April 02, 2010

காலச் சக்கரம் (சோ-வின் எங்கே பிராமணன் - 2)

இன்றைக்கு நாம் பல்வேறு துறைகளில் காணாத முன்னேற்றமா? அவை எல்லாம் வேதகாலங்களில் இருந்ததா என்ன? இதற்கு பதில் தெரியாமலே, நம் நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி அறியாமலே இருந்துவிட்டிருக்கிறோம். நவீன கண்பிடிப்புகளான பலவும் மிக முன்னரே இந்திய வல்லுனர்கள் பேசப்பட்டவை. ஆன்ம ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒன்றுடைய வளர்ச்சிக்கு மற்றொன்றும் கைகொடுத்து இணைந்தே வளர்ந்தது.

'பூஜ்யம்' என்ற அடிப்படை கணித அறிவே இந்தியமண்ணில் துவங்கியது. வேத காலத்திலேயே கணிதவல்லமை பெற்று விளங்கியது மெய்ஞான விஞ்ஞானத்தின் இருப்பிடமுமான நம் இந்திய நாடு. 5 BC இல் பிங்களா என்பவர் ஒன்றும் பூஜ்ஜியமும் வைத்து கணக்கிடும் 'பைனரி' கணித முறையை உபயோகித்திருக்கிறார் என்று தெரியவருகிறது. 476 CE ல் கேரள நாட்டில் ஆர்யபட்டா என்பவரோ கணிதவல்லுனராக மட்டுமின்றி வானவியல் நிபுணராகவும் திகழ்ந்திருக்கிறார். உலகம் உருண்டை என்றும் அது தன்னைத் தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருகிறது என்ற தத்துவத்தை முதலில் ஆணித்தரமாக உரைத்தவர் ஆர்யபட்டா. "பை" என்பதற்கு 3.1416 என்ற கணக்கை சொன்னதும் ஆர்யபட்டா.

பாஸ்காராச்சார்யா, ந்யூட்டன் கண்டுபிடிப்பிற்கு 500 நூற்றாண்டு முன்னரே புவியீர்ப்பு சக்தியை கண்டுணர்ந்தார்.

விஸ்வாமித்ர மஹரிஷியின் புதல்வரான ஆச்சார்யர் சுஷ்ருத், அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி சுஷ்ருத் சம்ஹிதா என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

குஜராத்தில் கணட் என்ற ஆச்சார்யர் அணு / பரமாணு பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், உலகில் அனைத்தும் பரமாணுவால் உருவாக்கப்பட்டது, அது அழிவற்றதும், நிலையானதும் மட்டுமின்றி, நம் புலனறிவிற்கு அப்பாற்பட்டு நிற்கிறது என்றும் அறிவித்தார். அதன் குணாதிசயங்களை வர்ணித்துள்ளார். அணுவைப் பற்றியும் கம்பராமாயணத்தில் மற்றும் வால்மீகி ராமாயணத்தில் பேசப்பட்டிருக்கிறது. 'புஷ்பக விமானம்' என்று புராணக் கதைகளில் வரும் உபயோகங்கள் கூட, ஏறத்தாழ நம் நவீன விமானங்களுடன் ஒத்துப் போவதாய் அமைந்திருக்கிறது என்கிறார் சோ. ரசாயனம், ஆயுர்வேதம், என்று எல்லாத்துறையிலும் நம் முன்னோர்கள் கண்டு தெளிந்த விஷயங்கள் நிறைய.

யோகம் முதல் யாகம் வரை, அணு முதல், ஆன்ம வளர்ச்சி வரை கண்டும் உணர்ந்தும் இருந்தனர் நம் முன்னோர்கள். இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்கு அப்பாலும் ஆன்ம வளர்ச்சியின் அருமை உணர்ந்து தெளிந்த பாதையில் நடந்திருந்தனர். இத்தனை வளர்ந்த நாகரீகம் இருந்தும், வேத வழிபடி வாழ்வு முறை பெருமளவு போற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனை புத்தகத்திலும் அச்சிலும் கொணராமல், உச்சரிப்பு தெளிவுடன் நேர்த்தியுடன், குருகுலத்தில் கற்று தேர்ந்து செவி வழியாய், உணர்ந்து ஓதி வந்திருக்கின்றனர். அதனை கடைபிடித்திருக்கின்றனர் என்றால் அந்த வாழ்வு முறையில் அறிவியலும் ஆன்மவியலும் கலந்தே இருந்திருக்கிறது என்பதை நான் உணரலாம்.

நம் ஹிந்து மதத்தில் காலத்தை யுகங்களாக பிரித்திருக்கிறோம். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கடைசியாக கலியுகம். ஒவ்வொரு யுகமாக தர்மமும் 'சத்' சிந்தையும் குறைந்து கொண்டே வரும் பொழுது, நான்காவதாக தர்மம் க்ஷீணித்த நிலையில் பல காலங்கள் கடந்து தோன்றுகிறது கலியுகம். கலியுகத்தில் எல்லா கார்யங்களிலும் பாபமும் புண்யமும் கலந்தே இருக்கிறது.

பரிக்ஷீத் அரசன் பதவி ஏற்கும் நேரம் கலியுகம் ஆரம்பம் ஆகின்றது. எருது ஒன்றை ஒருவன் துன்புறுத்தி அடித்துக் கொண்டிருப்பதை அரசன் கவனிக்க நேருகிறது. அப்படி துன்புறுத்துபவனே கலிபுருஷன் எனவும், தர்மம் எருமை ரூபத்தில் அழிந்து கொண்டிருப்பதாகவும் உருவகப்படுத்துகின்றனர். பூமி பசு ரூபத்தில் இருக்கிறது. தர்மம் அழிவது தாங்காது அதுவும் கதறுகிறது. தர்மம் என்ற எருதோ ஒரே காலில் நிற்கிறதாம். மற்ற மூன்று காலகளும் ஊனமாகி அழிந்தே விட்டன.

நீ யார் உனக்கேன் இந்த கதி என்று பரிஷீத் அரசன் கேட்டதற்கு,

* தவம் என்ற கால் கர்வம் அதிகரித்ததால் அழிந்தது
* புனிதம் என்ற கால் எதிர்பாலோரின் முறையற்ற சங்கத்தால் அழிந்தது
* தயை என்பது புத்தி கெட்டு விட்டதால் போய்விட்டது
* உண்மை என்ற ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். அதன் ஷக்தியும் குறைந்து கொண்டே வருகிறது என்று கதறிதாம் எருமை.

இக்கதிக்கு தள்ளிய கலி புருஷனை வெட்ட புறப்படுகிறான் பரிஷீத். கலி புருஷன் அவன் காலில் விழுந்து, என் கடமையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். நான் நிலைப்பதற்கு எனக்கு ஏதேனும் ஒரு இடம் கொடு என்று விண்ணப்பிக்கிறான்.

பரிஷீத் அரசனோ "எங்கு சூதாட்டம், குடி, முறையற்ற ஸ்த்ரீ (ஆடவன்) சேர்க்கை, ஹிம்சை, இருக்கிறதோ அங்கெல்லாம் நீ இருந்து கொள் என்கிறான். இன்னும் சிறிது இடம் கொடுக்க முறையிடுகிறான் கலிபுருஷன். "எங்கெலாம் தங்கம், வைரம், பொய், கர்வம், பணம், ஆடம்பரம் முதலியவை தலைதூக்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் நீ இருந்துகொள் என்கிறான். அஃதாவது இப்படிப்பட்ட இடங்களில் கலி புருஷனின் மோசமான பக்க-விளைவுகள் அதிகம் காணப்படும்.

கலிமுற்றிவிட்டது என்று கூறிக்கொள்கிறோம். கலி முற்றிவிட்டதால், எதிலும் பரிசுத்தம் இருப்பதில்லை. நிர்ணயிக்கபட்ட வாழ்வு முறையை கடைபிடிக்க முடிவதில்லை. வேறு ஏதும் வழியே இல்லையா? என்றால் சிறு துகள் அளவேனும் உயர்த்திக்கொள்ள வழி நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.

* தர்ம காரியங்கள் பேருக்காகவோ புகழுக்காகவோ மற்றும் 'பலன் எதிர்பாரமாலோ' செய்யலாம்.

* மருத்துவர்கள் வசதியற்ற நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்கலாம்.

* சங்கீதக்காரர்கள் தர்மத்திற்காக சில நேரம் சங்கீதம் பாடி, அதில் வரும் வருமானத்தை தானம் செய்யலாம்.

* எழுத்தாளர்கள் நல்ல விஷயங்களை, சத் கார்யங்கள் பற்றிய அறிவைப் பற்றி எழுதி விழிப்புணர்வு வரச்செய்யலாம்.

* இவை ஏதும் முடியாவிட்டால் குறைந்த பட்சம் திருமூலரின் வாக்கு படி, பிறரிடம், முகம் கோணாத அகமலர்ச்சியோடு கூடிய இன்சொற்களையாவது வழங்கலாம்.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.


என்ற திருமூலர் மந்திரத்தை முன்பே கண்டோம்.

குறைந்தது இனியன பேசி, இனியன சிந்தித்தால் எல்லாமே இனியவை. நம் அகத்தையே பிரதிபலிக்குமல்லவா உலகமும்? அகம் இனியதாய் இருப்பின், புறமும் இனிதாய் காண்பதே இயல்பு. இக்கருத்தையொத்த அருமையானதொரு தமிழ்ப்பாடலை வசனக்

கவிதைத் தொகுப்பில் பாரதி எழுதியிருக்கிறார்.

இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடு நன்று. ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை,
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம்.
இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று.சாதல் இனிது.


பாரதி இனியவர்.

நன்றி: (do check out the link for further ref / to know about priceless infos)

http://hubpages.com/hub/Ancient-Great-Indians

March 23, 2010

சோவின் எங்கே பிராமணன் - 2 (யோக முயற்சி)

யோக முயற்சி
_____________


உலகில் ஒருவனைப்போல் இன்னொருவன் இருப்பதில்லை, ஒவ்வொருவரின் நம்பிக்கை, இலக்கு, ஆசை அபிலாஷைகளும் தனித்துவம் வாய்ந்தவை. இலக்குகள் வேறாக இருப்பதாலேயே அவரவர்களின் தனிப்பட்ட முயற்சியும் வெவ்வேறானவை. அதற்கென அவர்கள் மெனகெடும் விதமும் சிரத்தையும் வித்தியாசப்படும். ஒரே ஒரு அப்துல் கலாம், ஒரே ஒரு பில்கேட்ஸ் என முயற்சிப் படிகளில் ஏறி பதக்கம் பெற்றோரை சுட்டிக் காட்டிவிட முடியும். கோடானகோடி ஜனத்தொகையில் வெகு சொற்பம் மனிதர்கள் பெரிய இலட்சியத்திற்காக செயல்படுகின்றனர். அவற்றுள் வெகு செலரே லக்ஷியத்தை எட்டிப் பிடிக்கின்றனர். அவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே லக்ஷியத்தின் உச்சிக் கொம்பை எட்டிப் பிடிக்கிறார்கள். சாமான்ய நடப்புகளுக்கே இப்படியெனில், வாழ்வில் மிகப்பெரிய, உயர்ந்த லக்ஷியமாம், இறையை உணர்தல் என்பது எவ்வளவு கடினம் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு முயற்சிப்பவர்களே சொற்பம், வைராக்கியத்துடன் மேல் நடந்து செல்பவர்கள் மிகக் குறைவு அப்படி தொடர்ந்து தேடுபவர்களிலும் எவனோ ஒருவனே எட்டிப் பிடிக்கிறான். இதனை பகவான் க்ருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறான்.

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஸ்சித் யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத:


ஆயிரக்கணக்கான மனிதர்களில் எவனோ ஒருவன் முயல்கிறான். அப்படி சித்தி அல்லது முழுமையைப் பெற முயற்சிப்பவர்களுள் எவனோ ஒருவனே என்னைப் பற்றிய உண்மை உணர்ந்தவன் ஆகிறான்.

எல்லோருக்கும் எல்லாமும் சித்தியடைவதில்லை. அதன் பொருட்டு உழைக்க, ஈடுபட மன/உடல் முதிர்ச்சியும் இடம் கொடுப்பதில்லை. ஒரு துறைகளில் வல்லுனர்களாய் இருப்பவர்கள், இன்னொன்றின் மேதாவிலாசத்திற்காக, சிரத்தையுடன் உழைப்பதும் வெகு அபூர்வம். ஆயிரமாயிரம் மனிதர்களில் இறைவனை நாடும் பாதை எவனோ ஒருவனே தேர்ந்தெடுக்கிறான். அப்படிப்பட்ட கடினமான பாதையில் ஒருவன் மனம் ஒன்றி ஈடுபடுவானேயானால், அவன் இலட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், அல்லது கை நழுவவிட்டாலும் கூட "முயற்சித்த" ஒரு காரணத்திற்காகவே உயர்வு பெறுவான். முயல்வதே வெற்றியின் முதல் படி, வெற்றிக்கு அடையாளம், தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், இவ்வாறெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சிறிய லக்ஷியங்களுக்கே சொல்லப்படுகிற விஷயம். இதுவே இறைவனைத் தேடும் மாபெரும் முயற்சிக்கும் உரித்தாகுகிறது.

கீதையில் அர்ஜுனைன் சந்தேகமும் இதுவே. 'ஒருவன் யோக முயற்சியில் ஈடுபடுகிறான். கர்மம் அல்லாமல் யோகம் பாதையை அவன் மனம் நாடுகிறது. அவன் சிரத்தையோடு துவங்குகிறான். அப்படி ஈடுபடுபவனுக்கு, யோகம் சித்திக்காமல் ஆகிவிடுமேயானால், அவன் யோக மார்கத்திலும் நில்லாமல், கர்ம மார்கத்தை விட்டும் விலகி இருக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவனுக்கு என்ன கதி ஏற்படும்? சிதறிய மேகம் போல் சிதறுண்டு போகுமோ அவன் கதி?' என்று வினவுகிறான்.

கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நச்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥


என்கிறது ஸ்லோகம்.

அதற்கு பகவான்,

பார்த்த நைவேஹநாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே
நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி
ப்ராப்ய புண்யக்ருதம் லோகானுஷித்வா சாஸ்வதீ: ஸமா:
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே


நல்லது செய்யும் அவன் துன்பம் அடையவதில்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுக்கு அழிவில்லை. யோகத்தினின்று தவறியவன் நல்ல உலகத்தை அடைந்து பின் நல்ல அறம் வாழும் மனிதர்களின் குலத்தில் பிறப்பெடுப்பான். என்று தெளிவிக்கிறார். முயன்றாலே அதற்கு அப்பேர்ப்ட்ட கதி உண்டாம். முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பற்றி சிந்திக்காது, சிரத்தையுடன் முயன்றாலே போதுமானது என திருவாய்மொழிகிறார்.

சிரத்தையுடன் எதையுமே செய்ய வேண்டுமென்றால் அலைபாயும் மனதை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்திரியங்களை குதிரைகளுடன் ஒப்பிட்டால் அங்கு மனதையே கடிவாளாமிட்டு இந்திரியங்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். நசிகேதஸிடம் யமன் கூறும் உபதேசத்தில், உடம்பைக் தேருக்கு ஒப்பிடுகிறார். அதை புத்தி எனும் தேரோட்டி, மனம் என்ற கடிவாளம் கொண்டு, இந்தியங்களாகிய குதிரைகளை, உலக நடைமுறை விஷயங்கள் நிறைந்துள்ள பாதையில் சரிவர இயக்க வேண்டும். கடிவாளாமில்லாத குதிரை எப்படி தறிகெட்டு ஓடுமோ, அப்படி ஓடக்கூடிய சுபாவம் வாய்ந்தது இந்திரயங்கள். இந்திரியங்கள் அலையும் போதெல்லாம் புத்தி எனும் தேரோட்டி இயக்க வேண்டும். சிந்தனை சரியாக அமைந்துவிட்டாலே பாதி வெற்றி. சுயமாக ஆர்வம் இருந்தாலேயொழிய, கேட்டும், பார்த்தும், பிறர் கூறும் நல்லுரையாலும் வந்துவிடக்கூடியதல்ல ஆன்மவிசாரம். ஆன்மதேடல் மட்டுமன்றி, மனிதனின் தனிபட்ட முயற்சி, அபிப்ராய பேதங்கள், வெற்றி-தோல்விகள், நல்ல சிந்தனைகள், நல்லன அல்லாத செயல்கள் என பலவற்றிற்கும் மனிதனின் தனிப்பட்ட குணாதிசயங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே அவன் பகைவனும் ஆகிறான். இன்னொருவனுக்கு நல்லதும் கெட்டதும், அறிவுரைகளின் பேரில் சொல்லி வருவதில்லை. பெரும்பாலும் சுயமாய் அமைவதே அனைத்தும்.

தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்


தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி


திருமூலரின் திருமந்திரம்.

March 08, 2010

இறை வழிபாடு - ஹிந்து மதம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2)

இப்படி இருக்க்க வேண்டும் இப்படி இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் நம் மதத்தில் (எல்லா மதங்களிலும்) நிறைய உண்டு. அவற்றையெல்லாம் கடை பிடிக்கிறோமா எனபதே கேள்விக்குறி. விஞ்ஞானத்தின அடிப்படையில் மட்டுமே நம்பிக்கை வளர்கிறது. மற்ற புரியாத அல்லது புரிந்து கொள்ள இஷ்டப்படாத விஷயங்களை புறம் தள்ளிவிடுகிறோம். அவற்றை பைத்தியக்காரத்தனம் என்றோ மூட நம்பிக்கை என்றோ முத்திரைக் குத்தி மூலையில் அமரச் செய்துவிடுகிறோம். அவற்றுக்கென சில புராணக் கதைகளும், சான்றுகளும், குறிப்புகளும் ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றன.

கோவில்களிக்குச் சென்றால் கூட இன்னென்ன முறையில் இப்படி நடக்க வேண்டும் என்ற நியதிகள் உண்டு. நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியெல்லாம் நமக்கு அடிப்படை அறிவை புகட்டியிருக்கிறார்கள்.


கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________


1. நீராடாமலும் கை கால்களை சுத்தி செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது
2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்
3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது
4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது
5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது
6. நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது
7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது
8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது
9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.
11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.
12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.
13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.
14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.
15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.


அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு சான்றாக "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெல்லமாக நடப்பாளோ அப்படி நடக்கவேண்டும் என்கின்றனர்। இவையெல்லாம் ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைவதற்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை என்று எடுத்துக்காட்டவே இப்படிப்பட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கோவில் படியில் உட்கார்ந்த பிறகு வீடு திரும்ப வேண்டும் என்ற விதி முறை பலருக்கும் தெரிந்திருக்கும். சிவன் கோவிலுக்கு சென்றால், வழிபட்டு திரும்புகையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவது ஏன்? மகாபலி போன்ற சிவ கணங்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு துணையாக புறப்பட்டு வருகின்றனர். அவர்களை, கோவிலிலேயே இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அமர்வது; அத்துடன், சிவநாமம் சொல்ல வேண்டும் என்பதும் ஐதீகம். சிவ "ஆக்ஞ்ஜையை பரிபாலிப்பொராகிய நீங்கள் இனி சந்நிதி திரும்பலாம், நான் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்ற அர்த்தம் தொனிக்க மந்திரம் ஜபித்து பின் விடை பெற வேண்டும்.


கோவில்களின் ஸ்தல புராணம் அதன் பெருமையையும் சிறப்பையும் தனித்துவத்தையும் எடுத்துக்கூற வல்லது. புராதன கோவில்கள் பலவற்றிற்கும் சிறப்புமிக்க ஸ்தல புராணம் இருக்கிறது. ஸ்தல புராணம் உள்ள கோவில்களுக்கு விசேஷ பிரார்த்தனைக்காக செல்வதுண்டு. கிரஹ ஷாந்திக்கு சூர்யனார் கோவிலும் அந்தந்த க்ரஹங்களுக்கு தனிப்பட்ட கோவில்களும் நாம் கேள்விபட்டுள்ளோம். அவற்றில் சனிபகவானுக்காக ப்ரீதி ப்ரீதி செய்வதற்கு திருநள்ளாறு கோவில் பிரசித்தி பெற்றது. நள மஹராஜன் கலியினால் பீடிக்கப்பட்டு இங்கு வந்து வணங்கி நலம் கண்டதாய் சரித்திரம் உண்டு. இது சிவஸ்தலம் ஆகும். ஒரு முறை தேவேந்திரன் வாலாசுரனுடன் சண்டையிட்ட போது முசுகுந்தன் என்ற சக்கரவர்த்தியின் உதவியுடன் வாலாசுரனை வீழ்த்தி வெற்றியை நாடினான். அதற்குப் பரிசாக அவன் வணங்கும் சிவலிங்கத்தை கேட்கிறான் முசுகுந்தன். தேவேந்தரனும் தான் வணங்கும் சிவலிங்கத்தைப் போலவே ஆறு லிங்கம் தருவித்து கொடுத்துப் பார்க்கிறான். ஒவ்வொன்றை பரிசளிக்கும் போதும், இதுவல்ல நான் கேட்ட லிங்கம் என மறுத்துவிடுகிறான் முசுகுந்தன். வேறுவழியின்றி தேவேந்திரன் தான் வணங்கும் சிவலிங்கமே முசுகுந்தனுக்கு தரவேண்டியதாய்ப் போனது. அந்தச் சிவலிங்கம் இன்றும் திருவையாற்றில் உள்ளது. தருவித்து வழங்கிய மற்ற ஆறு லிங்கங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. அவற்றில் ஒன்று திருநள்ளாரில் உள்ளதாம்.

திருநள்ளாற்றுக் கோவிலின் குளத்தை மண்டைக் குளம் என்று கூறுகின்றனர். பொய்க் கணக்கு எழுதி பிடிப்பட்ட கணக்கன், பால் வினியோகிக்கும் எளிய இடையன் மேல் பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறான். இடையனை சிறையில் அடைக்கின்றனர். அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, கணக்கனை கோவிலில் வந்து சத்தியம் செய்யச் சொல்கிறார். அவ்வண்ணமே கணக்கன் மறுதினம் பொய்யுரைத்ததும், சிவன் சூலாயுதத்தால் அவன் தலையை கொய்ய, மண்டை உருண்டோடுகிறது. அதற்கு வழிவிட்டு நந்தியே சற்றே விலகிக்கொள்கிறதாம். அந்த மண்டை விழுந்த இடம் மண்டைக் குளம் என்று வழங்கப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் சனிபகவானுக்கென தனி சந்நிதி இருக்கின்றது. வேறு கிரஹங்களுக்கு இல்லை. நளன் பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபட்ட இடமென சம்பந்தரும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ள பாடல் பெற்ற தளம்.

அந்தந்த க்ரஹங்களுக்கென நாயகர்களின் ப்ரீதி செய்தல் ஒருபுறம் இருந்தாலும், ஹனுமனை வேண்டினால் சனியின் பாதிப்பு மட்டுப்படும் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே சங்கடம் நீங்க விநாயகனை வழிபடுதலும் பலர் செய்து வருகின்றனர். விக்னங்களை அறவே அறுப்பதால் விக்ன விநாயகன் என்று அவரை போற்றித் துதிக்கிறோம்.

ஒருமுறை விநாயகனின் பெருத்த வயிற்றை சந்திரன் கேலி செய்தான். கோபம் கொண்ட விநாயகன் அவன் மெருகும் அழகும் இனி தேய்ந்துப் போகக் கடவது என சபித்தார். மனம் வருந்தி சந்திரன் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தன் சங்கடத்தை போக்கிக்கொண்டதாகக் கூறுவர். சுக்லபட்ஷ சதுர்த்தியில் விரதம் இருந்து என்னை வழிபடுபவர்களின் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என திருவாய்மொழிந்தார்.இது நமக்குத் தெரிந்த சங்கட-ஹர (சங்கஷ்ட - ஹர) சதுர்த்தி கதை. கேள்விப்பட்ட கதையும் கூட.

சோ அவர்களின் விளக்கம் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. விநாயக சதுர்த்தி வளர்பிறை சதுர்த்தியில் வருவதால் தேய்பிறை சதுர்த்திக்குறிய தேவதை, தனது தினத்தையும் சிறப்புறச் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொண்டதாம். விநாயகரும் இனி தேய்பிறை சதுர்த்தியில் முறையாய் பூஜை செய்து விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும் என்று அருள்மொழிந்தாராம்.

பல கதைகள் நமக்கு செவிவழிச் செல்வமாய் வந்தடைகிறது. சில கதைகள் புத்தகமார்கமாகவும் இன்றைக்கும் படித்து உணர்கிறோம். இனி வரும் நூற்றாண்டுகளில் எத்தனை பேர் இக்கதைகளை, மதக் கோட்பாடுகளை அதில் சொல்லப்பட்டிருக்கும் நன்மை தீமைகளை, ஏன் மந்திரங்களையும் கூட சரியாக ஒதப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதிக அளவில் வாழ்ந்துவந்த புரோஹிதர்கள் /சாஸ்த்ரிகள் குடும்பங்கள் இன்று க்ஷீணித்து விட்டது. இருக்கும் சிலரும் கூட தம் பிள்ளைகளை வேறு துறையில் முன்னேற விரும்பி அனுப்பிவைக்கிறார்கள். இத்துறையில் வருமானம் குறைந்து கொண்டே வருவதே அதற்குக் காரணம். வருமானம் மட்டுமின்றி மதிப்பும் மரியாதையும் கூட மட்டுப்பட்டுத் தான் வருகிறது. இத்தனை இக்கட்டுகளையும் தாண்டி இன்றைக்கும் இத்தொழிலை விட்டுவிடாமல் ஒரளவுக்கேனும் பராமரித்து வரும் புரோஹிதர்கள் பாராட்டுக்குறியவர்கள். கல்யாணம் முதல் கருமாதி வரை இவர்களின் சேவை தேவைப் படுகிறது.

March 04, 2010

சன்னியாசம் அவசியமா? (சோவின் - எங்கே பிராமணன் இரண்டாம் பாகம்)

பெற்றவர்களின் சம்மதம் பெற்று சன்னியாசம் கொள்வதே முறை என்றாலும், ஆதிஷங்கரரின் தாயார் உட்பட எவருமே மனம் விரும்பி, மகிழ்வுடன் விடைகொடுக்கவில்லை. பேருக்கு சம்மதம் சொன்னவர்களும், வற்புறுத்தலின் பேரில் சம்மதம் சொன்னவர்களுமே அதிகம். இவ்வண்ணம் பெற்றோரையெல்லாம் புண்படுத்தி, வருத்ததில் ஆழ்த்தியானும் ஞானத்தைப் பெற வேண்டுமா?

இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா? அல்லது வெளிநாடு சென்று படித்துத் திரும்பவோ, அங்கேயே வேற்றுநாட்டு பிரஜையாகிவிட்டு தம் வருமானத்தையும், வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ நாம் சுதந்திரத்தை பறிக்கிறோமா? குறிப்பிட்ட ஒருவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் படி செல்லுதல் அவனின் தனிப்பட்ட உரிமை. அதைத் தடுக்க பெற்றோரே இன்று முன்வருவதில்லை. உலகாய விஷயங்களுக்கும் கல்விக்குமே இப்படியென்றால், உயர்ந்த படிப்பை, ஞானத்தை தேடிப் போகிற ஒருவனுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறதல்லவா?

பெற்ற மனம் தவித்தாலும், அழுதாலும் கூட தனிப்பட்ட இன்னொருவனின் ஆன்ம தாகத்தை, பிறப்பின் நோக்கத்தை, அதன் தொடர்புடைய தேடலை தடை போடுவது என்பது பெரும்பாலோரும் செய்யமாட்டாத ஒன்று. பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதும் ஞானவழி முயல்வதும் உயர்ந்த கடமைகள். அவற்றை தடைபோடுவதோ ஆன்ம தாகத்திற்கு தடை விதிப்பதோ, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கைகளால் தடுப்பது போல.

தான் கண்டுணர்ந்த ஞானத்தை யக்ஞவல்க்யரிடம் தெளிய முற்படும் போது, 'மாதா பிதா குரு'வின் ஆசியுடன் என் பதிலை கூறத்துவங்குகிறேன் என்கிறார் ஜனகர். ஆகவே மூவரின் ஆசியும் தேவையானது. மூவரின் ஆசியுடன் இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். ஞானத்தின் தேடலுக்கு வீடோ, வீட்டிலிருக்கும் நபர்களோ, உறவுகளோ வழி-உபயம், விடை சொல்ல இயலாது. அதற்கு குரு வேண்டும்.

ஆன்ம வழி தொடரும் சீடனுக்கு பிக்ஷை கொடுப்பவர்கள் தாய்மார்கள். குரு தந்தை, சிஷ்யர்கள் பிள்ளைகள், அவன் அனுபவிக்கும் ஏகாந்த சுகமே இல்லறத் துணை. ஞானப் பாதையில் போகின்றவனுக்கு பந்தமும் சொந்தமும் பற்றும், பழுத்த பழம் மரத்தில் தங்காது நிலத்தில் விழுவது போல் அறுத்துக் கொண்டு விழுந்துவிடும். தேசிகனாகிய குருவே- திசையைக் காட்டுபவரே ஷரணம் எனச் செல்கிறான்.

February 19, 2010

குருகுல வாசத்தின் பெருமை

குருகுல வாசத்தின் அவசியத்தை காலத்தின் பரிமாணத்தின் பேரில் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். எதையும் ஆழமாகவும் முழுமையாகவும், பல கோணங்களிலும் யோசித்தால் அதன் அத்தியாவசியம் புரிந்துவிடும்.

காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் பாரதி. இப்பொழுது இருக்கும் பாட திட்டத்திற்கு காலை, மதியம், மாலை, என மூன்று வேளையும் பிள்ளைகளை படிக்க சொல்லி பெற்றோர்கள் உயிரை விட வேண்டியுள்ளது. அப்படி படிக்க சொல்லும் பொழுது மாணாக்கர்களுக்கு கவனம் அவசியமாகிறது. கவனிக்குறைவு நேர்ந்தால் பாடங்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிவதில்லை. பின் மறந்தும் போகிறது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, வலையுலகம் இன்னும் எத்தனை உண்டோ அவ்வளவும் அவர்களை திசைதிருப்பும் சாதனங்கள். பரிட்சை என்றால் மனதை ஒருமுகப்படுத்தி தயார் செய்ய வெண்டியுள்ளது. இக்கால கல்விதிட்டத்திற்கே இப்படிப்பட்ட மனக்கட்டுபாடுகளும் ஒழுக்கமும் அவசியம் என்றால், பிரம்மச்சர்யம் பயிலச் செல்பவனுக்கோ, ஞானத்தை அடையும் முயற்சியில் இருப்பவனுக்கோ எவ்வளவு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது வெளிச்சமாகிறது. அதனை வீட்டுச் சூழ்நிலை தருவதில்லை. சுற்றுப்புறச் சூழ்நிலை சற்றே மாறுபட்டாலும், அதெற்கென காத்திருந்த மனத்திற்கோ அலைபாய்வதற்கு வசதியாகிறது.

ஆகவே குருகுலவாசம் அவசியமானது. குருவினிடமே வாசம் செய்து பாடம் பயிலுதல். மாணாக்கன் பயில்வது வேதமும், ஒழுக்கமும் பாடமும் மட்டுமல்ல. குருமார்களின் வாழ்வு முறை, செயல்வழிபாடுகள், நெறிகள் என பலவும் கண்ணுற்று தெளிகிறான். அதனால் இங்கு குருவே ஆச்சார்யனாகவும் ஆகிறான். ( i.e. கற்பிப்பது போல் அவனும் நடந்து வழிநடத்திச் செல்கிறான்). குருவினிடத்தே வாசம் செய்வதால் மாணவனின் கவனம் பெரும் அளவு சிதறுவதில்லை. ஒருமுகமாக தன் இலக்கில் குறி வைத்து எட்டிப் பிடிக்கிறான். குருவிற்கு சிஷ்யன் செவைகள் பலவும் செய்யக் கடமைபட்டுள்ளான். வேதம் நெறி மட்டுமன்றி சங்கீதம் முதலிய கலைகளுக்கும் பண்டைய காலத்தில் குருகுல வாசம் இருந்து வந்திருக்கிறது. குருகுலவாசம் தோராயமாக 12 வருடகாலம் செய்யப்படும் என்கின்றனர். ஒவ்வொரு கலை அல்லது பிரிவிற்கு வெவ்வேறு குருவினிடத்து சென்று பயிலும் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பிட்ட துறையில் அதிகம் பாண்டித்தியம் பெற்றிருக்கும் வேறொரு குருவிடம் அதனை கற்றுத் தெளியலாம்.

சிஷ்யர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு குரு வகித்தாலும் சிஷ்யனின் சுயமான முயற்சி மற்றும் அவன் புத்தி-கூர்மையும் அதனை நிர்ணயிக்கிறது. பவ-பூதி எழுதிய உத்தர ராம சரிதத்தில், லவ- குசர்கள் வால்மீகி முனிவரிடம் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுடன் கூட ஆத்ரேயி என்ற மாணவியும் படிக்கிறாள். அவளின் புத்திபலம் லவ-குசர்களுடன் போட்டியிட முடியவில்லை. அதனால் அவள் அந்த குருகுலத்தை விட்டு வேறு இடம் சென்று பயின்றாளாம். குருவிற்கு எல்லா மாணாக்கனும் ஒன்று. அவர் புத்தி கூர்மையுள்ளவனுக்கும் புத்தி மட்டுபட்டவனுக்கும் ஒரே பாடத்தை பயிற்றுவிக்கிறார். அவர் சொன்ன பாடங்களை எந்த அளவு உள்வாங்கி கிரஹித்துக்கொள்கிறான் என்பது மாணாக்கனைப் பொறுத்தது. இதனை உணர்த்தும் வகையில் ஆத்ரேயி "மண்ணாங்கட்டி எவ்வாறு சூரிய ஒளியை தன்னுள் வாங்கி உமிழ்வதில்லையோ மூடனின் அறிவும் அவ்வாறே. புத்தி கூர்மை மிகுந்த மாணாக்கனோ கதிர் வீச்சை உள்வாங்கி பிரதிபலிக்கும் ஸ்படிக மணியைப் போன்றவன்." என்கிறாள். மாணாக்கனின் உழைப்பு, சிரத்தை, எல்லாம் பொருத்தே அவன் உயர்வும் அமையும். சரியான குரு அமைந்துவிட்டாலோ அவனுக்கு நல்லதொரு வழிகாட்டி கிடைத்த பலன். வழிகாட்டிகள் குருமார்கள் என்பதாலேயே சிஷ்யன் செய்யும் பாபச்செயல்களுக்கும் குரு பொறுப்பாவான். மக்கள் செய்யும் பாபம் ராஜாவைவ் சாரும், ராஜாவின் பாபம் புரோஹிதரைச் சாரும், மனைவியின் பிழைகளுக்கு கணவன் பொறுப்பு அதே போல் சிஷ்யர்களின் ஒழுங்கீன நடத்தைகளுக்கு குரு பொறுப்பாளி என்பது பெரியோர் வாக்கு. இவர்கள் எல்லோரும் வழிகாட்டிகள். தவறான வழியில் செல்லும் தம் மக்களைத் திருத்தக் கடமைப் பட்டவர்கள்.

அப்பேர்பட்ட குருவினிடத்து, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களிடத்து அதிக மரியாதையும் பெறும் மதிப்பும் வைக்க வேண்டும். கொடிய நஞ்சுக்கு ஒப்புமையான விடயம் எது என்றால் குருவை அவமதித்தல் என்கிறார் ஷங்கராச்சார்யார். பிரம்மச்சர்யம் பயிற்றுவிக்கும் குரு "வித்யா-குரு". க்ருஹஸ்தன் ஆகாமல், சன்யாசம் ஏற்று அதன் பின் கிடைக்கும் குரு "தீக்ஷா-குரு"

February 09, 2010

குரு க்ருபை (சோ-வின் எங்கே பிராமணன் -பகுதி 2)


ஆச்சார்யர்-குரு-வாத்தியார் என்போரின் பேதங்களை நாம் முன்பே கண்டிருக்கிறோம். அச்சார்யன் தம் போதனைப் படி நடந்து முன்னுதாரணமாக இருந்து வழிநடத்திச் செல்பவர். குரு அவரையும் ஒரு படி மேல். அவரையும் கடந்தவர். அவர் பார்வையாலேயே தம் போதனையை போதிப்பவர். i.e. நயன தீட்சை செய்யக்கூடியவர். ஸ்பரிசத்தால் தீட்சை தரவல்லவர். மானச தீட்சை தரும் சக்தி படைத்தவர்.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணக் கதையொன்றை முன்பே அலசியிருக்கிறோம்.


ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.




(முந்தைய பகுதியிலிருந்து).

"நீ சகல சாஸ்திரங்களையும் கற்றாவன் ஆவாய்" என்று சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு ஞானோபதேசம் கிடைத்துவிட்டது (குருவில் க்ருபையால்). குருவின் உபதேசம் அவ்வளவு ஷக்தி வாய்ந்தது.

உபதேசிக்கும் வகையில் இன்னொரு வகையும் உண்டு. எதிர்கேள்விகளால் ஞானத் தீ மூட்டி வழிநடத்தி செல்வர். ஸ்வேதகேதுவின் தகப்பனான உத்தாலகர் தம் மகனுக்கு கேள்விக் கணைகளாலேயே உபதேசம் நடத்துகிறார். ஆலமரத்து பழம் கொண்டு வரச் செய்கிறார்.

இதனைப் பிளந்து பார்த்தால் என்ன தெரிகிறது?

விதை!

"விதையை பிளந்து பார்த்தால் என்ன காண்கிறாய்?

சூட்சுமமான பெரிய ஆலமரமே விதைக்குள் இருக்கிறது!

(நீர் கொண்டு வரச் செய்கிறார். பின் உப்பிட சொல்கிறார். )

இப்போது அருந்தும் நீரில் உப்பு நடுவிலா, முதலிலா முடிவிலா உப்பு இருக்கிறது?

அதே போல் ஆன்மாவும் நீக்கமற எங்கும் வியாபித்திருக்கிறது என்று உதாரண விளக்கம் அளிக்கிறார். குறிப்பறிந்து பொருள் கொள்ளல் என்ற முறையில் கேள்விகளாலேயே ஆன்மவிளக்கம் உபதேசிக்கிறார்.

மனிதன் ஒருவனின் கண்ணைக் கட்டி பொருட்களை திருடிக்கொண்டு நடுக்காட்டில் விட்டுவ்ட்டால் அவன் எவ்வாறு திண்டாடி வழிதெரியாது தவிப்பானோ அப்படிப்பட்டது சம்சாரம். கர்மவினையை திருடனுக்கு ஒப்பிடலாம். ஆசை காமம் க்ரோதம் போன்ற குணங்கள் அவன் கண் மறைக்க வழி தெரியாது திண்டாடுகிறான். அப்படிபட்டவனுக்கு துணை கிடைத்து அவனை வழி சேர்ப்போனே குரு எனப்படுபவன்.

போலிகுருமார்கள் பற்றியே அதிகம் கேள்வியுற்று, குருகுலம், குருபக்தி என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை அற்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். எங்கும் எதிலும் போலிக்களைக் கண்டு சலித்து விட்ட நமக்கு, இறைவனை நாடும் பாதையிலும் போலிசாமியார்களைக் கண்டு நோகும் நிலை தான். அதனாலேயே இப்பாதையில் கால் வைக்க தயங்குபவர்கள் அதிகம்.

கலியுகம் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் உட்கொள்ளும் உணவு முதல் மருந்துகள் வரை, மருத்துவர்கள் முதல், ஜோதிடர்கள் வரை எங்கும் போலிகள் அதிகமாகிவிட்டன. உறவினில், அன்பினில், வார்த்தைகளில், போலி தன்மை அதிகரித்து உண்மைகள் குறைந்துவருகின்றன. இக்கால கட்டத்திற்கேற்ப குருமார்களும் ஆசிரமங்களும் கூட சில தவறான நோக்கத்துடன் செயல்பட்டுவிடுவதால், இம்மார்க்கமே தவறு என்றோ இதில் செயல்படும் அனைவரும் வேடதாரிகள் என்றோ கூறிவிட இயலாது. போலிகளின் நடுவே நல்ல உணவும், மருந்தும், மருத்துவனும், அன்பும், உறவும் அவ்வப்போது தட்டுப் படுவதைப் போல் சிறந்த குருமார்களும் ஆச்சார்யர்களும் இன்றும் இருந்துவருகின்றனர். பல சன்மார்க ஆசிரமங்கள் உலகளாவிய முறையில் நிறைய சேவைகள் செய்த வண்ணம் உள்ளனர். இவர்களின் தன்னலமற்ற சேவை தொடர்ந்து வருகிறது.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்" என விளம்பரம் செய்வது, தற்கால குருகுலம், குருமார்கள் ஆசிரமங்களுக்கும் சாலப் பொருந்தும்.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். போலிகளை நாடாதீர்கள்" உண்மையான குருவை எவ்விதம் கண்டு கொள்வது? பண்ட பதார்த்தங்களைப் போல் இதற்கென விதிமுறைகள் கிடையாது. உண்மையை பிரித்துணரும் பக்குவம் வளர்த்துக் கொள்வது தான் வழி. உண்மையான பக்தனுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. அவன் பிரித்துணரும் பகுத்தறிவு பெற்றவனாக இருப்பான். உண்மையான குருவை எளிதில் கண்டுணர்வான்.

January 29, 2010

கதோபநிஷத் (சோவின் எங்கே பிராமணன் - பாகம் 2)

spilt milk என்று சொல்வார்கள். நெல்லை அள்ளினாலும் அள்ளலாம் கொட்டிய சொல்லை அள்ள முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுவதைப் பற்றி படித்தும் கேட்டும் இருந்தாலும் அகக் கண்ணை கோபமோ வருத்தமோ மறைக்கும் பொழுது சூடாகவோ அல்லது தகாத வார்த்தைகளோ வந்து விழுகின்றன. விழுந்த வேகத்தில் அவசரச் புத்திக்கு வருந்துகிறோம். உதிர்த்த ஒரே ஒரு சொல்லால் இழந்த கதைகள், கணங்கள், உறவுகள், மனிதர்கள் பலப்பல. இப்படிபப்ட்ட அனுபவங்கள் எல்லோர் வாழ்விலும் நிரம்பியிருக்கும். அதிக பூஜா பலன் பெற்றவர்கள் உதிர்க்கும் சொற்கள் அவ்வப்பொழுது பலித்தும் விடும்.

நசிகேதஸ் தந்தை வாஜஸ்ரவஸ் மகத்தான யாகம் செய்கிறார். யாகத்தின் போது தானங்கள் வழங்கப்பட வேண்டும். தனது தந்தை உபயோகமற்ற வயது முதிர்ந்த மாடுகளை பேருக்கு தானம் செய்கின்றதை கண்ணுற்று அதைப் பொருக்காத நசிகேதஸ், சற்றே படிப்பனையூட்டும் வண்ணம் "என்னை எவருக்கு தானமாக வழங்கப்போகிறீர்கள்" எனக் கேட்கிறான். மீண்டும் மீண்டும் இதே கேள்விகளால் துளைத்ததும் பொறுமை இழந்த வாஜஸ்ரவஸ் "உன்னை யமனுக்கு தானமாக கொடுத்தேன்" எனச் சொல்ல உடன் யமலோகம் போகிறான் நசிகேதஸ். அவ்வளவு வலிமை வாய்ந்தவை உதிர்க்கும் சொற்கள்!

மூன்று நாட்கள் யமனைப் பார்க்க வாயிலில் காத்திருந்ததால் நல்லாத்மாவை காக்க வைத்ததன் பொருட்டு தன் தர்ம நியாயங்கள் அழிந்து விடுமோ என அஞ்சி நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அளிக்கிறான் யமன்.

முதலாவதாக, தன் தந்தையின் மேன்மை உயரும் பொருட்டு வரம் கேட்கிறான்

இரண்டாவதாக, எவ்விதமான யாகங்களும் வேள்விகளும் ஸ்வர்கத்துக்கு இட்டுச்செல்லக்கூடியவை எனக் கேட்டு, அதனைச் செய்யும் முறைகள் மந்திரங்கள் வழிகள் தெரிந்து கொள்கிறான். நசிகேதஸின் அறிவு கூர்மையை மெச்சி யமன் மிகவும் மகிழ்ந்து, குளிர்ந்து, அவனுக்குப் பட்டங்கள் வழங்கி மாலைகள் அணிவித்து மகிழ்விக்கிறான்.

அடுத்ததாக, அவன் கேட்ட வரம் "மரணத்திற்கு பிறகு நிகழும் நிகழ்வு என்ன?" என்பது. மரணத்திற்குப் பின் இருப்பு நிலை தொடரும் என்ற கருத்தும் அதனை மறுக்கும் வண்ணம் மரணத்திற்கு பிறகு இருப்பு நிலை இல்லாதொழியும் என்ற எதிர்மறைக் கருத்தும் நிலவி வருகிறது. தயை கூர்ந்து மரணத்திற்கு பின் என்ன என்ற ரகசியத்தை சொல்லி அருளுங்கள் என்கிறான். திடுக்கிட்டு போகும் யமனோ பல யோகிகளும் முனிவர்களும் கூட சந்தேகிக்கும் கேள்வியை நீ கேட்டு விட்டாய். இந்த ரகசியத்தைத் தவிர வேறு என்னவேண்டுமானாலும் கேள் என்க் கூறி வேறு வகையிலெல்லாம் நசிகேதஸைத் திசைத் திருப்பப் பார்க்கிறான். தன் ஆர்வத்தின் தீவிரம் விட்டகலாத நசிகேதஸும் மீண்டும் அதனையே வற்புறுத்திக் கேட்க, யமன் சொல்லும் விளக்கங்களே "கதோ'பநிஷதமாக உருப்பெற்றது.