January 13, 2021

திருப்பாவை பாசுரம் 30 - பாசுரத்தில் தேடிய முத்து

ஆழ்கடலின் முத்து


பாவை நோன்பை கடைபிடிக்கும் வழிகளை, அதன் உயர்ந்த நோக்கத்தை தேமதுரத் தமிழில் பாமாலையாக சூட்டியிருக்கிறாள் ஆண்டாள். விரும்பிய லௌகீக விஷயங்களைப் பெற்றிருந்தால், பாவை நோன்பு இன்னுமொரு ஸ்துதியாகியிருக்கும். நோன்பு நோற்றவர்கள் ஆயச்சிகள். கோபிகைகள். அவர்கள் அடைந்த உயர் நிலையை இங்கு சுட்டிக்காட்டிய கோதை, நமக்கெல்லாமும் பாதை காட்டியிருக்கிறாள்.
.
இந்த பாசுரங்களை அதன் பொருளை, சொல்ல வரும் உயர்ந்த அர்த்தங்களை உள்வாங்கி, பக்தியுடனும் அன்புடனும் பாசுரம் பாடுபவர்கள், நான்கு புஜங்களையுடைய பங்கஜ நேத்திரன் திருமாலின் அனுகிரஹம் பெற்றவர்கள் ஆகிறார்கள். திரு நிறைய பெறுகிறார்கள். திரு என்றால் செல்வம். பொருள் வளத்துடன், அருள்வளம், அறிவுவளம் அனைத்து செல்வங்களையும் பெற்ற பெரும் செல்வந்தர்கள் ஆகிறார்கள். நிரந்தர இன்பம் எய்துகிறார்கள்.
.
நோன்பு நோற்ற கோபியர்கள் அழகானவர்கள் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள். அவர்களை வழி நடத்திய ஸ்ரீவில்லிப்புத்தூரின் ரத்தினமான பெரியாழ்வார் மகளோ நிலமகளே ஆவார். உயர்ந்தவர்களால் பின்பற்றபட்டு, தாயாராலேயே ஆசீர்வதிக்கப்பட்ட விரதம்.
.
கேசி என்ற அரக்கனைக் வதைத்த கண்ணனைப் பாடிப் புகழ்வோம். ஓயாத அலைகள் நிறைந்த வங்கக்கடலை வாசுகியை மத்தாக்கி கடைந்தவன். நம்முள்ளத்து கடலை கடைந்து அதிலிருக்கும் தேவையற்ற விஷத்தை வெளியேற்றி, அமுதமாகிய பக்தி எனும் திருவை வெளிக்கொணர்பவன்.
.
கைபிடித்து இட்டுச்சென்ற ஆண்டாள் ஆழ்வார் பொன்னடி போற்றி. அவன் அடி பணிவோம். பிறப்பின் பெரும்பயன் அதுவே என்று உணர்வோம்.
***
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
***

Rangoli Credit : Suganthi Ravi




January 12, 2021

திருப்பாவை பாசுரம் 29 - பாசுரத்தில் தேடிய முத்து

 

சாஸ்வதமான பந்தம்
.
லௌகீக சுகங்களில் வைராக்கியம் வர மறுத்தாலும், லௌகீகத்தை ஒரு கையில் பிடித்து ஆன்மீக பயணத்தின் பயிற்சியை இன்னொரு கையில் பிடித்தபடி நீடிக்கவும் கடினமாகிறது. உயர்ந்த ஸ்தானத்தில் நிலைபெற்று நிற்க தெளிவும் மனவுறுதியும் அத்தியாவசியம். லௌகீகத்தின் பிடியை மெல்லத் தளர்த்தி இறுதியில் விட்டுவிடும் தைரியம் எல்லோர்க்கும் இருப்பதில்லை.
.
எதனிடம் பற்று வைக்கிறோம் என்பது நம் கையில் உள்ளது. உணவின் மீது பற்று வைத்தால் திருப்தியான நல்ல உணவு கிடைக்கும். பொருள் மீது பற்று கொண்டால் பொருள் சித்திக்கும். புகழைத் தேடினால் புகழ்சேரும். பகவானிடமும் அளப்பரிய பற்று கொண்டால் படிப்படியாக அவனை அணுகலாம். கோபியர்கள் தெளிந்த ஞானிகள். இதுவரை பறைதரும்படி பகவானிடம் பிராத்தித்துக் கொண்டிருந்தனர்.
.
பறை வேண்டியவருக்கு பரிசு தரப்போகிறான். அவரவர் அபிலாஷைகள் நிறைவேறப் போகின்றன. அது நிலைத்து நிற்குமா? என்ற எண்ணம் ஐயத்தை கிளப்புகிறது. நிலையற்ற எதையாவது கேட்டுவிட்டோம் என்று நினைத்து அதனை வரமருளி கபட விளையாட்டு விளையாடுவானோ! கள்வனவன்.
.
கண்ணா எங்கள் கோரிக்கைகளை இப்போது தெளிவாகவே சொல்லிவிடுகிறோம். வைகறைப்போழுதில் நீராடி நியமங்களோடு நோன்பு நோற்று உன் பாதாரவிந்தங்களை சரண் புகுந்தோமே...ஆநிரை மேய்க்கும் ஆயர்க்கொழுந்தே, பசுக்களான நாங்களே நீ பாதுகாக்கும் ஜீவாத்மா. எங்கள் அறிவுக்கு எட்டிய சிறு சேவைகளை புரிந்து உமை அணுகுகிறோம். நீ எங்களை பாராமல் போகாதே. எங்களுக்கு அபயக்கரம் நீட்டாமல் விட்டுவிடாதே.
.
இன்று நீ தரும் பரிசுக்கு மகிழ்ந்து விரதம் முடிக்கும் எண்ணமில்லை. இன்றைக்கு மட்டுமான பரிசு எதுவும் கோரவில்லை. எங்களுக்கு நிலையான பறை வேண்டும். ஏழேழு பிறவிகளுக்கும், உம்முடனேயே சாஸ்வதமான உறவு பூணுவோம். உமக்கே சேவை செய்து, உனக்கே தாசி(தாசன்)யாகி இருப்போம்.
.
எங்களுக்கு வேறேதேனும் அறிந்தோ அறியாமலோ அபிலாஷைகள் இருக்குமாயின் அதனை நீக்கிவிடு. நிலையற்ற இன்பத்துக்கும் துன்பத்துக்கும் உழல வைக்கும் காம- க்ரோத- மோஹ- மத- மாத்சர்யங்களை போக்கிவிடு. ஆசைகள் துறந்திடவே வழிநடத்து.
.
எங்களுக்கு பறையாக, நித்தியமானதொரு பரிசாக நீயே வேண்டும்.... நீ மட்டுமே.
.
***
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்
***
Rangoli Credit: Suganthi Ravi
Photography Source: Internet


திருப்பாவை பாசுரம் 28 - பாசுரத்தில் தேடிய முத்து

 பக்தியோகத்தின் பெருமை


பாசுரம் மொத்தமும் பக்திப்பெருக்கில் உருகி, நமை உருக்குகிறது.
.
அறிவற்றிருக்கிறோம். உன்னுடைய உறவைத் தவிர வேறு எதுவுமே நாங்கள் சம்பாதித்த பொக்கிஷமாகக் கருதவில்லை. பசுக்களை மேய்ப்பதும், கானகத்தில் கூடி, உணவு உண்ணுவதுமாக பொழுதைக் கழிக்கும் எளியவர்கள். எங்களுக்கு மறைகளோ, ஞானமோ, வேதாந்தமோ பிரம்ம-தத்துவமோ தெரியாது. ஆராய்ந்து பார்க்கும் இயல்பும் திறனும் இல்லை.
.
பிரபஞ்சமும், படைப்பும், பெரியதும், புவனமும் புரியவில்லை. புத்திக்கு எட்டவில்லை. நாங்கள் இடைகுலத்தவர். எமக்கு தெரிந்ததெல்லாம் நீ வந்து எங்கள் இடைக்குலத்தில் பிறந்த பெருமை மட்டுமே. எங்களோடு இருந்தாய், வளர்ந்தாய். உனக்கும் எமக்குமான உறவு இன்று நேற்றோடு முடிவு பெறுவதல்ல. நீயின்றி நாங்களும், நாங்களின்றி நீயும் இருக்க இயலாது.
.
அறிவுப் பேதைமையால் உன்னை மரியாதையற்று ஒருமையில் அழைத்திருந்தால், பழகியிருந்தால், விளையாடியிருந்தால், அதனை அன்பின் வெளிப்பாட்டாக கருதி, பிழை பொறுத்தருள் பரந்தாமா.....
.
மானிடகுலம் எனும் இடைக்குலத்தில் தோன்றிய பரம்பொருள். ஆதியந்தமில்லா அரும்பொருள். ரூபமில்லா பெரியோன். நாமெல்லாம் சம்சாரம் எனும் பெருங்காட்டுக்குள் உறவுகளை, ஆசைகளை மேய்த்து, உணவுண்டு உடல்வளர்க்கும் எளிய ஜீவாத்மா.
.
ரூபமேதுமில்லாத பரப்பிரம்மம், நமைப் போன்ற மானிடனாக அவதாரம் தாங்கியது. கருணையின்பால் நம்முடன் விளையாடியவனை, நாம் ஒருமையில் அழைக்கிறோம். உரிமையோடு சாடுகிறோம். அன்பினாலும் அஞ்ஞானத்தினாலும் நாங்கள் மரியாதையற்று நடந்திருந்தால் அவற்றை மன்னித்து எம்மையும் எம் சிறு நோன்பினையும் ஏற்று அருள்வாய்.
.
பாசுரம் பாடியாடும் கோபிகைகள், பக்தியெனும் நல்முத்தினைப் பெற்ற பாக்கியசாலிகள். வேதமும் வேதாந்தமும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் கொஞ்சம் வழிவிட்டு, பின்னர் அவையே பக்தியோகமாகப் பரிமளிக்கிறது.

****
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்
*****
Rangoli Credit: Suganthi Ravi




January 11, 2021

திருப்பாவை பாசுரம் 27 - பாசுரத்தில் தேடிய முத்து

 சூடிக்கொடுத்து சூட்டிக்கொண்டாள்


தன்னிடத்தில் பற்று இல்லாதவரையும் அன்பினாலே வெல்லும் கோவிந்தனே, நோன்பு நோற்ற பலனைக் கண்டு நாடே எமைப் புகழவேண்டும். திருமிக்க பரிசுகளை எமக்கு வழங்குவாய். அதன் பெருமையை ஊர் புகழ, இதுவரை பாலும் நெய்யும் கொள்ளாமல், கண்மை தீட்டாமல், மலர் அலங்காரத்தை ஒத்தி வைத்திருக்கும் நாங்கள் இனி மகிழும் வண்ணம் எமக்குப் பெருமை சேர்ப்பாய்.
.
நீ அளிக்கும் சன்மானத்தால் குளிர்ந்து நாங்கள் விரதம் முடிப்போம். தோள்வளை, கைவளை, செவிப்பூ, தோடு, பாடகம் என்ற அழகிய அணிகலன்களை கொண்டாடி அணிவோம். உயர்ந்த ஆடைகள் உடுத்தி, சோறே தெரியாத அளவு பசுநெய்யூற்றி பக்குவமாக சமைக்கப்பட்ட பால்சோற்றை கூடியிருந்து உண்டு மகிழ்வோம். குளிர்வோம்.
.
பாவை நோன்பு நோற்ற பலரும் சீமாட்டிகள். செல்வந்தர் வீட்டு செல்லப் பெண்கள். ஆனாலும் நோன்பிற்காக பாலும் சோறும் உண்ணாமல் நலிந்திருந்தனர். நோன்புதனை முறைப்படி முடித்து அதன் பலனை இறைவன் அளித்தால் மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
.
ஆண்டாளும் நெய்வாரிப் பெய்யும் பால்சோறு உண்டு அணிகலன்கள் அணிவதைக் கேட்கிறாள். கிடைத்ததா? அவளது கோவிந்தன் ஆண்டாளை திருமணக் கோலத்தில் பெருமைப் படுத்தி தன்னிடம் சேர்த்துக் கொண்டபோது கிட்டியது.
.
எவ்வித அணிகலன்கள் அணிகிறாள்? அவன் நாமத்தையே தோடாக அணிந்து மின்னுகிறாள். கோவிந்தனுக்கு சொல்லப்படும் ஸ்துதி செவிப்புவாகி மலர்கிறது. அவனுக்கு செய்யும் கைங்கர்யங்களை கைவளையாக, வங்கியாக அணிகிறாள். கோபாலனை நோக்கியே நடந்த பாதங்களுக்கு பாடகம் அணியாகிறது. ஸ்தூலமாகிய இப்பூவுடலை உதிர்த்து கோலோகம் செல்லும் புத்தாடை அணிகிறாள். அவள் உண்ணுவதெல்லாம் அவனைப் பற்றிய எண்ணமே, கொண்ட பிரேமையே நெய்யாக மிதக்க பாலன்னம் இனிக்கிறது. அனைத்து பக்தர்களோடும் கூடிக் குளிர்க்கிறாள்.

****
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
*****
Rangoli Credit : Suganthi Ravi



January 10, 2021

திருப்பாவை பாசுரம் 26 - பாசுரத்தில் தேடிய முத்து

கோதையின் தாயுள்ளம்


அன்பிற்கினியவனே, என்ன வேண்டும் எங்களுக்கு, உனக்கே பணிபுரியும் பேரானந்தத்தைத் தவிர! எங்களுக்கு முன் சென்ற பெரியோர்கள், ஞானிகள் கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து மார்கழி நீராடி நோன்பு நோற்றிருக்கிறோம். நோன்பு நிறைவேற என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுத்தருள்வாய்.
.
எங்கள் விரதம் சாதாரண விரதமல்ல. நோன்பு நோற்றது உன்னடி பற்றியிருக்கவே. நீ பெரியவன். பிரளய காலத்தில் ஆலிலையில் ஒட்டுமொத்த உலகத்தை உன் மணிவயிற்றுக்குள் சுருக்கி, பிஞ்சுககாலின் கட்டைவிரலை செவ்வாயில் வைத்து ஞாலத்தின் ஒடுக்கத்தை உணர்த்துகிறாய். அத்தனையும் உன்னுள் அடக்கம். நீயே அம்ருத நிலையில் ஞானத்தின் வடிவான ஆலிலையில் பிரம்மவடிவாக நிற்கிறாய்.
.
பரமபுருஷனாக நீயே இருக்கையில் உன்னிடம் அற்ப விஷயங்களை நாடி வருவோமா?! சின்னச் சின்ன சிற்றின்பங்கள் வேண்டவில்லை. பொன்னும் பொருளும் மண்ணும், ஆட்சிபீடமும் வேண்டுபவர்கள் அல்ல. பெரிய பெரிய விஷயங்களைத் தான் வேண்டப் போகிறோம். என்னவென்று சொல்கிறோம் செவிசாய்த்து திருவருள் புரிவாய்.
.
நீலக்கல் நிறத்து ரத்தினமே, உன் வெண்சங்கினைப் போல பல சங்குகள் வேண்டும். ஞாலத்தையே மங்கலப் பேரொலி கொண்டு எழுப்பும் உன் வெண்சங்கு பகைவர்களை நடுக்கச்செய்யும். உன் சங்கநாதமே பக்தர்களை துயிலெழுப்பி விழிப்பூட்டும். எங்களுக்கும் பல சங்குகள் வேண்டும். பெரிய பறைகள் வேண்டும். உனது ஏற்றத்தை இன்னிசையாக்கி பல்லாண்டு பாட பெரியோர் வேண்டும். மங்கல விளக்குகளும், நாங்கள் உனது திருநாட்டினை அலங்கரிப்பவர்கள் என்று சுட்டிக்காட்டும் கொடியும், வெளியிலிருந்து எமைத் தாக்கும் பனியும் குளிரும் தீண்டாதிருக்க விதானமும் வேண்டும்.
.
இங்கு சுட்டிக்காட்டப்படுவதெல்லாம் பரமாத்ம நிலை. பக்தர்களை மஹான்களே வெண்சங்கும் முரசும் கொண்டு எழுப்புகிறார்கள். திருமாலின் திருப்புகழை பாடியாடி அவன் பெருமையை நமக்குப் புகட்டுகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுணர ஞானமெனும் தீபங்கள் ஏந்தியிருக்கிறார்கள். பரமனுக்கே பணியும் வைகுந்தவாசிகள் என்ற அடையாளக் கொடி தாங்கியிருக்கிறார்கள். உட்புறத் தேடலில் ஈடுபடும் போது வெளிப்புறத் தடைகள் தீண்டாதிருக்க, பக்தி எனும் விதானம் கொண்டிருக்கிறார்கள்.
.
இவையெல்லாம் ஆண்டாள் கேட்டுப் பெறுகிறாள். இல்லை. அவளே பூதேவி பிராட்டி. நமக்காக கேட்கிறாள். நமக்காக தூது சென்ற தாயாகிறாள். ஆண்டாளின் திருவடி சரணடைந்து அவள் கருணையை போற்றி நிற்போம்.
****
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்
*****
Rangoli Credit Suganthi Ravi :



January 09, 2021

திருப்பாவை பாசுரம் 25 - பாசுரத்தில் தேடிய முத்து

தேவகீநந்தனுக்கே சேவகம்

Photography Source Internet:
Rangoli Credit : Suganthi Ravi




என்ன வேண்டும் உங்களுக்கு! என்றானாம் கண்ணன். புகழ்ந்தேத்திப் பாடிக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு என்ன வேண்டுமென்று அவனுக்குத் தெரியும்! பக்தர்கள் வாயினாலேயே தங்களுக்குப் பிரியமானதை வரமாக கேட்டுப் பெறட்டும் என்றே நிதானிக்கிறான்.
.
எத்தனையோ பக்தர்கள், முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள் தவம் செய்கின்றனர். தவத்தின் பயனாக வரம் வேண்டுவதும், அதனை வழங்குவதும் இறைவன் சித்தப்படியே நடக்கிறது. யாது வரம் வேண்டப் போகிறார்கள் என்று மும்மூர்த்திகளுக்கோ முழுமுதல் கடவுளுக்கோ தெரியாததல்ல.
.
என்ன வேண்டும் உங்களுக்கு! என்ற கிடைத்தற்கரிய தருணத்தை முழுவதுமாகப் பாழ்படுத்தி, தன் சுயநலத்தின் பொருட்டு சாகாவரம் பெற்ற சகலபுவனத்தையும் அராஜகம் செய்த அசுரர் குலத்தவர் ஏராளம்.
.
காலநேமி என்ற அசுரன் முற்பிறப்பில்ம ஹாவிஷ்ணுவால் சம்ஹரிக்கப்பட்டவன் மறுபடி கம்சனாக பிறந்திருக்கிறான். கம்சனை கஞ்சன் என்று விளிக்கிறாள் ஆண்டாள். கயவன். சுயநலமிக்கவன். கடும்பற்றுக்கு ஆட்பட்டு தன்னலத்தை தவிர பிறர் நலம் கருதாதவன். ஆசைத் தங்கை தேவகியின் மைந்தனைப் பற்றி அசரீரி ஒலிக்கக் கேட்டதும் தன் அன்பைத் துறந்தவன். பிஞ்சு பாலகர்களைக் கொல்லத் துணிந்தவன். அன்பை வழங்கத் தெரியாத கஞ்சன், கம்சன்.
.
கண்ணன் பிறந்தபின்னும் கொடுத்த தொல்லைகள் ஏராளம். ஒளித்து வளர்க்க வேண்டிய கட்டாயம். ஒளிந்து வளரவேண்டிய திருச்சித்தம். யசோதையும் நந்தகோபரும் வரம் பெற்றிருந்தனர். பகவானின் பிள்ளை விளையாட்டை கண்டுகளிக்கும் பாக்கியம். தேவகி வசுதேவரின் வேண்டுதலையும் நிறைவேற்றி, தேவகியின் திருவயிறு உதித்தார். ஏராளமான பக்தர்களின் கோரிக்கைகள். தவமாகப் பெற்ற வரங்கள்.
.
மரீசி மகரிஷியின் புதல்வர்களின் சாபம் நீக்குதல், சிசுபாலனை வதம் செய்து, துவார பாலகர்களை ஆட்கொள்வது, காளிங்கனுக்கு விடுதலை, வீடுபேறு விரும்பிய ஞானியர் கோபிகைகளாக, ஜீவ-பரமாத்ம ஐக்கியத்தின் ஆனந்தத்தை அவர்களுக்கு வரமளித்தல், பூதகியின் முக்தி, பூபாரம் குறைக்க பூதேவிக்கு அளித்த வரம், ஒரே அவதார நிகழ்வின் பாத்திரங்களாக இத்தனை பேரையும் நுழைத்து, தக்கதொரு பொம்மலாட்டம் நிகழ்த்தி, அவரவர்களுக்கு ஏற்ற வரத்தை வழங்கி மகிழ்ந்தான். சிலருக்கு முக்தி, வேறு சிலருக்கு பக்தி.
.
வேண்டிய வரத்தை புத்திசாலித்தனமாக யாசிக்க வேண்டும். பக்தியோடு குழைத்து பெறவேண்டும். கோதை இப்பாசுரத்தில் எப்படிப்பட்ட வரம்பெறுவது என்று சாதாரணர்களாகிய நமக்கு உணர்த்துகிறாள்.
.
தேவகி என்ற ஒருத்தியின் மைந்தனாகப் பிறந்து யசோதையிடம் ஒளிந்து வளர்ந்தாய். முலைப்பால் அருந்தும் அரும்புப் பருவத்திலே கம்சன் ஏவிய இடர்களை தகர்த்தெறிந்து, உன் உயர்ந்த இருப்பை நிலைநாட்டினாய். நீ யார் என்பதை அவன் உணரத்துவங்கியதும் வயிற்றில் பயமெனும் நெருப்பு. பக்தர்கள் வயிற்றில் கருவாக ஜனித்து பால்வார்த்த நீ, பகைவர்க்கு தீவார்க்கிறாய்.
.
உன்னிடம் நாங்கள் யாசகம் பெறவே வந்தோம். உன் உயர்ந்த குணத்தை, நீங்கா செல்வத்தை போற்றிப் புகழ்ந்தபடிசேவை செய்தே நிற்பதால், எங்கள் வருத்தம் தொலைந்து போகும் நிலையருள்வாய். நீங்காபக்தியை கேட்டுப் பெறுகிறாள். சேவை செய்தே உய்யும் நிலையை வேண்டி நிற்கிறாள்.
****
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
*****








January 08, 2021

திருப்பாவை பாசுரம் 24 - பாசுரத்தில் தேடிய முத்து

திருமாலின் திருவடியே போற்றி போற்றி

.
எப்பேர்ப்பட்ட வீரன் நீ. உனைக் கொண்டாடுவது நாங்கள் செய்த பெரும்பேறு. முன்னோர்கள் செய்த வினைப்பயனே உன்னை நினைந்து உருகும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். ஆண்டாள் பாடிய பாசுரமுத்துக்கள் ஒவ்வொன்றும் எம்பிரானின் பெருமைகளை உரைத்துக் கொண்டே இருக்கிறது.
.
பகவானின் பாதத்தைப் போற்றும் பாசுரம். எப்படிப்பட்ட பெருமையான பாதங்கள்! பாத அரவிந்தங்களை சரண் அடைதவர்களுக்கு பிறப்பற்ற சூழலைத் தந்து காத்தருளும் கவசம். பாதபூஜை, பாதுகா ஸ்லோகங்கள் மற்றும் குருமாரின் பாதத்துளிகளின் பெருமைகளும் ஞானிகள், மஹான்களின் பாதங்களே நமக்கு அபயமளிக்கும் ரக்ஷை என்று உணர உதவுகிறது. வீட்டிலும் கூட பெரியவர்களின் பாதம் பணிதல் நம் செருக்கை மட்டுப்படுத்த உதவும். பெரியோரின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.
.
பாதங்களுக்கு அத்தனைப் பெருமை. உலகளந்தவனின் பாதங்களின் விசேஷம் சொல்லிலடங்கா. ஓங்கி உலகளந்தவனிடம் தனி அபிமானம் அவளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பாசுரத்தில் கொண்டாடுகிறாள். பிஞ்சுப் பாதங்களால் செருக்கை அடக்கியவன். மஹாபலியின் ஆணவத்தை கால்களால் அடக்கிய திருவடிகளே போற்றி. அதே போல் எம் ஆணவம் கொன்று ஆட்கோள்வாய். மூன்றே அடிகளால் மூவலகம் அளந்த பெருமைக்குரிய பொன்னடிகள் போற்றி.
.
இராவணனை ஜெயித்து ஆட்கொள்ள அழகிய லங்கைக்கு நடந்தே சென்ற வலிமையுடைய பூம்பாதங்களுடைய வெற்றிச்செல்வனுக்கு வந்தனம். எத்தனை பெருமைக்குறிய கால்கள். பாதுகையையும் பரதனுக்கு அளித்து, முட்களிலும் கற்களிலும் கால்வைத்த ஸ்ரீராமனின் திருப்பாதங்கள் சரணம்.
.
சக்கரவடிவம் தாங்கிய சகடாசுரனை பிஞ்சுக்கால்களால் உதைத்து துவம்சம் செய்த புகழ்மிக்க பொற்றாமரையடிகளை போற்றுகிறோம்.
.
வத்ஸாசுரனை சுழற்றியடித்தவன் திருவடியின் திருக்கழலே போற்றி. வத்ஸாசுரனும் கபித்தாசுரனும் கம்சனால் ஏவப்பட்டவர்கள். வத்ஸாசுரன் இளங்கன்றின் வடிவம் பூண்டு, ஆயர்களின் பசுக்களுடன் இணைந்தான். கண்ணனை வீழ்த்தும் எண்ணத்தின் மடமை. கபித்தாசுரன் அங்கே விளாமர வடிவமெடுத்து ஊன்றிக்கொண்டான். இருவரும் மாயாரூபம் தரிப்பதில் தேர்ந்தவர்கள். கண்ணன் வத்சாசுரனைக் கண்டுகொண்டான். கன்றின் பின்னங்கால்களையும் வாலையும் பிடித்து தட்டாமாலை சுற்றி வீசியெறிந்தான். வத்ஸாசுரன் விளாமரத்தில் போய் விழுந்து பெரும் சத்தத்துடன் மடிந்தான். அவன் இடித்த வேகத்தில் விளாமரமாக இருந்த கபித்தாசுரனும் வேரற்று சாய்ந்தான். இருவரும் அசுர உருவத்துடன் பூமியதிர வீழ்ந்து மாண்டனர். அந்த வத்ஸாசுரனின் கால்களை சுழற்றி அடித்த வீரன் பிஞ்சுத்திருவடியின் திருக்கழல்களை போற்றுகிறோம்.
.
ஸ்ரீக்ருஷ்ணனின் திருவடியைப் போற்றிய கோதை, அபயளிக்கும் அவன் கைகளை நமஸ்கரிக்கிறாள். கைகால் பிடிப்பது புவியில் மானிடப் பிறப்பெடுத்த சாதாரணருக்கு செய்ய வேண்டியதை விடவும் இறைவனின் கைகால் பிடித்தால், அவன் நமை கைவிடாது அழைத்துச் செல்வான். கைபிடித்து உயர்த்தி வைப்பான்.
.
இந்திரனின் கோபத்துக்கு ஆளான ஆயர்குலத்தை கோவர்தனை கிரியை சிறு சுட்டுவிரலால் அபயமளித்த திருக்கரங்களை உடையவனின் காருண்யத்துக்கு தலைவணங்குகிறோம். பகைவர்களை பந்தாடி வெற்றிகண்ட உன் திருக்கை வேலை நமஸ்கரிக்கிறோம்.
.
உன்னை, உன் வீரத்தை பாடியாடிக் கொண்டாடி திருவடி பணிந்து, சேவகம் செய்யவே உன்னருள் வேண்டி வந்திருக்கும் எங்களுக்கு உன் அபயக்கரம் நீட்டு.

****
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
****

Rangoli Credit : Suganthi Ravi