August 07, 2022

In pursuit of "self-realisation" - #Deivathin_kural Volume 6

ஆத்ம சாதனையின் ஆறு அங்கங்கள்: “சமம்”, “தமம்”, “உபரதி”, “திதிக்ஷை”, “ச்ரத்தை”, “ஸமாதானம்”


Samam: சமம் என்பது என்ன?

சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்பதாக ஐம்புலன்களையும் விவேகத்தாலும் வைராக்யத்தாலும் அடிக்கடி அலசிப் பார்த்து இவை யாவும் ஆத்மாவுக்கு ஹானியே செய்கின்றன என்று தெரிந்து கொண்டு வெறுத்துத் ஒதுக்கி விட்டோமானால் அப்புறம் மனஸை சாந்த ஸெளக்ய ஸ்வரூபமான, ஆத்மா என்பதான, சாதனையின் லக்ஷ்யத்தில் நிறுத்தலாம். அதாவது நானா விஷயங்களுக்காக ஆலாப் பறந்து கொண்டு நாலா திசையிலும் ஒடுகிற மனஸை அப்படி ஒடாமல் அடக்கி லக்ஷ்யம் ஒன்றிலேயே நிறுத்தலாம். அப்படி அடக்குவதற்குப் பேர்தான் சமம்.

சுருக்கமாகச் சொன்னால், மனஸை அடக்குவதே சமம்.

Dhamam

“தமம்” என்பது புலன்களை அடக்குவது. புலன் என்பது இந்த்ரியம். கர்மேந்த்ரியம் ஐந்து. ஞானேந்த்ரியம் ஐந்து. கார்ய ரூபத்தில் ஒன்றைச் செய்ய சக்தி வாய்ந்தவை கர்மேந்த்ரியங்கள். இந்த இந்த்ரியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்தில்லாததால்தான் அத்தனை அனர்த்த பரம்பரையும் உண்டாகின்றன. இவற்றை அடக்கி வைத்தால்தான் ஆத்மலோகத்தில் சேரலாம். அப்படி அடக்குவதுதான் ‘தமம்’.
.
‘தமம்’, ‘சமம்’ இரண்டும் அடக்கம் என்ற ஒரே அர்த்தந்தான் என்பதால், மனவடக்கம் புலனடக்கம் இரண்டையும் சேர்த்துப் பொதுவாக ‘அடக்கம்’ என்னும் போது அதை ‘தமம்’ என்று மட்டுமோ, ‘சமம்’ என்று மட்டுமோ சொன்னாலும் ஸரியானதே. மனவடக்கமேயான சமம் மாத்ரமில்லாமல், புலனடக்கமான தமமும் மனஸின் கார்யந்தான். ஒரே மனஸ்தான் இரண்டையும் சாதிப்பது. ஆகையால்தான் சம-தமங்கள் ரொம்பவும் கலந்து இணைந்து வருவது.

வெளியில் வஸ்துக்கள் இருந்து அவற்றை கண், காது, நாக்கு முதலானவை அநுபோகம் பண்ணாத நிலையிலும் மனஸ் அந்த அநுபோகங்களை சதா காலமும் எண்ணமிட்டுக் கொண்டு சஞ்சலப்படுவது. மனவடக்கம் என்பது அந்த எண்ணக் கட்டப்பாடுதான் – thought control. அதை சாதிப்பது லேசில்லை. அதனால் முதலில் ஓரளவுக்கு வெற்றிகரமாகப் பண்ணக்கூடியது உள்ளே மனஸில் ஆசையெல்லாம் போகாவிட்டாலுங்கூட, வெளியேயாவது இந்த்ரியங்களைக் கொண்டு ஸ்தூல வஸ்துக்களை அநுபோகம் பண்ணாமல் கட்டிப்போடுவதுதான் – அதாவது தமந்தான்.

விரதம், உபவாஸம் என்று கொஞ்சம் பட்டினி போடுவது, கண்ட காட்சிகளைப் பார்க்காமலிருப்பது, அந்த நாட்களில் ரதி ஸுகத்தை விலக்குவது என்றிப்படிப் பிடிவாதமாகப் பண்ணினால் உள்ளேயிருக்கும் மனஸுமே அந்த ஆசைகளை அடக்கிவிட்டு இருக்கும் ‘சம’அப்யாஸத்திற்குக் கொஞ்சம் பக்குவமாகும். விஷயங்கள் – அதாவது இந்த்ரிய போகத்திற்கான வஸ்துக்கள் – இல்லாத ஸமயத்தில்கூட மனஸ் அவற்றின் நினைப்பிலேயே அலைவதை முதலில் ஓரளவு அடக்கிவிட முடியும்.

Uparathi

எந்தெந்த காரணத்தை உத்தேசித்து இந்த சஞ்சலமான, ஸ்திரமில்லாத மனஸ் வெளியிலே ஓடுகிறதோ அந்தந்த காரணம் ஒவ்வொன்றிலிருந்தும் அதை இழுத்துப் பிடித்து ஆத்மாவின் வசத்தில் ஒப்புவித்து விட வேண்டும் என்கிறார். அப்படி ஆத்மாவிடம் வந்து நிற்கும் நிலைதான் ஷட்கத்தில் அடுத்ததான உபரதி. ‘உபரதி’ என்றால் ‘ஸ்டாப்’ ஆகிவிட்டது என்று அர்த்தம். மனசு ஓய்ந்துபோய் விட்ட நிலை. சம, தம அப்யாஸத்தினால் மனஸ் வெளியிலுள்ள பிடிப்பு எல்லாவற்றிலும் விடுபட்டு, ஒரு செயலுமில்லாமலிருப்பது உபரதி.

உபரதி நிலையை அடைந்தவன் உபரதன். வைராக்யம் என்பதும் ஆசை போன நிலைதான். ஆனாலும் அப்போது விஷயங்களில் வெறுப்பு தலை தூக்கி நின்றது. வெறுத்து ஒதுக்கிய நிலை அது. இப்போது உபரதியில் வெறுப்புமில்லை, ஆசையுமில்லை.

மனஸ் ஒழிவடைந்திருக்கிறது. ஒழிவு என்றால் ஒரேடியாக ஒழிந்து விடவில்லை. அந்த ஒழிவு – அழிவு – ரொம்பக் கடைசியில்! இப்போதைய ஒழிவு என்பது ஓய்வு மாதிரி. ஆத்மாநுபவம், அதன் ஆனந்தம் இல்லை.

மனஸ் ‘உபரதி’யில் ஓய்ந்து விட்டால் அப்படியே வெறுமையாக முடிந்து விடுமா? முடியாது. அப்போதைக்கு அப்படியிருந்தாலும் ஈச்வராநுக்ரஹம் என்பது அதை அப்படியே விட்டு வைக்குமா என்ன? ப்ரஹ்ம ஸத்யம் என்ன என்று தெரிந்து கொள்வதே லக்ஷ்யமாக ஒரு குழந்தை ஆசையெல்லாம் அடக்கிப் போட்டிருக்கும்போது மனஸு ஓய்ந்து நின்று விடும் நிலையோடு அவன் கதை முடியட்டுமென்று ஈச்வரன் விட்டுவிடுவானா? அதற்காக உடனே ஸத்ய ஸாக்ஷாத்காரத்தைக் கொடுத்து விடவும் மாட்டான். ஜீவனுடைய கர்மாவெல்லாம் அழிந்த அப்புறந்தான் அதைக் கொடுப்பான்.

‘உபரதி’க்கு அடுத்தாற்போல் திதிக்ஷை. “அடுத்தாற்போல்” என்றால் உபரதியில் ஸித்தி பெற்றதற்கு அப்புறம் திதிக்ஷை என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. பல தடவை சொன்னதை – “worth any number of repitition” என்கிறார்களே, அப்படி எத்தனை தடவை சொன்னாலும் தகும் விஷயத்தை – மறுபடி சொல்கிறேன்: ஆத்ம ஞானத்தை ஸாதித்துக் கொள்ள அநேகம் பண்ண வேண்டியிருக்கிறது. இவற்றில் ஒன்றை ஆரம்பித்துப் பூர்ணமாக அதை முடித்துவிட்டு, அப்புறம் இன்னொன்றை ஆரம்பித்து முடிப்பது, என்று நினைத்துக் கொண்டுவிடக் கூடாது.

போலீஸ் உத்யோகத்திற்கு இன்னின்ன யோக்யதாம்சம் – இவ்வளவு வயஸாயிருக்க வேண்டும், இன்ன படித்திருக்க வேண்டும், இவ்வளவு ‘ஹைட்’ இருக்கணும், ‘வெய்ட்’ இருக்கணும், ரிஸர்வேஷன் கொள்கைப்படி இன்ன ஜாதியாயிருக்கணும், இப்படிப்பட்ட நடத்தை இருக்க வேண்டும் என்று யோக்யதாம்சங்கள் – வைத்தால் அவற்றில் ஒன்று ஆன அப்புறம் இன்னொன்று என்று அர்த்தம் பண்ணிக் கொள்வார்களா? அந்த வயஸு லிமிட்டை முதலில் பூர்த்தி பண்ணனும், அத்தனை வயஸான அப்புறம் படிக்க ஆரம்பித்து படிப்பு குவாலிஃபிகேஷனைப் பூர்த்தி பண்ணணும், படித்து முடித்த அப்புறம் குறிப்பிட்ட ‘ஹைட்’டுக்கு உசரணும், ‘வெயிட்’ போடணும், அப்புறம் அந்த ஜாதியாகணும், அதற்கப்புறம் அந்த மாதிரியான நடத்தையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எப்படியிருக்கும்? ஓரளவுக்கு அந்த மாதிரி தான் ஒன்றுக்கப்புறந்தான் இன்னொன்று வருகிறதென்று நினைப்பதும்!

பல க்வாலிபிஃகேஷன்கள் தேவையாயிருப்பதால் அவை அத்தனையையும் சாதனாங்கங்களாக (ஆசார்யாள்) சொன்னார். ஆனால் அந்த ஆரம்பத்திலேயே முமுக்ஷுத்வம் உள்பட எல்லாமும் கொஞ்சம் கொஞ்சம் அப்யாஸம் பண்ணித்தானாக வேண்டும், ஒவ்வொன்றோடேயே – அந்த ஒன்றுக்குள்ளேயே என்று கூடச் சொல்லலாம்- பாக்கி அத்தனையும் கொஞ்சம் கொஞ்சம் வரத்தான் செய்யும்.

Thithikshai

திதிக்ஷை என்றால் ஸஹிப்புத்தன்மை, பொறுமை. உபரதிப் பாடத்தை ஓரளவுக்கு நன்றாகப் படித்து வெற்றிக் கண்டால், ஸாதாரணமாக வாழ்க்கையில் ஏற்படுகிற நார்மல் சுக துக்கங்களில் இப்போது நாம் ரொம்பவும் பாதிப்படைவது போலில்லாமல் மனஸ் விலகி வெறிச்சென்று இருக்கும். திதிஷை என்பது இரட்டைகளை பொறுத்துக் கொள்வது. “சுக துக்கங்களைப் பொறுத்துக் கொள்” என்று பகவான் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

கடுங்குளிர், கடும் உஷ்ணம், துக்கம், அவமானம், அசுபம், அப்ரியம், அபஜயம் ஆகியவற்றில் இப்பேர்ப்பட்ட திதிக்ஷையை அப்யஸிக்க வேண்டும். இப்போது நல்லதாகத் தோன்றும் ஹித உஷ்ணம், ஹித சீதம், ஸுகம், மரியாதை, சுபம், ப்ரியம், ஜயம் ஆகியவற்றிலுந்தான் திதிக்ஷை வேண்டும். இல்லாவிட்டால் இரண்டையும் சேர்த்துச் சேர்த்து பகவான் சொல்ல மாட்டார். இரண்டிலும் ஒரே மாதிரி பாவம், ஸமமாயிருக்க வேண்டுமென்றால், இரண்டையும் சட்டை பண்ணாமல் உதாஸீனமாயிருக்க வேண்டுமென்று அர்த்தம்.

Shradha (Srathai)

சிரத்தை என்றால் பரிபூரண சரணாகதி; நம்பிக்கை

ஆரம்பத்தில் விவேகம், வைராக்யம், இந்த்ரிய நிக்ரஹம் எல்லாம் நமக்கும் கிடைக்குமா என்கிற ஸ்திதியில், விநயமான மனப்பான்மை இருக்கும். அதனால் சிரத்தையோடு இருப்பான். ஆனால் சாதனையில் முன்னேறிய பிறகு, ‘இப்போது நமக்கு புத்தி, மனக்குழப்பம் போய்த் தெளிந்து விட்டது.

ஞானப் பக்குவம் பெறுவதற்காக அநேகம் பண்ணியாயிற்று. எது நித்யம் எது அநித்யம் என்று விசாரித்துத் தெரிந்து கொள்வது; அநித்யத்தில் வைராக்யம் ஸம்பாதித்துக் கொள்வது; சிந்தனை மயமாயுள்ள மனஸை அடக்கிக் கட்டுப்படுத்தி வெறுமையாக்கிக் கொள்வது, பொறுமையாக்கிக் கொள்வது- ஆகியவற்றில் அவன் முன்னேறியாயிற்று. அதனால், இனிமேல் ஸாக்ஷாத்கார விஷயமாக நடக்க வேண்டியதெல்லாம் நமக்கே நன்றாகப் புரிந்துவிடும்’ என்ற தப்பான – அஹங்காரம் என்றே தெரியாத ஒரு தினுஸு அஹங்காரமான – அபிப்ராயம் ஏற்பட இடம் உண்டாகும்.

ஆனால் வாஸ்தவத்தில், ஸாக்ஷாத்காரம் கிடைக்கும் அந்த முடிந்த முடிவான நிலை வரையிலுங்கூட அநேக விஷயங்கள் எந்தப் பெரிய புத்திக்கும் புரிபடாத விதத்தில் நடந்து கொண்டுதான் போகும்! ஸாக்ஷாத்காரமே பெற்று ஞானியானவனாலுங்கூட அந்த விஷயங்களை புத்தி மட்டத்தில் தெளிவு பண்ண முடியாமலே இருக்கும்! அந்த விஷயங்கள் பராசக்தி ஒருத்திக்கே தெரிந்த ரஹஸ்யம்! அந்தச் சிலது நடக்கிறபோது புத்தியால் விசாரிக்காமல் எளிமையாக அடங்கி அப்படியே ஏற்றுக்கொண்டு கிடக்கணும்; அது நடந்துவிக்கிற படி நடக்கணும். ‘இவ்வளவு தூரம் ஸாதனையில் வந்தோம். வருவதற்கு அநுக்ரஹித்த க்ருபா சக்தி இன்னம் மேலே ஏற்றிவிடாமல் போகாது. Final test -ஆக இறுதிச் சோதனையாகத் தான் நாம் புத்தியால் புரிந்து கொள்வதற்கில்லாமல் இப்போது ஒருவிதமாக நடத்துகிறது. நாம் புத்தியைக் கொண்டுவராமல் நம்பிக்கையோடு ச்ரத்தையோடு நடப்பதை ஏற்றுக்கொண்டு பாஸ் பண்ணி விடணும்’ என்று இருந்தாலே முடிவான விமோசனம் ஏற்படும்.

விஷயங்களை நம்புவது மட்டுமில்லை; அவற்றைச் சொல்லும் அந்த குறிப்பிட்ட குருவினால் தனக்கு நிச்சயம் வழி திறக்கும் என்ற நம்பிக்கையுந்தான். இது ரொம்ப முக்யமான ஒரு விஷயம்.

Samaadhanam
‘ஸமாதானம்’ இது ஆறாவது. ‘ஸமாதானம்’ என்னும்போது ஒருத்தனுடைய சித்தத்தைப் பரிபூர்ணமாக ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது என்று அர்த்தம். இப்படிச் செய்து கொள்வதாலேயே அவனுக்கு ஏற்ற இறக்கக் கொந்தளிப்பு-ஜாட்யங்கள் இல்லாமல் ஒரே சீரான ‘ஸம’ நிலையம் நன்றாய் வந்துவிடும்; ஸமத்வ நிலையில் தன்னை ஆதானம் செய்து கொண்டவனாகவும் ஆகிவிடுவான். சித்தம் முழுதையும் ஒன்றிலேயே திரட்டி நிலைப்படுத்தும் ஸமாதானத்தினால், சாந்தி என்ற அர்த்தத்தில் சொல்லும் கொந்தளிப்பில்லாத ஸமாதானமும் ஏற்பட்டுவிடும்.

ஒன்றிலேயே நிலைப்படுத்துவது என்றால் அந்த ஒன்று என்ன? சித்தம் நானா திசையிலும் ஓடாமல் சேர்த்துப் பிடித்து ஏதோ ஒன்றிலேயே வைக்கப்பட வேண்டுமென்றால் அந்த ஒன்று என்ன?

பிரம்மத்திலேயே ஸதா ஸர்வதா சித்தத்தைப் பூர்ணமாக நிலை நாட்டுவதுதான் ஸமாதானம். மாயை கலக்காதது ப்ரஹ்மம் ஒன்றுதான். ஸகுண மூர்த்தியாகவுள்ள ஈச்வரனைப் பற்றியில்லாமல், நிர்குணமான ப்ரம்மத்தைப் பற்றியே சித்தத்தை ஒருமுகப் படுத்துவதைத் தான் ‘ஸமாதானம்’ என்பது.

(My post here is very very incomplete and not extensive. All these are serious sadhanas which needs elaborate understaning and I suggest interested people to read the following topics leisurely so that we may vaguely get a clearer picture)

Chapter: “ஆறு சம்பத்துக்கள்”
Chapter: ‘சமம் – தமம் ‘
chapter: உபரதி
Chapter: திதிக்ஷை
Chapter: சிரத்தை
Chapter: ஸமாதானம்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment