அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கடைவீதிக்கு சென்ற நினைவுகள் இனியவை. பெரிய பெரிய வாகனங்கள் அவ்வப்போது விரைவதைக் கண்டு மிரண்டு, அம்மாவின் புடவைத் தலைப்பில் பாதுகாப்பு நாடிய நாட்கள். அம்மா விரைவாக நடப்பாள். அவள் பின்னே கால் நிலத்தில் பாவாமல் ஓடியிருக்கிறேன்.
.
விற்பனைக்கு வந்திருக்கும் நவீனப் பொருட்களைப் பற்றிய features அவளுக்கு அத்துப்படி. Electronic, electrical items முதல், தங்கம் வெள்ளி வரை வரை அத்தனைப் பொருட்களைப் பற்றிய அறிவும் விரல் நுனியில். அவளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று பெருமைப் பட்டிருக்கிறேன்.
..
அம்மா உனக்குத் தான் எல்லாம் தெரியும். நீயும் வாம்மா. இன்று அவளையும் கூட்டிப்போகிறோம்.
அம்மா காரிலிருந்து வெகு நிதானமாக இறங்குகிறாள். கதவைத் திறக்க சிரமப்படுகிறாள்.
அம்மா இரும்மா என கதவைத் திறக்க விரைகிறேன். மிக ஜாக்கிரதையாக இறங்குகிறாள். கடைவீதிகளில் என் கைபிடித்து அல்லது என் மகளின் கைபிடித்து தேர் போல் அசைந்து அழகாக வருகிறாள். தேடித் தேடி சில பாரம்பரிய பொருட்களை எங்களுக்காக வாங்கி பையில் திணிக்கிறாள்.
.
ஒவ்வொரு கடையும் சின்ன mall போல பிரம்மாண்டம் என்பதால், சற்று நேரத்திலெல்லாம் அயர்ச்சி அடைந்து விட்டாள்.
பாக்கிய நீங்களே வாங்கிண்டு வாங்கோ. நான் இங்கயே wait பண்றேன்.
கடையை விட்டிறங்கி விரைந்து வரும் வண்டிகளை பார்த்து மிரண்டு என் கையை இறுக்கிப் பிடிக்கிறாள்.
.
உடலெனும் பையை சுமக்கும் ஜீவன் நாம். பிறந்து வளர்ந்து க்ஷீணிக்கும் உடலுக்கு வலு குறையத் துவங்குகிறது.
பிறவிகளின் பாடங்கள் கற்றபின் அவரவர் பாதையில் பறந்துவிடும் நிலையற்ற பயணம்.
உறவுகளின் பெயர்களும் வடிவங்களும் தொடர்வது இல்லை.
..
பிறவிகள் தோறும் கணக்கற்ற அம்மாக்கள், அப்பாக்கள், வாழ்க்கைத் துணைகள், மகன்கள் மகள்கள் காதலர்கள், காதலிகள், அத்தைகள் மாமன்கள்... ... எவரும் அதே கூடுகளில் தங்களை அடைத்துக் கொண்டு நமைத் தொடர்வதில்லை. அவர்கள் தாங்கும், தாங்கப்போகும் வடிவங்களிலும் அதன் தரமும் நிரந்தரம் இல்லை.
.
இத்தனை தெரிந்தும் பந்தமும் பாசமும் குறைவதே இல்லையே!!!
.
அன்புக்குரியவர்களிடம்....நான் மீண்டும் மீண்டும் மீண்டும் தோற்றுவிடுகிறேன். அவர்களின் அன்புப் பிடியில் வகையாக சிக்கிக் கொண்டு விடுகிறேன். ஆத்மஞானத்துக்கான ஆன்மீகத்தேடலெல்லாம் சும்மா நடிப்பு,
மனதில் ஓரத்தில் ஏதேதோ நினைவுகள் ஈரமாக கசிந்து கண்களை நனைக்கிறது.
ShakthiPrabha