என்ன ஏதென்று பாராமலே, "ஐவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" கூறியதால் தாய் சொல் மீறாமல் பாண்டவர்கள் பாஞ்சாலியை மணந்தனர், என்ற காரணம் ஒப்புக்கொள்ளும் படியாக இல்லை. "இங்கே பாருங்கள் அம்மா, இவள் பெண், வஸ்து அல்ல, அதனால் அவளுக்கு பிடித்த ஒருவனுக்கே மணம் புரிய சம்மதியுங்கள்" என்று கூறியிருந்தால் விவகாரமே இல்லை. எத்தனையோ பேசியவர்கள் இதையேன் பேச/விளக்க மறந்தார்கள்?
மின்மடல் செய்தியொன்று குறிப்பிடத் தோன்றுகிறது. அனைவரும் படித்திருக்கலாம்.
"பெண்களுக்கு தோதான/பிடித்தமான/ மணப்பதற்கு ஏற்ற ஆண்கள் இங்கு கிடைபார்கள்" என்ற விளம்பரத்தைப் படித்து, பல பெண்கள் உள்ளே நுழைந்தார்களாம். கடைக்குள் நுழைந்த பெண் தேவையான ஆண்மகனை தேர்ந்தெடுக்க முதல்தளம் நோக்கி பயணிக்கிறாள். முதல் தளம் இறங்கும் வாயிலில் "இங்கே-அழகான ஆண்கள் உள்ளனர். மேற்கொண்டு தேவைக்கு அடுத்த தளம் செல்லவும்" என்று எழுதியிருந்தது. உடனே அவளும் சரி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று இரண்டாம் தளம் ஏறுகிறாள். "இங்கே-அழகும் அறிவும் நிரம்பியவர்கள்" என்று எழுதியிருந்தது. அவளுக்கு மேலும் ஆவல் மேலிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அழவும், அறிவும், பண்பும் செல்வமும், உயர்ந்து கொண்டே போக, ஐந்து தளங்களைத் தாண்டி ஆறாம் தளத்தின் பொத்தானை அமுக்கிறாள்.
"மன்னிக்கவும்! நபர் எண்ணிக்கை:1001900 . உங்கள் தேவைக்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. நீங்கள் திரும்பிச் செல்லலாம். நன்றி!" என்றிருந்ததாம். பெண்ணின் (மனிதனின்?) திருப்தியற்ற குணத்தை விளக்குவதாக இருக்கிறது இப்புனைவு.
இதே போல் ஆண்களுக்கும் கூட, தனக்கு ப்ரியமானவள் அழகும், குணமும், பண்பும், வேலைக்கு செல்பவளாகவும், சமையல் கலையில் நளன் போலும், வீட்டுவேலை தெரிந்தவளும், பெரியோரை மதிப்பவளும், பெற்றோரிடம் விட்டுக் கொடுத்து போகும் குணமுடையாளும், பிறன் மனை நோக்காமல் இருப்பவளும், இன்னும் அடுக்கிக்கொண்டே போனால் கை வலிக்கும். தேவைகள் முடிவதில்லை... ....சரி நாம் பாஞ்சாலி கதைக்கு வருவோம்.
'இன்னார்க்கு இன்னார்' என்று எழுதி வைத்த தேவன் எழுத்தின் பேரில்(அல்லது விதி, சான்ஸ், freewill), எடுக்கும் முடிவுகள் வேறுபடுகிறது. குந்தியின் பேச்சைக்கேட்டு ஐவரும் சம்மதித்தனர் என்பது சரியான விளக்கமாக அமையவில்லை. வேறு விளக்கம் உண்டா எனில், திரௌபதியின் பூர்வ கதை விளக்கங்கள் இதற்கு துணை போகின்றன. ஐவரை ஒருத்தி மணப்பதா என கர்ணன் உட்பட பலரும் பழிச்சொல் பேசுகின்றனர். அப்போழுது அங்கு வரும் வியாசர் பாண்டவ்ர்களில் பூர்வ சரித்திரத்தை விளக்குகிறார். ஐந்து தேவர்களாக இருந்தவர்கள், சாபத்தினால் பூலோகம் வந்துள்ளனர். தர்மதேவன், வாயு இந்திரன், அஸ்வினி தேவர்களுக்கு மகன்களாகப் பிறந்து, நற்செயல் புரிந்து இறைவனை வந்தடைவதாக சிவபெருமான் திருவாய் மலர்ந்திருப்பதாகக் பூர்வக்கதை.
நளனுக்கும் தமயந்திக்கும் மகளாகப் பிறந்த நளாயினி நல்ல கணவனை வேண்டி தவம் புரிகிறாள். பெண்ணுக்கே உரிய ஆவலுடன், தன் கணவனாக தகுதிபெற்றவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விவரிக்க, 'ஒருவனுக்கே இத்தனை குணங்களும் இருப்பது அரிது, ஆகவே நீ ஐவரை மணப்பாய்' என்று சிவன் வரமளிக்கிறார். நல்ல கணவன் அமையப் பெற வேண்டும் என்று ஐமுறை கேட்டு, ஐந்து முறையும் சிவனும் வரமளித்ததால் ஐவரை மணந்தாள் என்றும் புராணம் கூறுகிறது. வருடம் ஒருவருக்கு மனைவியாக இருந்து, மீண்டும் கன்னியாகி இன்னொருத்தருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் குறிப்பு இருக்கிறது. அதனால் இவள் "நித்திய கன்னி" என்ற பெருமைக்கும் உடையள்.
ஐவருக்கும் உண்மையாக விளங்கியவள், அவர்களை சமமாக பாவித்தாளா? இறுதியாத்திரையாக ஹிமாலயம் செல்லும் வழியில் ஐவருடனும் புறப்படும் பாஞ்சாலியே முதலாவதாகத் துவண்டு இறந்து போகிறாள். ஐவருக்கும் மனைவியானவள், தன்னை முறையாய் வென்ற அர்ஜுனன் பால் அதிக அன்பு கொண்ட பாபத்தின் சுமையால், அவள் பயணம் தடைபட்டது என்று யுதிஷ்டிரர் விளக்குகிறார்.
எந்தக் கதை எப்படியானாலும், வாழ்கையில் பல விஷயங்கள் நம்மை மீறியும், நமக்கு உடன்பட்டும் நடக்கிறது, எதனால் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன ஏன் சில சம்பவங்கள் நிகழ்கின்றன என்று விளக்கம் தேட முற்பட்டால், கேள்விகள் தேங்கியிருக்க, விடை தேடும் படலத்தில் தொலைந்தே போய்விடுகிறோம்.
