April 07, 2009

எதிரி (திரைப்பட அலசல்)

எச்சரிக்கை: இது எப்பொழுதோ வெளியாகிய "எதிரி" என்னும் வரலாற்று மிக்க சிறப்புப் படத்திற்கு எப்பொழுதோ எழுதிய அலசல். படம் சரியாக ஓட, ஏன் தத்தி தத்தி கூட நடக்கவில்லை. இப்பதிவின் ஒரே ஆறுதல் மாதவனின் நிழற்படம் :P

________________________________________________________________



'ஆஹா, மாதவன் படம் பார்க்காமல் இருப்பதா?' என்ற அவருக்காக மட்டுமே படம் பார்த்த பிரஜைகளுள் நானும் ஒருத்தி. இதற்குத்தான் Star value என்று சொல்வார்கள் போலும்। ஸ்டார் வேல்யூவுக்கு வேட்டு வைக்கும் படம்.


ஆரம்பகால கலாட்டக்களுக்கும் கலகலப்புக்கும் முழுப் பொறுப்பு விவேக். கொழுந்து விட்டு எரியும் எரிச்சலை கொஞ்சம் தணிக்கிறார். கனிகா சிக்கென்று அழகாய்த்தான் இருக்கிறார். முதலில் அவர் தான் ஹீரோயின் என்பது போல் ஒரு பில்டப். சளைக்காமல் காமெடிக்கு கைகொடுத்திருக்கும் டில்லி கணேஷ் பரவாயில்லை. ஜெயிலில் இருந்து வெளிவரும் பொழுது, கோழை போல் வசனம் பேசுகிறார் மாதவன். அதனால் இந்தக் காரெக்டர் 'துப்பறியும் சாம்பு' போல் எசகுபிசகாய் ஏதோ செய்து பெயர் வாங்கிகொள்ளும் பாத்திரம் என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது.

'ஆஹா! நானா? குண்டனா? அடிதடிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?' என்று பூனை போல் முகத்தை வைத்துக்கொண்டு, பிறகு கனிகாவிற்காக ரௌடிகளுடன் புகுந்து விளாசுவது, படம் பார்க்கும் எல்லோரும் பூ சுற்றிக்கொண்டிருப்பவர்கள் என்ற நினைப்புடன் படம் பண்ணியதைக் காட்டுகிறது.

ரொம்ப சுவாரஸ்யமாய் போகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ பரவாயில்லை என்று போகிறது முதல் பாதி. யார் சதா? ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்? அட ஆள்மாறாட்டங்கள் வேறயா? ஏதோ சுவாரஸ்யக் கதையோ? என்று நினைக்கத் தொடங்கும் பொழுது இடைவேளை வந்து விடுகிறது.

இடைவேளை வரை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது வித்தியாசமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாதவனும் சதாவும் காதல் என்கிற வட்டத்துக்குள் ரொம்ப தாமதமாய் நுழைகிறார்கள். கடைசியில் பெயர் குழப்பம் காரணமாய் மாதவனை ஏதோ பெரிய ரௌடி என்று போலீஸ் இழுத்துக்கொண்டு போவது நம்பும்படியாய் இல்லை. பெரிய-சிறிய ரௌடிகளின் 'புகைப்பட-நகல்' எல்லாம் வைத்துக்கொண்டிருக்க மாட்டார்களா என்று மறுபடியும் லாஜிக் எதிர்பார்த்து செல்லும் பலரை, தட்டி உசுப்பி, தமிழ் படங்களின் உண்மை நிலையை செவிட்டில் அறைகிறது.

சதாவைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை.ரஹ்மானின் அந்தக் கால விசிறிகள் பலர் துக்கபடுவர். அவருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்ல.'அநாயசமாக ஒரு பொறுப்புள்ள அதிகாரி சுட்டுக்கொல்ல முடியுமா?' என்னும் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு, முன்பே சொன்னது போல் இடமில்லை.அடிபட்டு ஜெயிலில் இருக்கும் மாதவனுக்கு 'மேக்கப்' சிறிது சிரமம் எடுத்து செய்தது பாராட்டத்தக்கது.

முணுமுணுக்கிற அளவு கூட எந்த பாட்டும் இல்லை. ஹரிஹரன், ஷங்கர் மஹாதேவன் என்று பலரின் குரல் இருந்தும் எடுபடவில்லை.

படம் முடியும் சமயம் வரை, விட்டுக்கொடுக்காமல், கதையில் பயங்கர திருப்பம் வரவிருக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே இருந்தால்..., படமும் முடிந்து, சுபம் போட்டு விடுகிறார்கள்! (அடப்போங்கப்பா! )

இன்னும் பலமான கதையை எதிர்பார்த்த நாம் 'எதிரி'; நல்ல கதைகள் படம் பண்ணுபவர் என்ற இமேஜை கெடுத்த கே.எஸ்.ஆர். 'எதிரி'; இளம் ரசிக-ரசிகைகளை ஏமாற்றிய மாதவன் 'எதிரி'; டப்பா ம்யூசிக் போட்ட யுவன் சங்கர் ராஜா 'எதிரி'. இப்படி இந்தப் படத்துக்கு நிறைய எதிரிகள்!

April 04, 2009

திருவண்ணாமலைப் பயணம் (நிறைவுப் பகுதி)

கிரிவலம்


'திருவண்ணாமலை போய்ட்டு கிரி வலம் போகாம வருவாளோ? கட்டாயம் போய்ட்டு வரணம்' என்று பல நலம்விரும்பிகள் கூறியதன் பெயரில் மறு நாள் கிரிவலம் செல்லத் தீர்மானித்தோம்। மொத்தம் பதினாலு கிலோமிட்டர் நடை. 'திருப்பதியெல்லாம் முனகாமல் நடந்திருக்கேன், இது வெறும் ப்ளேயின்ஸ் தானே, ரொம்ப ஈஸி' என்று பெருமையடித்துக்கொண்டேன். 'அப்போ நீயே குழந்தையையும் தூக்கிண்டு நடந்துடு' என்றார் என் கணவர். உண்மை உறைக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தோம். 'பேசாம என் ஃப்ரெண்ட் ஷைலஜா சொன்ன மாதிரி, யாரானும் 'கிரி'ன்னு ஒரு ஆளை நிக்க வெச்சு, பிரதக்ஷணம் பண்ணிடலாம்' என்று பெரியதாய் ஜோக் அடித்ததை என் கணவர் ரசிக்கவில்லை.


கிரி என்றால் மலை.இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாய்க் கூறுகிறார்கள். மூலிகைகள் மண்டிக்கிடக்க, அதை வலம் வருதல், உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் பயக்கும். வேறு வழியின்றி, கடைசியில், காரிலேயே கிரிவலம் வரத் தீர்மானித்தோம். மறுநாள் காலை 'மனசே ரிலாக்ஸ்' ஒலி நாடாவை எடுத்துக் கொண்டு, கார் சகிதம் எங்கள் கிரிவலம் துவங்கியது.


கிரிவலம் வரும் பாதையில் சற்றே உள்ளடங்கி 'அடி அண்ணாமலை' கோவில் உள்ளது। உள்ளடங்கி இருப்பதாலேயே, அதிக ஆளரவம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. பத்து நிமிடம் கோவிலில் இருந்து விட்டு, மீண்டும் கிரிவலம் தொடர்ந்தோம். மலைவலம் வரும் பாதையில் பலர் பயண மூட்டையுடன் வலம் வந்து கொண்டிருந்தனர். எங்கள் காரின் கேசட்டில் இப்பொழுது தம்பதியர் ஒற்றுமையாய் வாழ்வதைப் பற்றி சுகபோதாநந்தாவின் போதனைகள் முழங்கிக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டே கடவுளைப்பற்றியும், இன்ன பிற நல்ல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு பயணித்திருந்தோம். எது எப்பொழுது எங்கே துவங்கும் என்றே தெரியாது. ஆதிபகவனான முழுமுதற் கடவுள், ஆதி அறியாதவன் என்றால், நாம் (குறிப்பாக கணவன்-மனைவி) துவங்கும் கருத்துவேறுபாட்டுத் தர்க்கங்களும் அதே போன்று தான். எங்கேயோ துவங்கி, எதிலோ முடிந்தது. எங்கள் சண்டைக்கு ஆதாரமே புரியாமல் என் பெண், மலங்க மலங்க விழித்தபடி இருந்தாள். கருத்துவேறுபாட்டின் பொழுது பேசுதல் மேலும் பிணக்கத்தை உண்டு பண்ணும் என்பது எங்கள் இருவரின் கருத்தும். அதனால் பேசாமலேயே வந்தோம். பக்தி மனநிலை பறந்தது. எரிச்சல் மேலிட, சுகபோதாநந்தா, 'எப்படி ஒற்றுமையாய் இருப்பது' என்று பேசிக் கொண்டிருந்த ஒலிநாடாவை பட்டென நிறுத்த மட்டும் முடிந்தது. கிரிவலம் ஏகத்துக்கு மௌன வலமாக மாறியது. தொலைப்பேசியில் என் அம்மாவிடம் பேசும்போது, காலையில் நடந்த தர்க்கம் நினைவில் வர, 'கிரிவலம் வந்தது ரொம்ப அமைதியா இருந்ததும்மா' என்று சொல்லி புன்னகைத்தேன்.


கனவா நனவா?


இரவு எத்தனை மணியானாலும் அன்று யோகி ராம்சூரத்குமார் ஆஸ்ரமம் சென்று விடுவது என்று முடிவு செய்திருந்தோம். இரவு எட்டு மணிக்கெல்லாம் நாங்கள் தங்கியிருந்த இடம், அமைதியாகி விடுகிறது. தெருவில் மனித நடமாட்டம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. ராம்சூரத்குமார் ஆஸ்ரமத்திற்கு முந்தைய தெருவில் 'சிவஷக்தி அம்மையார் ஆசிரமம்' என்ற பலகையைப் பார்த்து விட்டு அங்கும் செல்லலாமா என்று கேட்டு, கணவரின் முறைப்பைப் பரிசாய் பெற்றேன். 'இருக்கற ஆசிரமங்கள் போறும்' என்ற கறாரான பதிலுடன் வண்டியை ராம்சூரத்குமார் ஆஸ்ரமத்திற்கு முன் நிறுத்தினார். ஆசிரமக்கதவு மூடப்பட்டிருந்தது.சீக்கிரமே மூடிவிடுவார்கள் போலும் என்று முடிவு செய்து, வண்டியைத் திருப்பினோம். அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் "ஆசிரமம் போகணமா, இது பின் பக்கம், அடுத்த தெருவிற்கு போங்க அங்க திறந்திருக்கும்" என்றார். நன்றி கூறிவிட்டு, வண்டியை ரிவேர்ஸ் எடுக்க அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அவர் அந்தத் தெருவில் எந்த வீட்டிலும் நுழைந்த அடையாளம் தெரியவில்லை. எல்லா வீட்டு கதவுகளும் மூடியிருந்தன. எந்த வீட்டின் கேட்டின் ஒலியும் கேட்கவில்லை. எந்த வீட்டுக் கதவின் ஒலியும் கேட்கவில்லை. அந்த நீளத் தெருவில் எங்குமே அவர் தென்படவும் இல்லை. சரியாய் ஒரே நிமிடத்தில் சத்தமின்றி எங்கே போனார்? அப்பொழுது தான் உறைத்தது. அவர் எந்த வீட்டின் கதவையும், கேட்டையும் திறந்து கொண்டு வந்ததாகவும் தெரியவில்லை. இதெல்லாம் அதிசயம் என்று என்னால் நம்ப முடியவில்லை. சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து ஏதோ ஒரு வீட்டின் வாசற்புறத்தில் நின்று கொண்டிருக்கக்கூடும் என்று தோன்றி, கண்ணை அகல விரித்து எல்லா வீடுகளையும் பார்த்தேன். யாரும் வந்து போன அடையாளங்கள் இல்லை. நம்ப முடியாததாக இருந்தாலும், அவர் ஏதோ ஒரு வீட்டில், மின்னல் வேகத்தில் நுழைந்து தாளிட்டுக்கொண்டிருப்பார் என்று தான் என் மனம் வாதிடுகிறது. என் கண்ணுக்கு சித்தரோ, இறைவனோ தோன்றும் அளவு நான் இன்னும் புண்ணியம் செய்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


பயணம்


பயணங்களில் பிடித்தமான முதன்மையான விஷயம் என்னவென்றால் அது இலக்கையடைய நாம் பயணிக்கும் நேரம் தான்। வாழ்க்கைப்பயணம் முதல் சுற்றுலாப்பயணம் வரை, இலக்கை விட, பயணமே அதிக சுவாரஸ்யமானது। அடுத்த நாள் திருவண்ணாமலைப் பயணம் முடிந்து பெங்களூர் செல்லப் போகிறேன், என்ற வருத்தம் இருந்தாலும் நான்கு மணிநேரப் பயணத்தை எதிர்நோக்கியிருந்தேன். திருவண்ணாமலை வரும் பொழுது பாடிக்கொண்டு வந்த பாடல்களை மீண்டும் காற்றைக் கிழித்து கத்த வேண்டும். 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' சண்டை போடாமல் ரிலாக்ஸ்டாக கேட்க வேண்டும். மனம் முழுவதும் ஏகப்பட்ட கனவுகள். அன்று ரமணாஸ்ரமத்திலேயே உணவருந்தும் போது, 'நீங்கள் பெங்களூர் தானே செல்கிறீர்கள். இவரையும் அழைத்துச் செல்ல முடியுமா?' என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் கேட்க, 'ஹை ஐ அம் ரோலண்ட், கேன் ஐ ஜாயின் யூ இ·ப் யூ டோண்ட் மைண்ட்' என்று கேட்டுக்கொண்டு ஒரு வெளிநாட்டவர் நின்றிருந்தார். 'இல்லை நான் கத்திப் பாட வேண்டும். நீங்கள் வருவதில் ஆட்சேபம் உண்டு' என்றா சொல்ல முடியும்? 'மனித சேவையே மஹேசன் சேவை' என்று பலவாறாக மனதை சமாதானப் படுத்திக்கொண்டு, 'ஓ வித் ப்ளெஷர்' என்று அவருடன் பெங்களூர் பயணமானோம். பயணம் துவங்கிய பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டே வந்தார். சுவாரஸ்யமாக இருந்தது. ஹாலெண்டிலிருந்து வருவதாகக் கூறினார். மனைவியும், மகனும் பிறகு இந்தியா வரவிருப்பதாய் தெரிவித்தார். பளிங்கு போன்ற சுருக்கமற்ற முகம். அழகான சிரிப்பு, நல்ல கம்பீரமான தோற்றம் அதற்கேற்ற உயரம், எங்கள் வயதொத்தவராய் இருக்கக் கூடும் என்று கணக்கிட்டு, 'உங்கள் மகனுக்கு என்ன வயதாகிறது? பள்ளிக்குச் செல்கிறானா?' என்றேன். 'ஓ அவனா, அவனுக்கு பத்து வயதில் மகள் இருக்கிறாள். எனக்கு இப்போது வயது எழுவது' என்றாரே பார்க்கலாம்! வெளிநாட்டு நடிகர்களும் நடிகைகளும் நாற்பது வயதிலும் எவ்வாறு கதாநாயக வேடம் பூண்டு நடிக்க முடிகிறது என்று இவரைப் போன்றவர்களைப் பார்த்தால் விளங்கக்க்கூடும். மரியாதைக்கு அரை மணி பேசிக்கொண்டிருந்து விட்டு, 'பழைய ஹிந்திப்பாட்டுகள் கேளுங்கள் ரொம்ப மெலோடியஸ் ஆக இருக்கும்' என்று நானே கூறி, முகேஷின் குரலையும், ர·பியின் குரலையும் காரில் தவழவிட்டேன். கூடவே என்னால் அலற முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் மறையவில்லை.


முடித்து விடுவதாய் சொன்ன வேலைகளில் பத்து பர்சண்ட் கூட முடிக்காமல், தச்சர் அவரின் குடும்ப சகிதம் எங்கள் வீட்டில் சிரித்து புழங்கிக்கொண்டிருந்ததைக் கண்டதும் வருத்தம் கோபமாய் மாறியது। இருந்தாலும், "தச்சர் புண்ணியத்தால் திருவண்ணாமலை தரிசனம்" என்று எண்ணி அவரை கேள்விகேட்காமல் விட்டுவிட்டோம். அதன் பின் ஒரு மாதமாகியும் தொடர்ந்து கொண்டிருந்த வேலையுடன் அடிக்கடி வந்து போய்க்கொண்டு, எங்களின் ஆத்ம நண்பராகிவிட்டிருந்தார் தச்சர்.


[முடிந்தது]

April 01, 2009

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி 4)



[தொடர்ச்சி...]

ஆ: யோகி ராம்சூரத்குமார் ஆசிரமம்

விசிறி சுவாமிகள் என்று சில வருடங்கள் முன்பு பிரபலமான இவரை பலருக்கு நினைவிருக்கலாம। 1918 ஆண்டு, டிசம்பர் மாதம் காசிக்கு அருகே பிறந்தார். சிறுவயது முதல் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக இருந்து, பிற்காலத்தில் ரமண மஹரிஷியைத் தேடி தென்னிந்தியா வந்தார். தம் ஆயுள் முழுவதையும் ஆன்மீக விசாரத்திலும், பக்தியிலும், பக்தர்கள் குறை களைவதிலும் ஈடுபட்டு , 2001-ஆம் வருடம் திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்। செங்கம் சாலையிலிருந்து பிரிந்து சிறிதே தூரத்தில் விஸ்தாரமாக நிமிர்ந்து நிற்கிறது இவரது ஆஸ்ரமம்। தியான மண்டபம், கோவில் உட்பட எல்லாமே பூஞ்சோலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டிருந்தாலும் இன்றும் கோவிலையும் சுற்றுப்புறத்தையும் நன்றாகப் பாதுகாத்து வருகின்றனர். தியான மண்டபத்தில், நமக்குத் தெரிந்த பல ஆன்மீகவாதிகளின் புகைப்படங்கள் இருக்கின்றது. இரவு நேரமானதால் உடனே கோவிலுக்குச் சென்று புறப்பட வேண்டிய சூழ்நிலை. அதனால் தியான மண்டபத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை. கோவிலில் சிவலிங்க வழிபாடு நடக்கிறது. அதற்கு நேர் எதிரே, யோகியின் முழு உருவச்சிலை அமைத்திருக்கிறார்கள். கோவில் மண்டபம் மிகப்பெரியதாய் இருக்கிறது. நாங்கள் சென்ற பொழுது இருபது பேர் உட்கார்ந்து பஜனை செய்தவாறு, மங்கள ஹாரத்தியை தரிசித்த வண்ணமிருந்தனர்। பாய் அல்லது ஜமுக்காளாம் போடப்படுகிறது, அதில் பக்தர்கள் உட்கார்ந்தபடி இறைவனை தரிசிக்கின்றனர். மண்டபம் பெரியதாக இருப்பதால், இருபது பேர் உட்கார்ந்திருந்தது வெகு குறைவாய்த் தெரிந்தது.ஆசிரமம் முழுதும், பலகைகளில் மஹானின் போதனைகளை எழுதி வைத்துள்ளனர். அவை எல்லாம் இவர் எளிமையையும், அடக்கத்தையும் பறைசாற்றுகிறது. தன்னை 'பிச்சைக்காரன்' என்று சில இடங்களில் குறிப்பிடுகிறார். அவருடைய தந்தை என்று 'சிவனை'க் குறிப்பிடுகிறார். பலகைகள் எங்கும் 'த்வைத' தத்துவங்கள் தெரிந்தன. அத்வைதம் பற்றி அத்தனை கூறப்படவில்லை. பல கூற்றுக்களில் அவர் தந்தையாய் வரிக்கும் சிவனிடம் மிகுந்த பக்தி தென்படுகிறது.

"இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து போகும் பக்தர்கள் எல்லோரையும் என் தந்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்। இங்கு வந்த யாருமே வெறும் கையுடன் திரும்பிப் போக மாட்டார்கள்। அவர்கள் என் தந்தையின் அருளும், ஆசியும் அள்ளிச் செல்வார்கள். அவர்கள் வாழ்வில் அமைதியும், முன்னேற்றமும் அதிகரிக்கச் செய்வார்." என பொருள் பட ஒரு பலகை ஆஸ்ரம வாசலில் இருக்கிறது. விஞ்ஞானமா? மெய்ஞானமா? என்று வாய்கிழிய பேசும் எனக்கே இதைப் படித்ததும் ஆறுதலும், அமைதியும் சூழ்ந்துது.



அனுபவங்கள்



மூன்று நாட்களில் சில சுவாரஸ்யமான அல்லது மறக்க முடியாத அனுபவங்களும் சேர்ந்தது। ரமணாஸ்ரமத்தில் சரியாக காலை ஏழு மணிக்கு சிற்றுண்டி। சரியாக ஏழு மணிக்கு, குளித்துத் தயாராகி ஆஜாராக வேண்டும்। இல்லையேல் சிற்றூண்டியை எதிர்பார்க்க முடியாது. எங்கள்மகளை ஏழு மணிக்கு குளித்து தயாராகி இட்டுச் செல்வது என்பது சிரமாக இருந்ததால், காலைச் சிற்றுண்டியும், இரவுச் சாப்பாடும் வெளியே உண்ண நினைத்தோம். முதல் நாள் இரவே உணவுவிடுதியின் வேட்டையை ஆரம்பித்தோம்.நம் சென்னையை விடவும் ஏன் பெங்களூரை விடவும், தெருக்கள் மேடுபள்ளமின்றி நன்றாக போடப்பட்டிருந்தது. பல உணவு விடுதிகளின் வெளித் தோற்றங்கள் சாப்பிடத் தூண்டுவதாய் இல்லை. இரு முறை திருவண்ணாமலையின் முக்கியத் தெருக்களைத் சுற்றிக் களைத்த பிறகு 'சரவண பவன்- உயர்தர சைவ உணவகம்' என்ற பலகை கண்ணில் பட்டது.சரவண பவன் என்றால் உடனே நமக்கு சென்னை சரவணபவன் நினைவில் வந்துவிடுகிறது. எக்கச்சக்கமாய் கனவு வளர்த்த என் மனதை அடக்கி, இதற்கும் அதற்கும் பெயரளவு பொருத்தம் மட்டுமே என்று மூன்று முறை சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். சுத்தமாக இருந்தது. அதாவது....நிஜமாகவே சுத்தமாக இருந்தது. எங்களைத் தவிர ஹோட்டலில் யாருமே இல்லை.இதனால் அங்கிருந்த ஐந்து சர்வர்கள், உணவு தயாரிக்கும் செஃப், கல்லாவில் பில் போடுபவர்கள், என கிட்டத்தட்ட எட்டு பேர் எங்கள் மேஜையைச் சுற்றி நின்று கொண்டனர். லேசாக அரைக்கண்ணில் பார்த்தால் ஒருவரின் வேட்டி கூட வெள்ளையாக இல்லை. கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, 'வேட்டிக்கும் சுத்தத்துக்கும் சம்மந்தமில்லை' தறிகெட்டு ஓடும் எண்ணத்தை, கட்டையால் அடித்து நிறுத்தினேன். இந்த சர்வர்களில் ஒருவர் பிராமணர் போலும். இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது அவருக்குப் புரியவில்ல. அவர் எங்களிடம், 'வாங்கோன்னா, சூடா தோசை இருக்கு, இட்லி இருக்கு, பணியாரம் இருக்கு, என்ன சாப்படறேள்?' என்றார். அவரின் பேசும் தொனியும், எரிச்சலூட்டியத. இப்படிப் பட்ட பேச்சு வழக்கு தற்போது யாருமே உபயோகிக்காத ஒன்று. மேலும், பொதுவிடத்தில் சாதிகளையும் பிரிவினைகளையும் நினைவுப்படுத்தும் வகையில் பேச்சு இருப்பது தேவையற்றது. அவரவர் சாதிக்காரர்கள் பேசிப் பரிமாறினால் இரண்டு இட்லி அதிகம் சாப்பிடுவோம் என கற்பனை செய்துகொள்கின்றனர்.

ஆர்டர் செய்த உணவை ஐந்தே நிமிடத்தில் சுடச்சுட கொண்டு வந்தனர்। உணவின் தரம் சொல்லி மாளாது। அத்தனை ருசி!!! இப்படிப்பட்ட சாதாரண உணவகத்தில் இப்பேற்பட்ட ருசி எதிர்பாராத ஒன்று। மீண்டும் எனக்கு பாடம் "Looks are deceptive"।

நாங்கள் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் வேறொரு நபர் நுழைந்தார் அவரிடம் அதே சர்வர் "என்னப்பா என்ன சாப்படற? தோசை சூடா ஊத்த சொல்லவா? இல்லை வேற எதனாச்சும் வேணுமா?" என்றாரே பார்க்கலாம்! பொதுவிடத்தில் சாதி நினைவூட்டும் பேச்சுகளை 'மார்க்கெட்டிங் டெக்னீக்'கிற்காக உபயோகிக்கும் அவரை என்ன சொல்வது?

அடுத்த இரண்டு நாட்களும் விசுவாசமாய் அதே உணவகத்தில் எங்கள் தேவையை பூர்த்தி செய்துகொண்டோம். திடீரென அத்தனை சர்வர்களின் வேட்டிகளும் சற்றே சுத்தமாக இருந்தது மனபிரமையாக இருக்கலாம். ஆனால் கவனிப்பின் தரம் குறைந்தது. கடைசி நாளன்று, ஊசிப் போன தேங்காய்ச் சட்னியை பறிமாறும் அளவு சென்று விட்டது. நாங்கள் குறையைச் சுட்டிக் காட்டியவுடன், புதிதாய் அரைத்து, இரண்டே நிமிடத்தில் சாப்பிடக் கொடுத்து அதை ஈடுகட்டி விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

(அடுத்து பகுதியில் நிறைவு)

March 26, 2009

தேகம் யாவும் தீயின் தாகம்



உடலோடு உறவாடும் உனக்குத் தினம் தினம் மோகமுள்
உணர்வுகளால் உறவாட முயலும் எனக்கு தேகமெங்கும் முள்
பழுதுபட்ட தராசுகளால் முடித்துவைக்கப்பட்ட உறவுகள்
தவறான தீர்ப்புக்கு பலியான தூக்குக்கைதிகள்


உன் இதயம் நொறுங்கும் போதெல்லாம்
காதுகளை அறுத்துக்கொள்ளத் துடிக்கிறேன்
என்னையே உயிராய் உடலாய் உணர்வாய் சிந்தித்து
உன்னையே உருகுலைத்துக் கொள்ளும் பக்திக்கு
என்றேனும் நான் இரங்கக்கூடும்


இரங்கி இசைந்து இச்சைக்கு இணங்கி
உடலில் உயிரை நிறுத்தும் அந்த ஒரு கணம்
நொடிப்பொழுது தேகம் பூக்கப்போகும் அந்த ஒரு கணம்
நீ சிந்தப்போகும் புன்னகைக்கு விலையாக
என்னைத் துறக்கப்போகும் அந்த ஒரு கணம்
உனக்கும் எனக்குமான கணக்கு சரிசெய்யப்படலாம்
அதிவேகமாய் மேலும் கீழும் ஆடிய தராசு,
நியாயத்தை அன்று நிலை நிறுத்தும்.
அதுவரை...பொறுத்திரு.

March 20, 2009

copyright vs bloggers

நண்பர்களே
மகளிர் தினத்தையொட்டி ஷைலஜா என்னை எழுதத் தூண்ட விகடனின் நான் எழுதிய கட்டுரை இதோ (படங்கள் : உபயம் விகடன்)
http://www.vikatan.com/vc/2009/wmalar/shakthiprabha040309.asp

இதை அப்படியே வரிக்கு வரி எடுத்து tamilskynews என்ற தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். சுட்டி இங்கே:
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2593:2009-03-06-05-31-28&catid=57:2009-03-06-05-28-32&Itemid=124#JOSC_TOP

என்னுடைய படைப்பில் 'நன்றி: விகடன்' என்ற குறைந்தபட்ச acknowlegement கூட இல்லை। எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை.What do u call this? Plagiarism?

இதே போல் அதே பகுதியில் படைக்கப்பட்டிருக்கும் இன்னும் சிலரது படைப்புகளும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன, few with credits and few without due credits to vikatan and / or information to the writer।

இதைப் பற்றி கேட்டெழுதி "blogger- jeeves" தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்। Thanks jeeva।

I condemn this.

March 02, 2009

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி -3)

திருவண்ணாமலையின் தனித்துவம்


என் கவனத்தை ஈர்த்த மற்றொன்று, திருவண்ணாமலையைச் சுற்றி பல நபர்களின் (அல்லது பல சுவாமிகளின்) ஆசிரமங்கள் இருப்பது. இதைப் பற்றி ஏதும் அறியாமலே சென்ற நான், இனிய அதிர்ச்சிக்கு உள்ளானேன. 'நினைக்க முக்தி திருவண்ணாமலை' என்று இதற்குத் தான் சொல்லியிருக்கக் கூடும். ஆசிரமம் என்றால் நமக்கு உடன் நினைவிற்கு வருவது சித்தர்கள். திருவண்ணாமலையைச் சித்தர் பூமி என்கிறார்கள். இன்றும், பல சித்தர்கள் கிரிவலம் வரும் மலையிலும், மலையைச் சுற்றியும், திருவண்ணாமலையிலும் வாழ்வதாய்ச் சொல்கின்றனர்.இவர்கள் பார்ப்பதற்கு விசேஷமாய்த் தெரியாததால், நம்மால் பாகுபடுத்த முடியவில்லை.


'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பதை மனிதர்கள் சமயத்தில் மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றனர். திருவண்ணாமலையைச் சுற்றி ஏகப்பட்ட பேர், காவியுடை அணிந்த சித்தர்களைப் போல் தோற்றமளிக்கும் சாமியார்கள். சடாமுடியுடன், சடாமுடியில்லாமல், திருநீரணிந்து, திருநீரணியாமல், உத்திராட்ஷம் அணிந்து, உத்திராட்ஷம் அணியாமல், இப்படிப் பல விதத்தில் உலா வருகின்றனர். ஒவ்வொரு ஆசிரமம், ஆசிரமம் போன்ற குடில் அல்லது கோவில்கள் வாசலிலும் குறைந்தது இருபது சாமியார்கள், 'சிவனே' என்று உட்கார்ந்திருக்கிறார்கள். சரியாக ஆசிரமச் சாப்பாட்டு நேரத்திற்கு உணவு தட்டைத் தூக்கிக் கொண்டு, உணவு வாங்கி உண்கிறார்கள். அதே வாசலில் மீண்டும் தஞ்சம் அடைகின்றனர். இதில் சிலர், எந்நேரத்திலும் யாரிடமும் யாசகமும் பெறுவதற்குத் தயங்குவதில்லை. 'சிவனே' என்று உட்கார்ந்திருக்கும் காவியுடை அணிந்த சாமியார்களில் யார் நிஜமாகவே 'சுயத்தை' நினைத்து நிஷ்டையில் அமர்ந்திருக்கின்றனர் அல்லது அமர முயற்சிக்கின்றனர் என்பது கேள்விக்குறியே. ஆசிரமத்திற்கு வருவோர் போவோரிடமும் யாசகம் கேட்கத் யாருமே தயங்குவதில்லை.யாசகம் கேட்பதற்கு இந்த ஸ்தலத்தில் இதுவே சரியான உடை என்று தேர்ந்தெடுத்து, அதன் மதிப்பு தெரியாது அணிந்து, யாசகம் பெறும் சாமான்யர்களும் இக்கணக்கில் இருக்கலாம்.


இதே போல் உடையணிந்து பிள்ளையார்கோவில் முன் ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். தெரியாத்தனமாய் நாங்கள் காரிலிருந்து இறங்கி, சாமி கும்பிடச் சென்றோம. செருப்பை பார்த்துக் கொள்கிறேன் என்று தானே வலிய வந்து எங்கள் காலணிகளின் அருகே அமர்ந்து கொண்டார்.பிரார்த்தனை முடித்து வெளியே வந்ததும், தானே காலணி அணியச் சென்ற என் பெண்ணை, தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக, அவளை ஒரு முரட்டுப் பிடி பிடித்து, இவர் காலணி அணிய உதவினார். அவள் மிரண்டே விட்டாள். உருட்டி, மிரட்டி, அவளைக் காலணி அணியச் செய்தவுடன், எங்களிடம் சில்லறை கேட்டார். நியாயமானது தான். ஏதேனும் ஒரு தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட நினைக்கும் அவரை மனதில் பாராட்டிய படி, மூன்று ரூபாய் கொடுத்தோம் (அதுவே அதிகம் என்றெண்ணி). அவர் உடனே 'இதெல்லாம் பத்தாது சாமி, ஒரு செட் இட்லியே ஏழு ருபாய் ஆகிறது. இன்னும் ரெண்டுரூபா தா" என்றதும் பதில் பேசாது என் கணவர் இன்னும் இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு நகர்ந்தாலும், எங்களுக்கு ஏனோ இச்சம்பவம் கசப்பாய் நினைவில் தங்கி விட்டது. பொதுவாகவே தெருவில் யாசகம் கேட்போர் மீது என் கணவருக்கு நம்பிக்கையில்லை. கையும் காலும் மற்ற உறுப்புகளும் சரியாய் இயங்கும்போது எதற்கு யாசகம் என்று, கொடுக்கப் போகும் என்னையும் தடுத்து விடுவார். திருவண்ணாமலையில் தங்கிய மூன்று நாளும் எத்தனையோ காவியுடை மனிதர்கள் யாசகம் பெற வருவதும், அதில் வெகு சிலருக்கே யாசகம் வழங்குவதுமாய் பொழுது போயிற்று. எனினும் நிஜ சித்தர் யாராவது நம்மிடம் கேட்டு, இல்லையென்று மறுத்துவிட்டோமோ என்ற ஒரு தவிப்பு என்னிடம் இருந்தது.


காவியுடையணிந்து ஆசிரம வாசலில் அமர்ந்திருந்த சிலர், நிலை குத்திய பார்வையுடன், ஆசிரம உணவு உண்டு, மீத நேரத்தில் வெறித்த பார்வையுடன், வெளியே, தெருவில் அமர்ந்திருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் சித்தராக இருக்கலாம் என்று நானே சொல்லிக்கொண்டேன். 'வாழ்வை வெறுத்துத் துறந்த அல்லது விரட்டியடிக்கப் பட்ட சாதாரண பிரஜையாகவும் இருக்கலாமே' என்று உடனே என்னுடைய குதர்க்க மூளை, தன் பணியை செவ்வனே நிறைவேற்றியது.


ஏனைய ஆசிரமங்கள்


அ. சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம்


முன்பே குறிப்பிட்டது போல், திருவண்ணாமலை முழுதும் நிறைய அசிரமங்கள் சூழ்ந்துள்ளன. அதில் குறிப்பிடும்படியாக உள்ள ஆசிரமம் 'சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம்'.செங்கம் சாலையிலேயே, ரமணாஸ்ரமத்திற்கு சற்று முன்பே அமைந்திருக்கிறது। இங்கு சமாதியில் சிவலிங்கத்தை நிர்மாணித்து வழிபாடு நடத்துகின்றனர்। ஆஸ்ரமத்தைச் சுற்றி பல சுவாமிகளின் சமாதிகள் இருக்கின்றன। ரம்யமான சூழ்நிலை। அன்னதான மண்டபம், மற்றும் தாமரை பீடத்துடன் கூடிய தியான மண்டபம் அமைத்திருக்கின்றனர். இதைத் தவிர, 'ஞானத்தாய் உமாதேவியார்' என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் இரண்டு ( இக்கட்டுரை எழுதி இரண்டுவருடம் ஆகியபடியால், இப்பொழுது ஏறக்குறைய ஐந்து) வருடம் முன்பு இயற்கை எய்தியவர் என்றும், பல ரிஷிகள் தெய்வங்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவார் என அறிவிப்புப் பலகை கூறுகிறது. சேஷாத்ரி சுவாமிகள் இவர்கள் வாயிலாக அருள் வாக்கு சொன்னதாகவும் கூறப்படுகிறது.


1870 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள், வழூர் கிராமத்தில் சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். பிறந்ததிலிருந்தே, தெய்வ கடாட்சம் மிகுந்து காணப்பட்டார். அவர் தொட்டது துலங்கியது। திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இம்மகான், பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர்। இவரை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், ஆதிசங்கரரின் அவதாரம் என்றும் சிலர் கூறுகின்றனர்। அவர் வாழ்ந்த காலத்தில் பலர் அவரை மனநிலை சரியில்லாதவர் என்று இகழ்ந்திருப்பதாகவும் செய்தி இருக்கிறது। எனினும், அவரின் ஆழ்ந்த செயல்களுக்குப் பின், பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ரமணர் இவரை பராசக்தியின் வடிவம் என்று குறிப்பிட்டதாகக் கேள்வி. இவர் 1929 ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் இறையெய்தினார். இன்றும் கூட, இவர் நாமம் உச்சரித்தாலே, பக்தர்களுக்கு பல வகையில் துணை புரிந்து, கஷ்டங்களையும் சோதனைகளையும் நீக்குகிறார் என்று கூறுகின்றனர்.




(இன்னும் வரும்)

February 10, 2009

ஹாய் பாலா, இரண்டு நிமிடம் ப்ளீஸ்!

வலைப்பதிவுகளிலிருந்து, தெருமுனை அரட்டைக் கச்சேரி வரை தமிழ்மக்களின் நாவில் சரளமாய் பேசப்படும் தலைப்பு "அகோரி / நான் கடவுள்'.பேசப்படும் நபர் பாலா.அவரைக் கண்டு களித்த பலர் பாலாவைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கி, புகழோ புகழென புகழ்கின்றனர்.பாலாவின் படைப்பு 'விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது' என்று பலர் கூறக்கூடிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.He is completely submerged in hero- worship.

நாலே நாலு படங்கள் பண்ணியிருக்கிறார். நான்கும் வெற்றிப்படங்கள். பாராட்டப்பட வெண்டிய விஷயம். (இங்க கொஞ்சம் கை தட்டுங்க)



சேது - நந்தா - பிதாமகன் - நான் கடவுள்

ஒன்றை மிஞ்சும்படி இன்னொன்று. படம் பார்த்த யாரும் சிரித்தபடி வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு படம் எடுக்கிறார். கொடுத்த காசுக்கு எப்படி எல்ல்லாம் அழ வைக்க முடியும், எவ்வளவு pessimism காண்பிக்க முடியும், எத்தனை அழுகிய / பழுதுபட்ட இடங்களை உயிரூட்ட முடியும், என்று, தன்னுள் தானே ஆழ்ந்து, இன்னும் இன்னும் கீழே என நோண்டித் தோண்டிப்பார்க்கிறார்.


ஒரு நாணயத்தின் சொத்தையான துருபிடித்த பக்கத்தையே படம் பிடிப்பேன் என அடம்பிடித்து, அதனை ஆராய்ந்து அதன் நெளிவு சுளிவுகளை மனசில் வாங்கி, அடி வாங்கிய நாணயத்தின் மன நிலையை படம் பிடிப்பது மட்டுமே என் முழு நேர இயக்குனர் பணி என்று முடிவெடுத்திருக்கிறாரா? இந்த முடிவு அவரை எங்கு கொண்டு போகுமோ?! (national award? well I wish with all my heart it does, it should and given all his devotion, may be it will) (மறுபடியும் யோசிக்காம கை தட்டிடுங்க)




இப்படிப் பட்ட படங்கள் மட்டுமே சாதிக்க முடியும. இதைச் செய்தால்தான் நான் சாதனையாளன் வரிசையில் இடம் பெறூவேன். இப்படி படம் இயக்கினால் தான் நம்மால் முத்திரை பதிக்க முடியும், என்று தன்னைச் சுற்றி குறுகிய வட்டம் வரைந்திருக்கிறார் பாலா என்று எண்ணியிருந்தேன். சில பல நேர்காணல்களை படிக்க நேர்ந்த போது, the man comes clean as someone who tells a tale which he could relate to, not just something which takes him to the limelight.அவருக்கு இப்படிப்பட்ட பச்சாதாபங்களை உயிரூட்டுவது எளிதாய் அமைந்துவிடுகிறது. தன்னிடம் இருப்பதைத் தான் ஒருவன் மற்றாவனுக்கு பகிர்ந்து மகிழ முடியும். அப்படியெனில் பாலாவிடம் மண்டி இருப்பது சமூகத்தின் மீது ஒருவித ஆதங்கம், கோபம், பச்சாதாபம், வெறுப்பு, இவை மட்டும் தான் என கணக்கு போட்டு விடுவது எளிது.



'உனக்கு என்ன வந்தது? இரண்டணா பெறாத உபயோகமற்ற உன் கருத்துக்கள் எவர் மதிப்பார்கள்.' என்று உள்ளிருந்து ஒருத்தி கதறினாலும், பாலாவின் எண்ணம் இயக்கம் எழுத்து பாராட்டப் படுகிறது என்று சமூகத்தின் அத்தனை மூலையில் இருந்து குரல் வந்தாலும், I cant help feeling sad for him. பாலா மிகுந்த திறமைசாலி என்பதிலோ கலைத்திறன் மிக்கவர் என்பதிலோ வெள்ளித்திரையில் மின்னுவதற்கு சரக்குள்ள மனிதர் என்பதிலோ எள்ளளவும் ஐயம் இல்லை. அத்தனைத் திறமையையும் ஆக்கத்தையும், இயலாமையின் வெளிப்பாட்டிலேயே செலவிட்டுவிடுகிறாரே என்பது தான் என் ஆதங்கம்.



விளிம்பு நிலை மனிதர்களோ அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது சிறுபான்மையினரின்
கதைகளையோ பாலாவைப் போல் யாராலும் இத்தனை நயத்துடனும் ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் வெளிக்கொணர முடியாது। இவர்களைப் பற்றிய விழிப்பை பாலா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஒப்புக்கொள்கிறேன். குற்றம்புரிந்து சிறைச்சாலை செல்லும் ஒருவனின் கேள்விக்குறியான எதிர்காலம், அதையும் தாண்டி அவனுள் சொல்லப்படாத சில ஏக்கங்கள், காதலின்தோல்வியை ஏற்க முடியாது மனநோய்க்கு இறையாகும் இன்னொருவன், சமூகத்தின் பார்வையில் ஏளனத்திற்கு உள்ளான ஒருவனின் கதை, உணர்வுகள், அவனுள் உறங்கும் நட்பின் வெளிப்பாடு. எல்லாம் சரி தான். ஆனால் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொணர்ந்த பிறகு,பாலா செய்வது, அந்த கதாபாத்திரத்தின் உயிரை உணர்வை கொன்றுவிட்டு தன் இயக்குனர் திறனுக்கு வெற்றி சூட்டிக்கொள்கிறார். நான் கேட்பதெல்லாம் இது தான். இப்படிப் பட்ட சமூகத்தில் கரும்புள்ளியாய் திகழும் இவர்களின் கதைகளை படம் பிடிக்காதீர்கள் என சொல்லவரவில்லை. அப்படி வெளிச்சத்திற்கு கொணர்ந்த பலரின் கதையில் புதிய உதயத்தை உருவாக்கி ஒரு புன்முறுவலுடன் எங்களை அனுப்பி வையுங்களேன் பாலா?! ஏன் உங்களுக்கு சோகத்திலும் நம்பிக்கையற்ற சூன்யத்தில் உழல்வதும், உழலவைப்பதும் மட்டுமே பிடித்திருக்கிறது? கடிவாளம் கட்டிக்கொண்டு ஒரு கோணத்தை மட்டுமே ஏன் சிந்திக்கிறீர்கள்? அது தான் எதார்த்தம் என்றால் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான்கில் ஒரு படத்திலாவது இப்படி ஒரு உதயத்தை எழுச்சியை நீங்கள் காட்டியிருந்தால் அது தான் எதார்த்தம். Even probability theory fail to give hand to your reality.

சமுதாயத்திடமிருந்து நாம் பெற்றுவரும் கல்விக்கும், வளர்ச்சிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு திரும்ப ஏதேனும் செய்யவேண்டிய பொறுப்பில் இருக்கிறான். அவனது உழைப்பு, வரிப்பணம், சேவை இத்யாதியைத் தவிர குறைந்தபட்சம் பிறருக்கு சில நல்ல செய்திகள், வலிமையுட்டும் வார்த்தைகள் பகிரதல் வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது। சாதாரண run-in-the-mill தனி மனிதனுக்கே இந்த நியதி என்றால் தான் சொல்லவரும் செய்திகள் உலகம் முழுதும் பார்க்கப்படுகின்றன என்று தெரிந்த இயக்குனர்களுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது.நான்கில் ஒன்றேனும் வித்தியாசமான அணுகுமுறையுடன் திகழ்ந்திருக்கலாம் என்பது தான் என் தனிப்பட்டக் கருத்து.
குறிப்பிட்ட இயக்குனர், காதல் தோல்வி அல்லது காதல் சம்பந்தப்பட்ட படங்கள் எடுத்தால், அவனின் சரக்கு தீர்ந்து விட்டது, he gets boringly repetitive என்று பத்திரிகைகள் முதல் டீக்கடை அரட்டை அடிப்போர் வரை சாடுகிறோம்। மசாலாப் படங்கள் மட்டுமே எடுத்து, punch dialogue என்ற புதிய பெயரில் நம்மை வாட்டும் இயக்குனர்களுக்கு "ரசனை போதாது" என்று பட்டம் கட்டி, மட்டம் தட்டிவிடுகிறோம்। அப்படி இருக்க, வித்தியாசமாய் இருக்கிறது என்பதற்காகவோ, யாரும் யோசிக்க முடியாத கோணங்களில் சிந்திக்கிறார் என்பதாலோ பாலாவிற்கு நான் மேதை பட்டம் கொடுக்க தயாராக இல்லை. He should watch he doesn't get repetitively negative in approach.


வட்டதை விட்டு வெளியே வந்து 'art films need not be broody' என்ற ரீதியில் படம் எடுத்தாலும் கூட இவருக்கு எதிர்காலம் இன்னும் பிரகாசமாய் இருக்க வாய்ப்புண்டு। அதை முதலில் அவரே ஆழமாய் நம்ப வெண்டும்। தன்னுள் அமிழ்ந்து இருக்கும் கலைக்குக் கருப்பு வர்ணம் மட்டுமே பூசி பரிசளிப்பதை விடுத்து, கலைக்கு கலைநயத்துடன் வேறு வண்ணங்கள் சேர்த்துப் பாருங்களேன் பாலா!? குறைந்தது ஒரு கருப்புப் படத்திற்கு ஒரு வர்ணப் படம் ஃப்ரீ என்ற ரீதியிலாவது தொடருங்கள்। உங்களின் வண்ணங்களற்ற உயிரற்ற உணர்வுகளின் ஓவியப் பரிசளிப்பு எங்களுக்கு பல நேரங்களில் மனவருத்தத்தையும், ஆழ்ந்த துக்கத்தையுமே மட்டுமே தருகிறது।

அதைப்பற்றி ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை பாலா?

பாலா இன்னும் 4 படங்கள் இப்படியே செய்தார் என்றால், I need to conclude
'He lacks confidence to approach anything vibrantly।'
Not that my ideas matter to him। Even remotely.