August 19, 2021





 பாலருந்தி பளிங்குத்தரையில் தவழும்போது
உனையே இறுகப் பற்றியிருந்தேன்.
தாவணி அணித்துவங்கும் முன்பே
உன்னைத்தான் கண்டெடுத்தேன்
பாடும் பாடல்களில் உனையே இசைத்தேன்
மனமேடையில் உனக்கெனவே நடமாடினேன்.
பற்றேதுமின்றியே உனைப் பற்றியிருந்தேன்
.
நாற்பது பேரும் மேலும் - தரதரவென
நாற்திசையும் பற்றியிழுக்க
சிதறிப் போனேன்.
உடைந்த துகளிலும்
உன் தங்கமுகமே தேடுகிறேன் ..
...
பாசமென்னும் புழுதி மறைக்கிறது
அகந்தையெனும் அழுக்கு அடைத்திருக்கிறது
ஆசையெனும் பூதம் சற்றும் உனை
அண்டவிடாமல் அப்புறம் தள்ளுகிறது
நீயின்றியே தேம்புகிறேன்
.
எங்கிருந்தாலும் வந்துவிடு
எனைக் கண்டெடுத்து உன்
பூங்குழலில் பதுக்கிவிடு
மயிற்சிறகால் மறைத்துவிடு
பிரபஞ்சப் பார்வையிலிருந்து அகற்றிவிடு
பிறவாமல் செய்துவிடு
பற்றிய திருக்கரத்தை உதறாமல்
முற்றிய பக்தியை எனக்களித்து - என்றும்
பிரியாமல் இருந்துவிடு
மற்றே என் காமங்களை
மிச்சமேதுமின்றி மாற்றிவிடு
.
©ShakthiPrabha

No comments:

Post a Comment