ்வரிடம் வந்து உன்னை பெண் கேட்கிறேன்...மார்கழி இறுதி வரை நீ பாடும் பாடலை கேட்க ஆவல் மேலிடுகிறது. அதன் பின்னே தான் திருமணம்.
ஆ: அதுக்கு அப்புறம் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்...யசோதா ஆண்டி நீங்க தான் சாட்சி...இன்னும் இந்தக் கண்ணன் எழுந்துக்காம என்ன பண்ணிட்டு இருக்கான்..எழுப்புங்க அவனை..ஆண்டாள் கண்ணனின் அருகமர்ந்து அவனை எழுப்ப முயற்சிக்கிறாள்....
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
(பாடலுக்கு நன்றி மின்னல்வரிகள் கணேஷ்)
ருக்மிணி, குடிக்க ஜில் என்று ஜூஸ் கொண்டுவருகிறார்கள். மார்கழி குளிரில் பாடின வாய்க்கு சூடான பால் போதும் என்று பால் மட்டும் அருந்துகிறாள் ஆண்டாள். உலுக்கி உலுக்கி எழுப்பினாலும்...ம்ஹ்ம்... கண்ணன் எழக் காணோம்.
பாடிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அழகில் மயக்கம் ஏற்பட...வந்த நோக்கம் மறந்து கண்ணனின் யோக அழகில் மூழ்கிப்போகிறாள். எத்தனை நேரம் மூழ்கியிருக்கிறாள் என்ற நினைப்பும் அற்றுப் போகிறது. அதன் பின் விழிப்பு வந்தவளாய் பார்வையை செலுத்துகிறாள்.
தூரத்தே கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிகிறான்...இன்னும் சற்றுத் தொலைவில் மஹாபாரதக்களத்தில் கீதோபதேசம், இடப்பக்கம் குட்டிச் சிறுமியை ரக்ஷிக்கும் ரோபோவாகிப் போகிறான். வலப்பக்கம், மேற்பக்கம் எங்கு திரும்பினும் கண்ணன். ஆகாயமாய் அளந்து நிற்கும் கண்ணன், துரும்பிலும் ஒளியும் கண்ணன், சின்ன சிறுவனாய் குதூகலிக்கும் கண்ணன், அரக்கனை அழிக்கும் ஆக்ரோஷக் கண்ணன், விஞ்ஞான வளர்ச்சியின் தேடலாய்க் கண்ணன், தினமும் வழங்கும் வாழ்த்தொலியில் கண்ணன், ரூபமாய் அரூபமாய், இருப்பவனாய் இல்லாதவனாய் எங்கும் கண்ணன்....காணக் காண முடிவற்றவனாய்... ஒரு கணம் தடுமாறி திரும்பிப்பார்க்கிறாள்...
பட்டுமெத்தை விரிப்பில் களித்தபடி கண்ணன். இவன் தூங்குகிறான் என்று தானே நினைத்தோம். ஆண்டாளுக்கு தான் கண்டதெல்லாம் கனவா என்ற குழப்பம்.
ய: இப்படித் தான்.....அன்றொருநாள் எனக்கு உலகத்தை காட்டி.....ஹ்ம்ம் மாயக்காரன்.
(கண்ணன் விழிக்கிறான், அல்லது விழிப்பது போல் நடிக்கிறான்.)
ஆ: நீ தூங்கினியா இல்ல தூங்கினது போல நடிச்சியா? உன்னை எங்கெல்லாமும் பார்த்தேனே...... இதோ இப்போ கூட, இங்கையும் அங்கையும், எங்கையுமா...
க: நான் தூங்கினால் இயக்கம் என்னாவது .. கண்ணன் சிரித்தான்... அவன் குரல் வந்த திக்கை கண்டுணர முடியவில்லை. திக்கெட்டும் ஒலித்த அந்த குரல், இருந்தது போலும், இல்லாது போலும் எங்கும் நிறைகிறது.
க: நீ போய் மார்கழி முடிந்து வா...நான் உன்னை, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத திருமணம் செய்கிறேன்.
சொன்னபடியே கண்ணனை வாரணம் ஆயிரம் சூழவலம் வந்து கைப்பிடிக்கிறாள்.
~~~~~
"அவன் போக நிலை கூட
ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" ...
என்ற பாடல் சிடியில் ஒலித்த வண்ணாமிருக்கிறது. தூரத்தில் பெரியாழ்வார் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்.
மெல்ல எழுகிறாள் ஆண்டாள்...அத்தனையும் கனவா?! அடுத்த பாடலாய் உதிக்கிறது.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
அவள் தூங்கிய கனவிலும் அவனே வந்தான். ஆனால் அவனோ தூங்கவே இல்லை. கண்ணனுக்கேது தூக்கம்!!! அடுத்த பிறப்பில் பாட்டை சிறிதே மாற்றியமைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.
என்னா ஒரு கற்பனைங்க ஷக்தி! இசையில Fusion அப்படின்னு ஒண்ணு சொல்வாங்க. வேற வேற வகை மியூசிக்கை மிக்ஸ் பண்ணி புதுசா ஒண்ணைத் தர்றது. கண்ணதாசன் பாடலை பெரியாழ்வார் சிடியில கேட்டபடி பூப்பறிக்கறதும், ‘யசோதா ஆன்ட்டி, உங்க பையனோட ஹிஸ்டரியை மனப்பாடம் பண்ணி’ன்னு ஆண்டாள் பேசறதுமா கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் சேர்த்து கற்பனைப் பறவை சிறகுவிரிச்சுப் பறந்திருக்கு. ரொம்பவே ரசிச்சேன்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி கணேஷ் :) இந்தப் பதிவு உங்கள் பதிவின் விளைவாக வந்தது :)
ReplyDelete///எங்கள் கண்ணனையே ஆளும் உன்னை ஆண்டாள் என்று சரியாகச் சொன்னார்கள்! ///
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னார்கள்.
ஆண்டாளின் பாசுரங்களில் தான் எத்தனை இனிமை.
செவியில் பாயும் தேனாய் இனிக்கும்.
தற்கால மொழிநடையிலும்
நாடக பாணியிலும் நீங்கள் பதிவிட்டது
அழகாக மனதில் நிலைகொண்டுவிட்டது
சகோதரி.
ஆஹா.. அற்புதமானப் பதிவு...
ReplyDeleteபடிக்கும் போதே ஆனந்தத்தில் கண்கள் கலங்குகின்றன...
பக்தியோகம் ஆண்டாளின் பக்தியோகத்தை மெச்சி கண்ணபிரான் வேண்டும் / வேண்டிய ரூபத்தில் எல்லாம் காட்சி தந்திருக்கிறான்...
ஸ்ரீ ராமாவதாரத்திலே, ஸ்ரீ ராமனை வீதியிலேக் கண்ட இளசுகள் எல்லாம் அவனை அன்பால் அணைக்க ஆசைக் கொண்டார்களாம், ஆனால் அவனோ ஒருத்திக்கே உருத்தான "ஏகபத்தினி விரதனாச்சே" அதனால் தான் அன்று விரும்பிய யாவரும் கிருஷ்ண அவதாரத்திலே கோபியர்களாக அவனை சூழ்ந்து கொஞ்சி களித்தார்கள், அதற்கு வாய்ப்பை அங்கேக் கொடுத்தான் என்ற ஒருக் கதையும் சொல்வார்கள்...
எதுவானாலும் ஆண்டாளைப் போல் பக்தியோகத்திலே எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் இறைவனையே சிந்தித்து.. அவனையே சுவாசித்து அவனை உறவுகளில் எல்லாம் சிறந்த நெருங்கிய அன்னியோன்ய; இரு உடல் ஓருயிர் என்பார்களே அப்படிப் பட்ட காதலிலே இதயம் கனிந்து (வலதுபுறம் இருக்கும் அருவ இதயத்தை விழிக்கக் செய்து) மெய்மறந்து அவனோடுக் கூடிக் களித்திருக்கிறாள் இந்த ஆண்டாள்.
இதைப் போன்றே அபிராமிப் பட்டரும் இருந்திருக்கிறார் என்பதையும் காணமுடிகிறது... அவரின் பக்தி அவளிடம் அவர் கொண்ட உரிமை சொல்லிமாளாது... குழந்தைத் தனமது.... அணுவளவேனும் பேதமில்லாக் குழந்தைத் தனமாகவே இருந்திருக்கிறது... ஏசுநாதர் கூட "குழந்தைகளாக இருங்கள்" என்றாராம்... குழந்தையின் மனது கள்ளமில்லா தூய மனமில்லையா!.. அதனாலே குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள் என்பதையும் நாம் அறிவோம்...
எதுவாயினும் இங்கே ஆண்டாளைப் போல்.... ஆயிரமாயிரம் கோபியர்களின் ஆத்மாவில் திளைத்து கூடி களிப்புற்ற இந்தக் காதல், தூல உடம்பால் மனிதர்கள் கொள்ளும் கலவியும், காதலைப் போன்றக் காதல் அல்ல... இது வேறுவிதமான காதல் இங்கே புனித ஆத்மாக்களே கூடுகின்றன என்பதையும் கூறவேண்டி இருக்கிறது... காரணம் நம்மில் பல ஆத்திகர்களே கிருஷ்ணன் கோபியர்களோடு களித்தான் என்பதை சாதாரண மனித உறவைப் போன்றே எண்ணியும் அதை சில வேளைகளில் தனக்கு சாதகமாகவும் கூறிக் கொள்வதை /அல்லது தங்களுக்குள் குழம்பிக் கொள்வதை அப்படிப் பலரின் (ஏன்? எனக்கும் கூட இது போன்ற சந்தேகம் / சங்கடம் / புரியாத் தனம் இருந்திருக்கிறது அவைகள் பின்னாளில் தான் அவைகள் வேறு என்பதை தெரிய வாய்ப்புற்றது...) புரியாத் தனத்தையும் காணமுடிகிறது!!!...
அதிகாலை அந்த மாயக் கண்ணனின் லீலைகளை சொற்சித்திரமாக காண்பித்த உங்களின் கைவண்ணம் அருமை... உங்களின் திருக் கரங்களுக்கு வைரகற்கள் பதித்த தங்கக் காப்பு தான் அனுவிக்க வேண்டும் சகோதிரி...
நல்லப் பதிவு.. நன்றிகள்!!!...
ஆஹா அழகான பதிவு ஷக்தி தமிழ்விரும்பி சொல்வதுபோல உன் கைக்கு வைரக்காப்புதான் இதுக்குப்போடணும் அவ்ளோ வசதி இல்ல உனக்கும் அத்த்னை ஆடம்ப்ரம் பிடிக்காது ஆகவே அடுத்ததடவை நேர்ல பாக்றப்போ அழகிய வளை ஒண்ணு தரப்போறேன் வாழ்த்துகள்!
ReplyDeleteஅழகாகவும் சுவையாகவும் காலத்திற்கேற்றாற்போலும் ஒரு அற்புதப் பதிவு!நன்றியும் பாராட்டுகளும் உங்களுக்கு ஷக்தி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா..!
ReplyDeleteவாங்க ஷைலஜா....நன்றி...நன்றி
வாங்க தமிழிவிரும்பி, உங்கள் பின்னூட்டம் படித்ததே பக்தியூட்டுகிறாது :) நன்றி.... தினம் தினம் பக்தி பதிவிடும் உங்களுக்கல்லவா வைர காப்பு போட வேண்டும் :)
பாகவதத்தில் க்ருஷ்ணனைப் பற்றி படிப்பது, பல கோணங்களில் விஷயம் புரிய வைக்க உதவுகிறது என்று நான் நினைக்கிறேன்.
வாங்க மகேந்திரன். நன்றி :) ஆண்டாளின் இனிமை தமிழுக்கே உள்ள அருமையால் இன்னும் அதிகமாகிறது.
அனைவருக்கும் நன்றி.
தமிழ்விரும்பி, ஷைலஜா,
வைர காப்பா :) என்னவோ போங்க :) உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.
இந்தப் பதிவிட்டது என் கண்ணனுக்கு நான் செலுத்தும் சிறு காணிக்கை.
ஒரு முறை பதிவிலோ பின்னூட்டத்திலோ படித்த நினைவு, உங்களுக்கு வந்த பாராட்டை உங்கள் அபிமானக் கண்ணனுக்கு சமர்ப்பிப்பதாக. கண்ணனிடம் காதல் கொண்டாலன்றி இம்மாதிரி எழுத முடியாது. என்ன..உங்களுக்கு முன் அந்த ஆண்டாள் முந்திக்கொண்டு விட்டாள். இருந்தாலும் என்ன அவனது அருள் அள்ள அள்ளக் குறையுமா என்ன. பாராட்டுக்கள்.
ReplyDeleteநிறையவே ரசித்தேன் சகோதரி. அந்த காலத்து ஆட்கள் இன்று இருந்து இருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் எனும் கற்பனை மிகவும் அருமை, அதுவும் கண்ணனுக்கு தூக்கம் ஏது? என முடித்திருப்பது மிக மிக அருமை. ஆஹா வைரகற்கள் பதித்த தங்ககாப்பு, ஆடம்பரம் விரும்பாததால் வளையல் எல்லாம் கிடைக்க இருப்பது நினைத்து சந்தோசம் :)
ReplyDeleteமிக அற்புதமான கற்பனை,படிப்பவர்களை மெய் மறக்கச்செய்கிறது கண்ணன் கதை.
ReplyDelete//எங்கு திரும்பினும் கண்ணன்.//
சிலிர்த்தது.
நன்றி gmb sir... :) ஆண்டாளைப் போல் ஆக்கிவிட்டீர்களே...அவர்களின் கால் தூசி இல்லை என் பக்தி. இன்னும் என்னுள் தர்க்கம் செய்கிறேன்....ஆராய்கிறேன்...இன்னும் முதிர்ச்சி அடையவில்லை :)
ReplyDelete@ v.r
ReplyDeleteநன்றி சகோ!
@ ramvi,
உங்களில் சிலரின் பக்தியை தூண்டினாலே இந்த பதிவின் நோக்கம் நிறைவேறிவிட்டது ராம்வி. ரொம்ப நிறைவாக இருக்கிறது.
sஷக்தி.... உன் வலைப்பூவினை சிறப்பாக சிலாகித்து தனது இடுகையில் திரு அப்பாதுரை எழுதி உள்ளார் அங்கே போய் அவருக்கு நன்றி சொல்லிவிடு. இதான் அவர் வலைப்பூ ...http://moonramsuzhi.blogspot.com/
ReplyDeleteநன்றி ஷைலஜா...உடனே போய் பார்க்கிறேன்.
ReplyDeleteஆண்டாள் எப்போது படித்தாலம் ஆனந்தம்தான். மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் என்று சொன்ன அவளின் பக்தி அன்பு தேன்மலை உருகி வழிவதுபோல சுவையானது. உங்களின் மொழியில் இப்போது ஆண்டாள் திருப்பாவை அருமை.
ReplyDeleteஅவன் போக நிலை கூட
ReplyDeleteஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ" ...
அணு அணுவாய் ரசிக்கவைத்த இனிமையான பகிர்வு.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ஆஹா.. மனசுக்கு நிறைவாயிருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி ஹரணி, ராஜேஸ்வரி, அமைதிச்சாரல். :
ReplyDelete)
வை.கோபாலக்ருஷ்ணன் said:
ReplyDeleteகண்ணனும் ஆண்டாளும்
மிகவும் அழகாக ஆண்டாள் பாசுரங்களுடன், உங்களுக்கே உள்ள நகைச்சுவை ததும்ப மிகச்சிறப்பாகப் பதிவிட்டு உள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு ந்னறிகள். எனக்கு மிகவும் பிடித்த சில இடங்கள் கீழே கொடுத்துள்ளேன்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
=========================
////////////
க. அவள் தரும் ப்ரேமையின் தகிப்பை தாங்க முடியாமல் தானே, நான் பாலும் தயிரும் வெண்ணையுமாக குடிக்கிறேன்... அவள் பூமாதேவியின் வார்ப்பாம் எனக்காகவே பிறந்ததாகச் சொல்கிறாள்..யாராக இருந்தால் என்ன!
க: பக்தியில் பல வகை. பிரேம பக்தியும் ஒருவகை. எத்தனை பேர் இருந்தாலும் நான் நித்ய ப்ரம்மச்சாரி என்று உனக்கு தெரியாதா நப்பின்னை? ராம் அண்ணா வேறு நான் வேறு...ஆனாலும் ரெண்டு பேரும் ஒன்று...
ருக்மிணி: "ஆஹா...எல்லோருக்கும் தெரிந்த பராக்கிரமங்களை நீ இசைக்கும் பொழுது இன்னமும் இனிமையாகிப் போகிறதே...ஆண்டாள்! எங்கள் கண்ணனையே ஆளும் உன்னை ஆண்டாள் என்று சரியாகச் சொன்னார்கள்! இப்பொழுது எங்களையும் உன் இசையால ஆண்டுவிட்டாயடி"
ஆ: ருக்மணி அக்கா, நப்பின்னை அக்கா, யசோதா ஆண்டி...நாலு பஸ் மாறி, விடியக்காலைல உங்க பையனோட ஹிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் பண்ணி, அதை மெனகெட்டு கவிதையாக்கி, புகழ்ந்து ஐஸ் வெச்சா கூட என்னை கண்டுக்க மாட்டேங்கறானே...
ய: நானே இம்மாத இறுதிக்கு பிறகு பெரியாழ்வரிடம் வந்து உன்னை பெண் கேட்கிறேன்...மார்கழி இறுதி வரை நீ பாடும் பாடலை கேட்க ஆவல் மேலிடுகிறது. அதன் பின்னே தான் திருமணம்.
ஆ: அதுக்கு அப்புறம் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்...யசோதா ஆண்டி நீங்க தான் சாட்சி...இன்னும் இந்தக் கண்ணன் எழுந்துக்காம என்ன பண்ணிட்டு இருக்கான்..எழுப்புங்க அவனை..ஆண்டாள் கண்ணனின் அருகமர்ந்து அவனை எழுப்ப முயற்சிக்கிறாள்....
//////////
_________________________
கருத்துக்கு நன்றி வை.கோ சார். தங்கள் கணினி விரைவில் சரியாகி, பதிவிடுவீர்கள் என்ற ஆவலில் எல்லோரும் உள்ளோம்!
ReplyDelete:)
வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html